இதுவரை…

சென்னையில் நீலாங்கரைப் பகுதியில் வசிக்கும் யாஷினி எனும் சுட்டிப் பெண் தனது பெற்றோருடனும் டெல்லியிலிருந்து வந்திருந்த தனது உறவினர்களுடனும் மாமல்லபுரத்திற்குச் சென்று அங்கிருக்கும் சிற்பங்களைப் பற்றி அறிந்து கொள்கிறாள். கடந்த முறை ஒற்றைக்கல் ரதங்களைப் பற்றி அவர்களோடு நாமும் தெரிந்துகொண்டோம். இதன் பிறகு மாமல்லபுரத்திலுள்ள திறந்த வெளி பாறைப் புடைப்புச் சிற்பங்களைக் கண் கொள்ளாக் காட்சியாக காணச், சென்றிருக்கும் அவர்களோடு நாமும் பார்க்கலாமா?

வாங்க போகலாம் பிள்ளைகளே!

இனி…

             மாமல்லபுரம் சிற்பங்களைப் பற்றியெல்லாம் நிறையப் பார்க்கிறோம். அவ்வூரின் பெயர் காரணம் தெரியுமா சுட்டிகளே?! மல்லர்களை எதிர்த்துப் போரிட்டு, தனது தோள் வலிமையை மெருகேற்றிக் கொள்ளும் நரசிம்மவர்ம பல்லவனின் சிறப்புப் பெயராலேயே அவ்வாறு அழைக்கப்படுகின்றது. இங்குள்ள சிற்பங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்னவென்றால், திறந்தவெளி பாறைப் புடைப்புச் சிற்பங்கள் தான். புராணக் கதைகளிலிருந்து எடுக்கப்பட்ட சம்பவமான அர்ஜுனன் தவம் அல்லது பகீரதன் தவம் என்று குறிக்கப்படும் பெருந்தவப் பாறைச் சிற்பமானது, உலகிலேயே மிகப் பெரிய திறந்தவெளி பாறைப் புடைப்புச் சிற்பங்களாக நமது தமிழ்நாட்டில் சென்னையின் வங்கக் கடலோரத்தில் இருக்கிறதென்றால் மகிழ்ச்சியான விஷயம் தானே?!

          100 அடி நீளமும் 40 அடி உயரமும் கொண்ட இச்சிற்பம் பலதெய்வ மனித உருவங்களைத் தன்னுள் கொண்டுள்ளது. இருபெரும் பாறைகளில் இந்த சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கிறது. நடுவிலுள்ள பாறைப் பிளவில் ஒரு சிறிய வெளியை மையமாகக் கொண்டு, ஒரு நதி பாய்ந்து வரும் அமைப்பாக இரண்டு புறமுமுள்ள பாறைகளில் எழில் வாய்ந்த சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆகாயத்தில் தோன்றி, பூமியை நோக்கிப் பாய்ந்து, அதையும் தாண்டிக் கீழே ஊடுருவிச் செல்லும் நதியாக இப்பிளவை, சிற்பி அகக்கண்களால் கண்டு படைத்திருக்க வேண்டும். இதனால் மூவுலகையும் இணைக்கும் இழை போல இந்தச் சிற்பத் தொகுதி அமைந்திருக்கிறது. இதனை நீங்களும் உங்கள் மனதில் கற்பனை செய்து பாருங்களேன்! அற்புதமாக இருக்கும்.

       இத்தொகுதியில் சுமார் 150 உயிர் படைப்புகளைக் கொண்டு, விண்ணில் வாழும் தேவர்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள், சித்தர்கள் ஆகியோர் இருப்பது போலவும், காடுகள், மரங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப வாழும் உயிரினங்கள் போன்றவையும், கோவில்கள் மற்றும் அங்கு தொழுது கொண்டிருக்கும் பக்தர்கள், பகல் பூஜைகளை முடித்து தொடர்ந்து செய்ய வேண்டிய சடங்குகளை செய்து கொண்டிருக்கும் முனிவர்கள், நீரோட்டத்தில் திளைத்தபடி இருக்கும் நாகர்கள் போன்ற உருவங்களும் இந்த சிற்பங்களுக்கு உயிரோட்டங்களைக் கொடுக்கின்றன. கணங்கள் அருகிலிருக்க கம்பீரமாக நிற்கும் சிவனும், தொழுது கொண்டிருப்பவரின் தோற்றமும் தான் இந்த சிற்பத் தொகுதியின் உயிர்நாடி என்று கூடச் சொல்லலாம். கங்கை பாய்வதை சிற்பியின் கைவண்ணத்தில் மிகத் துல்லியமாக வடித்திருக்கிறார்.

mahabalipuram 5 1

          பல்லவர்கள் இந்த பாறைகளின் மீது நீரைத் தேக்கி வைக்க ஒரு பெரிய தண்ணீர் தொட்டியை கட்டி இருந்ததாகவும், அதிலிருந்து நீர் பாயும் வழிகளை வகுத்திருந்ததாகவும், அதன் வழியாகப் பாறைகளின் நடுவிலிருக்கும் இழை மூலம் நீர் பாய்கையில் சிற்பத்திற்கு உயிரிருப்பது போல அமைந்திருந்ததாகவும் சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

         அக்காலங்களில் எல்லாச் சிற்பங்களும் வண்ணங்கள் தீட்டப்பட்டிருந்ததால் முழு வண்ணத்தில் சிற்பத்தின் மகிமை இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இந்த சிற்பங்களில் தவம் செய்பவர் குறித்து இரு வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன. புராணங்களில் சொல்லப்பட்ட கதையான, அர்ஜுனன் ஆயுதம் வேண்டிப் புரியும் தவம் அல்லது பகீரதன் கங்கையைக் கொண்டு வரச் செய்யும் முயற்சியென இரு வேறு கருத்துக்கள் உள்ளன. இருவரையுமே குறிக்கும் படியாகவும் இருக்கலாமென்ற கருத்தும் உள்ளது.

mahabalipuram 5 2

        இன்னும் பிற சிற்பங்களாக, பாறையின் கீழ்ப் பகுதியில், விஷ்ணு கோவில் ஒன்றையும், சில பக்தர்களையும் காணமுடிகிறது. கோவில் அருகில் நீர் பாயும் பாறைப் பிளவுக்கு பக்கத்தில் இருக்கும் நான்கு பேரில் ஒருவர் சாந்தமான முகத்துடன் ஈரத் துணியை பிழிந்து கொண்டிருப்பது போலவும், மற்றொருவர் நீர்க் குடத்தைத் தோளில் சுமந்த நிலையில் புன்னகைக்கும் முகத்துடனும், இன்னும் இருவர் நீராடி முடிந்த பின்னர் ஈரத்துணியுடன் ஒட்டியிருக்க, தொடர்ந்து மற்ற சடங்குகளை மேற்கொள்ளும் படியும் அமைந்திருக்கிறது. அருகே மற்றொருவர் கூட்டிய கைகளின் விரல்களின் ஊடாக சூரியனை நோக்கித் தொழுது கொண்டிருப்பது போலவும், இன்னொருவர் நீரைத் தொழுது கொண்டிருப்பது போலவும் சிற்பங்கள் அமைந்துள்ளன.

         ஒரு காட்டின் காட்சியே இங்கு இயற்கையான முறையில் செதுக்கப்பட்டிருக்கிறது. அங்கு வாழ்கின்ற மனிதர்கள் தங்களது வேலைகளைச் செய்து கொண்டிருக்க, வேடுவர்கள் வேட்டையில் ஈடுபட்டிருப்பதைப் போலவும், சில வனவாசிகள் தங்களது ஆயுதங்களை ஏந்தியபடி பாறைப் பிளவினை நோக்கிச் செல்வது போலவும், அவர்களது உடை அலங்காரங்கள் தோலால் தரித்தது போல அமைந்து, தலையில் குடுமி கொண்டு மீசை முகத்துடன் காணப்படுகின்ற சிற்பங்களாக உள்ளன. இவர்களில் ஒருவர் தாடி வைத்தது போலவும், மற்றொருவர் தூக்கு ஒன்றில் எதையோ சுமந்திருப்பது போலவும், இன்னுமொருவர் பலாப்பழத்தைத் தோளில் சுமந்திருப்பது போலவும், தமது வேட்டை முயற்சிகள் முடித்துவிட்டு அதன் பலனாக இவற்றைக் கையிலெடுத்து வருவதைப் போலுள்ள சிற்பங்களாக சிறப்பாக உள்ளது.

            நம் வீடு அமைந்திருக்குமிடம் ஒரு காலங்களில் வனங்களாக இருந்திருக்கலாம். அங்கு விலங்குகளும் வாழ்ந்திருக்கும். அழிந்து போன காடுகள் எண்ணிலடங்காதவை குழந்தைகளே! அவற்றையெல்லாம் நம் கண் முன் நிறுத்துவது போல, இங்குள்ள வனம் பல்வேறு மர வகைகளுடன் உயிரோட்டம் உடையதாக உள்ளது. ஒரு பலா மரத்தின் மீது கருங்குரங்கு அமர்ந்திருப்பது போலவும், காட்டில் பல சிங்கங்களும் புலி வகைகளும் அவற்றின் குட்டிகளும் காட்டு மான்களும் அழகாக அமைந்திருக்கிறது. இவை மட்டுமல்லாமல், காட்டுப்பன்றி, முயல், நான்கு குரங்குகள், ஒரு சேவல், இரு காட்டுக் கோழிகள், வாத்துகள் போன்றவையும் மிக இயற்கையாக உள்ளது.

        இயற்கையான பாறைப் பிளவு இந்த பாறையை இரண்டாகப் பிரிப்பது போல இருப்பதால் அந்தக் காலங்களில் நீர் இதன் வழியாக பாய்ந்திருக்கலாம் என்பதும் யூகமாக இருக்கிறது. இது கங்கையைக் குறிப்பதாகவும் இருந்திருக்கலாம். எல்லா உயிரினங்களும் இந்தப் பிளவை நோக்கியிருப்பதைக் காணும் போது, கங்கை பாய்வதை யாவரும் பக்தியுடன் பார்ப்பது போலவும் இருக்கிறது. இவ்விடத்தை எவ்வளவு நேரம் நின்று வேண்டுமானாலும் ரசிக்கலாம். ரசிப்போம். கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கோங்க சுட்டிகளே!

                  இன்னும் தொடர்ந்து பார்க்கலாம். காத்திருங்க!

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments