ஆதனின் பொம்மை

ஆதனின் பொம்மை – இளையோர்  நாவல்

ஆசிரியர்:- உதயசங்கர்

வெளியீடு:- வானம் பதிப்பகம்

விலை ₹80/-

ஆசிரியர் உதயசங்கர் எழுதிய ‘புலிக்குகை மர்மம்’ எனும் நாவலின் கதாநாயகனான  காப்டன் பாலுவே, இதிலும் நாயகன். கோவில்பட்டியிலிருந்து கீழடியிலிருந்த மாமா வீட்டுக்கு வரும் பாலுவுக்குக் கூட விளையாட யாருமில்லை என்பதால், பொழுது போகாமல் போரடிக்கிறது.

வாசிப்புப் பழக்கமுள்ள அவனுடைய மாமா பெண் மதுமிதா, வீட்டில் சிறு நூலகம் வைத்திருக்கிறாள். பொழுது போகவில்லையென்றால், புத்தகம் வாசிக்கலாம் என்கிறாள். ஆனால் அவனுக்குப் புத்தகம் வாசிக்கும் பழக்கமே இல்லை. பாலுவை விட மதுமிதா என்ற பெண் பாத்திரத்தைப் புத்திசாலியாகவும், மிகச் சிறப்பாகவும் ஆசிரியர் படைத்திருக்கிறார். 

மாமாவுடன் தென்னந்தோப்புக்குப் போகும் பாலுவுக்குப் பொம்மையின் உருவத்துடன் இருந்த, மண் பானை ஓட்டுச்சில் ஒன்று கிடைக்கிறது.  அதிலிருந்து கதை துவங்கி, கீழடியின் கண்டுபிடிப்புகள், சிந்து சமவெளி நாகரிகம் என விரிகின்றது, நாடோடிகளான ஆரியரின் வருகையால் சிந்து சமவெளி மக்கள் அங்கிருந்து துரத்தப்படுகின்றனர். அவர்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து, முடிவில் தெற்கு நோக்கி நகர்ந்து, வைகை ஆற்றங்கரையில், புது நகரை நிர்மாணிக்கின்றனர்.    

கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள், 2600 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று ஆய்வு முடிவுகள் நிரூபிக்கின்றன.  சிந்து சமவெளி நாகரிகம் திராவிடர் நாகரித்துடன் ஒத்துப் போவதையும், ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.  இந்த வரலாற்றுச் செய்திகளை இந்நாவல் மூலம் நம் இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

நம் தமிழ் மண்ணின் பழம் பெருமைகளையும், நாகரிக மேன்மையையும், வரலாற்று ஆய்வு முடிவுகளையும், கதை வடிவில் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் விவரிக்கும் இளையோர் நாவல்.

https://www.commonfolks.in/books/d/aadhanin-bommai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *