மலையடிவாரத்தில் அழகான கோயில் ஒன்று இருந்தது. கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு மேலாக அந்த கோயில் அங்கே புகழ் பெற்று விளங்கி கொண்டிருந்தது..
அந்த கோவிலில் தரிசித்த பிறகு தான் நிறைய பக்தர்கள் மலை உச்சியில் இருக்கின்ற இன்னொரு ஆலயத்திற்கு செல்வது வழக்கம்..
அங்கே இருந்த பெரிய பெரிய மரங்களில் எல்லாம் நிறைய குரங்குகள் கூட்டம் கூட்டமாக வசித்து வந்தது.
குரங்கு கூட்டங்களின் வசிப்பிடம் இது கிடையாது மலை உச்சியில் ஆரம்ப நாட்களில் இருந்தது.
பிறகு எப்போதாவது ஒரு முறை தண்ணீர் இல்லாத நாட்களில் கீழே இறங்கி வரும். பிறகு சென்று விடும்.
கடைசியாக ஒரு வருடத்திற்கு முன்பு கீழே இறங்கிய குரங்குகள் அதன் பிறகு மலை உச்சிக்கு செல்லவே இல்லை. இங்கேயே தங்கி விட்டனர் சில வருடங்களாக..
மலை உச்சியில் கூட சாதாரணமாக எல்லாம் கிடையாது.கண்ணுக்கு குளிர்ச்சியாக பச்சைப் பசேல் என நிறைய மரங்களை கொண்டது.
உணவிற்கு எந்த காலத்திலும் தட்டுப்பாடு வராத அளவிற்கு நிறைய வகையான பழங்களை கொண்ட மரங்கள் அந்த மலையில் நிறையவே இருந்தன.குரங்கு கூட்டம் மட்டுமல்ல.. வனவிலங்குகளும் வசித்து வந்தன.
பப்பாளி, இலந்தை, நெல்லிக்காய் கொய்யா இன்னும் நிறைய பழவகைகள் அந்த மலையை சுற்றி இருந்தது .
எப்போதுமே உணவிற்கு தட்டுப்பாடு என்பது கிடையவே கிடையாது குரங்கு கூட்டங்கள் எல்லாமே எப்போதுமே ஆனந்தமாக விளையாடிக்கொண்டிருந்தனர்.
நாட்கள் செல்லச் செல்ல அங்கே நிறைய மாற்றம் நிகழ ஆரம்பித்தது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் உணவாக கொண்டு வருவதை அங்கிருந்த குரங்கு கூட்டங்களுக்கு வழங்க ஆரம்பித்தனர்.
இப்போதெல்லாம் குரங்கு கூட்டங்களுக்கு மலைக்கு மேலே சென்று வசிக்க யாருக்கும் விருப்பமில்லை.
நிறைய சோம்பேறித்தனம் தோன்றி இருந்தது. இங்கு வரும் பக்தர்கள் கொடுக்கின்ற உணவிற்காக காத்திருக்க ஆரம்பித்தது.
உணவு கொடுத்தால் சந்தோஷமாக வாங்கிக் கொள்வது இல்லாவிட்டால் சில சமயங்களில் வருபவர்களை மிரட்டி கையில் இருந்ததை பறித்துக்கொண்டு ஓடி விடுவது..
கிட்டத்தட்ட திருடர்களைப் போல வழிபறியில் ஈடுபடுபவர்களைப் போல நடந்து கொண்டது.
அந்த குரங்கு கூட்டத்தில் வயதான ஒரு குரங்கு இருந்தது. அந்த குரங்குக்கு இதை பார்க்கையில் மனம் நிறைய வேதனை பட ஆரம்பித்தது.
எப்போதுமே சுறுசுறுப்பாக தன்னுடைய தேவைகளுக்கு உணவை தேடி சென்று சாப்பிட்டுக்கொண்டிருந்த தன்னுடைய சந்ததிகள் இன்றைக்கு வழிப்பறியில் ஈடுபடுவது போல தோன்ற ஆரம்பிக்கவும் மிகவும் வருத்தம் கொள்ள ஆரம்பித்தது.
தன்னுடைய வயதில் இருந்த குரங்குகளிடம் சென்று தன்னுடைய மனதில் உள்ளதை கூறியது .
அது மட்டுமல்ல தன்னுடைய குரங்கு கூட்டம் அனைவரையும் ஒன்றாக இணைத்து அன்றைக்கு பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தது.
சொன்னது போலவே சரியான நேரத்திற்கு அனைத்து குரங்குகளும் வந்து மொத்தமாக சேர்ந்து நின்றனர்.
மனதில் உள்ளதை சற்று வருத்ததோடு..” நாம என்ன செய்து கொண்டிருக்கிறோம் தெரியுதா.. எப்பவுமே யார்கிட்டயும் நமக்கு கை ஏந்தி பழக்கம் கிடையாது .நமக்கு வேணும்கறதை நாம தான் சேகரித்து சாப்பிடுவோம் .ஆனால் இன்றைக்கு நிலைமை எப்படி மாறிக் கொண்டிருக்கிறது தெரியுதா.. நம்மளோட வருங்கால சந்ததிகள் ஒவ்வொருவரும் கொஞ்சம் கூட உழைக்காம அடுத்தவங்க கையிலிருந்து என்ன கிடைக்கும்னு எதிர் பார்த்திட்டு இருக்காங்க. இதெல்லாம் உங்களுக்கு புரியுதா..” குரங்குகளிடம் கேட்க மற்ற குரங்குகளும் கூட இதை ஆமோதித்தது.
“ஆமாம் நீங்க சொல்றது சரிதான். நம்ம முன்னாடி இப்படி இல்லை . முன்னாடி எல்லாம் எப்பவாவது ஒரு முறை தான் கீழே இறங்கி வருவோம். அதுவும் கூட குடிக்க தண்ணீர் கிடைக்காத நாட்களில் மட்டும் தான் . ஆனா இப்போ நம்ம எங்கயுமே போறதில்ல இங்கேதான் இருக்கிறோம் .பசிச்சா கூட உணவு தேடி போறதுக்கு யாருமே விரும்பியது இல்லை. யாராவது ஏதாவது தருவாங்களான்னு தான் எதிர்பார்க்கறோம்” என்று வருத்தத்தோடு கூறியது.
“இங்க யாரையும் குறை சொல்ல முடியாது . பக்தர்கள் இந்த கோயிலுக்கு வராங்க. அவங்ககிட்ட இருக்கிற உணவு மிச்சமானா மற்ற விலங்குகளுக்கு வைக்கிறாங்க இது அவங்களோட இயல்பான குணம் ஆனா நம்மளோட இயல்பான குணத்தில் இருந்து நாம மாறிட்டு வரோம் இதெல்லாம் புரியுதா” என்று சொல்ல, மற்ற குரங்குகளும் ஆமாம் என்பது போல தலையை ஆட்டியது.
“இதை இப்படியே விட முடியாது நம்ம எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்த வழக்கத்தை நாம மாத்தணும்”.
“வருங்காலத்துல இங்க வர்ற மக்கள் எல்லோருமே கையில நம்மள அடிக்க குச்சியோட வரக்கூடாது “.
“ஆமாம் அதுக்கு என்ன செய்யலாம்” என்று ஒரு குரங்கு கேட்க ,
“நம்மோட குழந்தைகளை எல்லாம் அழைச்சிட்டு நம்ம இடத்துக்கு போய்விடலாம். எந்த இடத்துல நமக்கு உணவு கிடைக்கிறதோ அந்த இடத்துல நம்ம தங்கிக்கலாம் என்ன சொல்றீங்க”. என்று கேட்க.
வயதில் மூத்த மற்ற குரங்குகள் சரி என்பது போல தலையை ஆட்டியது. “அடிச்சி பிடுங்கறது நம்மளோட வழக்கம் கிடையாது.நாம தேனி மாதிரி சுறுசுறுப்பாக இருக்கறவங்க.. இது எல்லாமே உங்களுக்கு தெரியும் தானே..நமக்கான உணவை நாம தேடி சாப்பிடனும் . எதுக்கு நம்ம மத்தவங்களோட கையை எதிர்பார்த்துக் காத்திருக்கனும். “என்று கேட்க இப்போதுதான் அங்கிருந்த குரங்குகள் எல்லாவற்றுக்கும் தங்களுடைய தவறு புரிந்தது.
மொத்த குரங்குகளும் சரி என்பது போல தலை ஆட்டி விட்டு அங்கிருந்து நகர ஆரம்பித்தனர். இனி யாரும் யாரிடமும் கையேந்த கூடாது என்று முடிவு செய்து கொண்டனர் .
தங்களுடைய சுறுசுறுப்பான முயற்சியால் அன்றைய உணவை தேடி செல்லலாம் இப்படியாக முடிவு செய்து தங்களுடைய குடும்பத்தோடு மறுபடியும் மலை உச்சிக்கு நகர ஆரம்பித்தது.
இப்போது அந்த முதிய குரங்கிற்கு மனதில் அத்தனை மகிழ்ச்சி இனி தன்னுடைய சந்ததிகள் இதுபோன்ற தவறை செய்யாது என்ற நம்பிக்கையோடு அனைவரையும் அழைத்துக் கொண்டு உச்சி மலையை நோக்கி சென்றது.
என்ன குழந்தைகளா இந்த கதை உங்களுக்கு பிடிச்சிருக்கா. வயதில் மூத்தவர்கள் எப்பவுமே நமக்கு நல்லதுதான் சொல்வாங்க உண்மைதானே..
நாம கூட அந்த குரங்குகள் போல நமக்கு வேண்டியதை உழைத்து கிடைக்கும் போது கிடைக்கிற சந்தோஷம் தனி தானே.. எப்படின்னு கேக்குறீங்களா..
நம்ம அம்மாக்கள் சந்தோசப்படற மாதிரி அவங்களுக்கு சின்ன சின்ன வேலைகளில் உதவி செய்யும் போது அத பார்த்து அவங்க மகிழ்ச்சியா நமக்கு ஆசைப்படுவதை வாங்கிக் கொடுப்பாங்க.. கொடுப்பாங்க தானே..அப்போ கிடைக்கிற சந்தோஷம் பெரியது தானே.
நான் ராஜேஸ்வரி.d (கவிசெளமி),கோவையில் வசிக்கிறேன். இரண்டு வருடமாக கதைகள் எழுதுகிறேன். புதினம்2020 போட்டியில் மூன்றாவது பரிசு வாங்கி புத்தகமாக வெளிவந்தது மறக்கமுடியாத அனுபவம்