இதுவரை:

 நான்கு குழந்தைகளுக்கு ஒரு மந்திரக் கம்பளமும் ஃபீனிக்ஸ் பறவையும் கிடைக்கிறது. அதன் மூலமாக அவர்கள் பல சாகசங்களைப் புரிகிறார்கள். ஒரு குடும்பத்திற்கு உதவியும் செய்கிறார்கள். இந்த விஷயங்கள் எதுவும் அவர்களது வீட்டினருக்குத் தெரியாது.

இனி..

 அத்தியாயம்-6

ஃபீனிக்ஸ் பறவைக்குத் திடீரென்று தன் சொந்த ஊருக்கு போக வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது. “இந்தக் கம்பளம் பெர்ஷியா நாட்டில் தயாரானது. எனக்கும் அதுதான் சொந்த ஊர். உங்க கூடவே ரொம்ப நாள் இருந்துட்டேன்; இப்ப எங்க ஊருக்குப் போயிட்டு வரணும்” என்றது.

“நாங்க கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக இன்னிக்கு எங்க அத்தையோட ஊருக்குப் போறோம்.. அவங்க எங்களை ரயில்வே ஸ்டேஷன்ல வந்து கூப்பிட்டுக்குவாங்க.. நாங்க போயிட்டு வர்றதுக்குள்ள நீயும் உங்க சொந்த ஊருக்குப் போயிட்டு வந்துடு” என்று கூறி விட்டு குழந்தைகள் தங்கள் அத்தை வீட்டுக்குக் கிளம்பினர்.

 அந்த ஊரின் அருகிலிருந்த ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்று காத்திருந்த பின்பு தான் ராபர்ட்டுக்கு ஒரு விஷயம் ஞாபகம் வந்தது. “ஐயையோ! நாம இன்னிக்கு வர்றோம்னு அத்தைக்கு அம்மா லெட்டர் அனுப்பச் சொன்னாங்களே! ஆனா நான் அனுப்ப மறந்துட்டேன். தகவல் தெரிஞ்சா தானே அத்தை வருவாங்க? அத்தையோட கிராமம் இங்கிருந்து எங்கே இருக்குன்னும் நமக்கு தெரியாதே!” என்றான்.

 கொஞ்ச நேரம் காத்திருந்த குழந்தைகள் வேறு வழியில்லாமல் தங்கள் வீட்டுக்கே திரும்பினர். ஆனால் துரதிஷ்டவசமாக அங்கு அவர்களது வீடு பூட்டிக் கிடந்தது. வீட்டின் சமையல்கார அம்மாவும் பணிப்பெண்ணும் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டனர்.

“இப்ப நாம வீட்டுக்கு உள்ளேயும் போக முடியாது.. என்ன செய்றது?” என்று குழந்தைகள் யோசித்தபடி நிற்க, உள்ளிருந்து அவர்களை அழைத்தது ஃபீனிக்ஸ் பறவை.

“இங்கே வாங்க! இந்த சாப்பாட்டு அறையோட ஜன்னல் திறந்து இருக்கு.. அது வழியா நீங்க இங்கே வந்துடலாம்” என்று கூறியது.

மகிழ்ச்சியுடன் உள்ளே சென்ற குழந்தைகள், சமையலறையில் மீதமிருந்த உணவுகள், தின்பண்டங்கள் இவற்றை சாப்பிட்டுத் தங்கள் பசியைக் கொஞ்சம் போக்கிக் கொண்டனர்.

“ஊருக்குப் போகணும்னு சொன்னியே.. நீ இன்னும் கிளம்பலையா?” என்று ஃபீனிக்ஸ் பறவையிடம் அவர்கள் கேட்க,

“ஊருக்குத் தான் கெளம்பிகிட்டு இருக்கேன்” என்றது ஃபீனிக்ஸ் பறவை.

“எங்களைத் தனியா விட்டுட்டு போகாதேயேன்!” என்றான் சிறில்.

“கவலைப்படாதீங்க! ஒரு மணி நேரத்துல வந்துருவேன்.. அங்கிருந்து உங்களுக்கு என்ன வாங்கிட்டு வரணும் சொல்லுங்க?” என்று கேட்டது ஃபீனிக்ஸ் பறவை.

 ஒரு முடிவுக்கும் வர முடியாமல் ஆளுக்கொன்றாய் சொன்னார்கள் குழந்தைகள். “இத்தனை பொருட்களை சொன்னீங்கன்னா நான் என்ன பண்றது? ஏதாவது ஒண்ணு சொல்லுங்க! என்று ஃபீனிக்ஸ் பறவை கூற,

 ஆந்த்தியா, “உங்க ஊர்ல எது பிரபலமான பொருள்? நீயே அதைப் பார்த்து வாங்கிட்டு வா” என்றாள்.

 சரி என்று சொன்ன ஃபீனிக்ஸ் பறவை கம்பளத்தில் ஏறி அமர்ந்து ஜிவ்வென்று மேலே பறந்து போனது. ஒரு மணி நேரம் கழித்து அது திரும்பி வந்தபோது குழந்தைகள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். மியாவ் மியாவ் என்று ஏகப்பட்ட சத்தங்கள் கேட்க, விழித்து பார்த்த குழந்தைகளுக்குப் பேரதிர்ச்சி. ஏனென்றால் பெர்ஷியாவின் அடையாளங்களில் ஒன்றான பெர்ஷிய பூனைகளைத் தான் பீனிக்ஸ் பறவை வாங்கி வந்திருந்தது. ஒன்றல்ல, இரண்டல்ல.. மொத்தம் 199 பூனைகள்!

 எல்லாப் பூனைகளும் வீட்டை அங்குமிங்கும் சுற்றி வந்து மியாவ் மியாவ் என்று கத்தின. “அதுங்களுக்கு பசி எடுத்துடுச்சு. சாப்பிடுறதுக்கு ஏதாவது குடுங்க” என்றது ஃபீனிக்ஸ் பறவை.

Phoenix 6
படம்: அப்புசிவா

“நம்ம வீட்ல பூனைகளுக்கான உணவு இல்லையே.. நீயே கம்பளத்துல ஏறிப் பறந்து போய் எங்கேயாவது பூனை உணவு வாங்கிட்டு வந்துடு” என்றனர் குழந்தைகள்.

 மீண்டும் ஜிவ்வென்று பறந்தது ஃபீனிக்ஸ் பறவை. ஆனால் இந்த முறை திரும்பி வரும்போது அந்தப் பூனைகளுக்கு சாப்பிட நூற்றுக்கணக்கான எலிகளைப் பிடித்து வந்தது. எலிகளும் பூனைகளும் வீடு நிறைய அங்குமிங்கும் ஓடி பயங்கரக் குழப்பத்தை விளைவித்தன.

“ஐயோ! இதுவும் குழப்பமாகிப்போச்சா? பூனைக்கான உணவுன்னு டின்ல அடைச்சு கடையில விப்பாங்க.. அதைச் சொன்னா இந்த ஃபீனிக்ஸ் பறவை எலிகளைப் போய் பிடிச்சுட்டு வந்திருக்கு” என்றாள் ஜேன். 

வீட்டிற்குள் இருந்து வினோதமான சப்தங்கள் வெளியே கேட்கவும் அந்த வழியாகச் சென்ற ஒரு போலீஸ்காரர் கதவைத் தட்டி,

“யார் உள்ளே? கதவைத் திறங்க! பூனைகளை அடைச்சு வச்சு கொடுமைப்படுத்துற மாதிரி எனக்குத் தெரியுது!” என்று சத்தம் போட்டார்.

“போலீஸ் வேற வந்துட்டாங்க.. இப்ப என்ன பண்றது?” என்று அனைவரும் பதற, ஜேன் கிட்டத்தட்ட அழவே ஆரம்பித்து விட்டாள். அந்த நேரம் பார்த்து, “திருடன் திருடன்! பிடிங்க! பிடிங்க!” என்று வாசலில் ஒரு சத்தம் கேட்க, போலீஸ்காரர் அந்தப் புறமாக ஓடினார்.

 திருடன் வீட்டுக்குள் வந்துவிடக் கூடாதே என்று குழந்தைகள் பயந்திருக்க, உள்ளே வந்த ஃபீனிக்ஸ் பறவை, “பயப்படாதீங்க! திருடன் எல்லாம் இல்ல.. நான் தான் அப்படி பயங்காட்டி திசை திருப்பினேன்.. போலீஸ்காரர் போயிட்டார்” என்றது.

 இவர்கள் இந்தக் களேபரத்தில் இருக்க, நிஜமாகவே அவர்கள் வீட்டிற்குள் ஒரு திருடன் புகுந்து விட்டான்!

-தொடரும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments