பிரக்ஞானந்தா செஸ் விளையாட்டில் தமது 12 வயதிலேயே கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று, சாதனை படைத்தவர், சென்னையைச் சேர்ந்த இவர், இந்தச் சாதனையை 2018 ல் நிகழ்த்திய போது, 12 ஆண்டுகள், 10 மாதங்கள், 13 நாட்கள் மட்டுமே ஆகியிருந்தன. இதனால் இந்தியாவின் மிக இளம் வயது கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையைப் பெற்றார்.
தற்போது 16 வயதாகும் இவர், சென்னையைச் சேர்ந்த பாடியில் வசிக்கிறார். போலியோவால் பாதிக்கப்பட்ட இவரது தந்தை ரமேஷ் பாபு, சென்னை கொரட்டூரில் உள்ள கூட்டுறவு வங்கியொன்றில் மேலாளராகப் பணிபுரிகின்றார்.
நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தாவின் அக்கா வைஷாலியும், செஸ் வீராங்கனை தான். இந்த விளையாட்டின் அடிப்படைகளையும், நுணுக்கங்களையும் தம் அக்காவிடம் இவர் கற்றுக்கொண்டார். பிரக்ஞானந்தாவைத் தொடர்ந்து வெளிநாடுகளுக்குப் போட்டிகளுக்காக அழைத்துச் செல்பவர், இவருடைய தாயார் நாகலஷ்மி.
இவர் பிப்ரவரி 2022 ல் நடந்த ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் தற்போதைய உலக செஸ் சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை வென்று சாதனை படைத்தார். பின்னர் மே 2022 ல் நடந்த போட்டியில் கார்ல்சனை இரண்டாவது முறையாக வென்று இரண்டாம் இடம் பிடித்தார். தற்போது நார்வேயில் நடந்த குரூப் ஏ செஸ் போட்டித் தொடரில் விளையாடி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
மாமல்லபுரத்தில் ஜூலை 2022 ல் துவங்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியிலும், இவர் பங்கேற்க உள்ளார். இவருக்கு இந்தியன் ஆயில் கார்பரேஷன் வேலை வழங்கியுள்ளது. தற்போது 16 வயதே ஆவதால், 18 முடிந்தவுடன் வேலையில் சேர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெயர் ஞா.கலையரசி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.com என் வலைப்பூ. புதிய வேர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன்.