புலிக்குகை மர்மம்

புலிக்குகை மர்மம் – இளையோர் நாவல்

ஆசிரியர் உதயசங்கர்

வெளியீடு:- வானம் பதிப்பகம், சென்னை. (9176549991)

விலை ரூ 60/-

மிகச் சாதாரண குடும்பப் பின்னணி கொண்டவன் கேப்டன் பாலு. இவன் தான் இந்நாவலில் கதாநாயகன். இவனே ஆசிரியரின் இன்னொரு இளையோர் நாவலான ‘ஆதனின் பொம்மை’ என்ற நாவலிலும் கதாநாயகன். 

பத்தாம் வகுப்பில் ஒரு முறை தோல்வியுற்றவன். ஆனால் மரம் ஏறுவதிலிருந்து கிரிக்கெட் வரை, எந்த ஒரு விளையாட்டாக இருந்தாலும் அதில் கைதேர்ந்தவன். எறிபந்து, கபடி, பம்பரம், கல்லா மண்ணா, கோலிக்குண்டு, செதுக்குமுத்துக் கல் எனக் கிராமத்து விளையாட்டுப்  பெயர்களை இதில் குறிப்பிட்டிருக்கின்றார் ஆசிரியர்.

கோவில்பட்டி ஊரின் தெற்கு மூலையில், சொர்ணமலை உள்ளது. அதன் அடிவாரத்தில் ஒரு புலிக்குகை உள்ளது. அந்த இருட்டுக் குகைக்குப் பெரியவர்களே போகப் பயப்படுவார்கள். 

அந்தக் குகைக்குக் கீழே இருந்த பெரிய மைதானத்தில் மேட்டுத்தெரு வெங்கடேஷ் குழுவுக்கும், மாதாக் கோயில்தெரு பாலு குழுவுக்கும் கிரிக்கெட் போட்டி நடக்கிறது. அச்சமயம் புலிக்குகையின் அருகில், வெளியூர் ஆட்களின் சந்தேகத்துக்குரிய நடமாட்டத்தைச் சிறுவர்கள் கவனிக்கிறார்கள். அதற்குப் பிறகு அவர்கள் குழுவில் விளையாடிய சிறுவன் மாரி திடீரென்று காணாமல் போகிறான்.

மாரி எங்கே?  மாரியைத் தேடி பாலு தலைமையில் சென்ற சிறுவர்கள் அவனைக் கண்டுபிடித்தார்களா? அந்தப் புலிக்குகைக்குள் இருந்த மர்மம் என்ன? அந்த சந்தேகத்துக்குரிய நபர்களின் தலைவன் யார்? தெரிந்து கொள்ள நாவலை வாசியுங்கள். சாகசமும், விறுவிறுப்பும் நிறைந்த நாவல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *