அத்தியாயம் 10

golden

நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருந்த தாமரை, அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்று மனதில் திட்டம் தீட்டினாள். கோல்டன் தமிழச்சியாக மாற வேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதைப் புரிந்து கொண்டாள்.

அதற்குள் அந்தக் கொடியவர்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார்கள். வேலை செய்யும் தொழிலாளர்களைப் பார்த்து, அந்த முரடர்களின் தலைவன் மிரட்டும் தொனியில் பேசினான்.

“நான் இந்தப் பசங்களைக் கொண்டு போய் ஒரு பத்திரமான இடத்தில் அடைச்சு வச்சுட்டுத் திரும்பி வரேன். அதுக்குள்ள இன்னிக்கு வேலையை கிடுகிடுன்னு முடியுங்க. இன்னையோட இந்த இடத்தில் மிச்சம், மீதியிருக்கும் வேலையை முடிச்சிட்டு நகரணும். கொஞ்ச நாட்களுக்கு உங்களுக்கு வேலை இருக்காது. இப்போ இங்க அடிக்கடி செக்கிங் செய்ய அதிகாரிகள் வரதுனால, கொஞ்ச நாட்களுக்கு வேலையை நிறுத்தி வைக்கலாம்னு பாஸ் சொல்லியிருக்காரு. யாராவது ஏதாவது விசாரிச்சா வாயைத் திறக்கக் கூடாது. என்ன புரியுதா?” என்று சொல்ல, அந்த அப்பாவித் தொழிலாளிகளும் பயத்துடன் தலையாட்டினார்கள்.

“அந்தப் பசங்க சின்னஞ்சிறுசுங்க. அதுங்களை மன்னிச்சு விட்டுருங்க. ஏதோ தெரியாமப் பண்ணிட்டாங்க. பாவம்” என்று ஒரு வயதானவர் தயங்கித் தயங்கிச் சொல்ல, அந்த முரடனுக்குத் தலைக்கு மேல் கோபம் ஏறியது. சுட்டெரிப்பது போல அவர்களைப் பார்த்தான்.

“என்ன திடீர்னு அந்தப் பசங்க மேல இரக்கம் பொங்கி வழியுதே? அவங்களோட சேத்து உங்களையும் அடைச்சுப் போட்டுரவா? அவங்களுக்கு என்ன தண்டனையோ அதையே உங்களுக்கும் கொடுத்துரலாம்! சரியா?” என்று எகத்தாளமாகக் கேட்க, அந்தப் பெரியவரும் வாயை மூடிக் கொண்டு கையில் கோடாரியைத் தூக்கியபடி நடந்தார்.

முரடன், குழந்தைகளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான். “இன்னைக்கு ராத்திரி வேலையை முடிக்கறோம். கண் கொத்திப் பாம்பாக் கண்காணிக்கணும் நீங்க எல்லாரும். எல்லா இடங்களிலும் சுத்தி சுத்தி வாங்க. எங்கயாவது சலசலப்பு சத்தம் கேட்டுச்சுன்னா, உடனடியாக விசிலைச் சத்தமா ஊதி சங்கேத பாஷையில் செய்தி தெரிவிக்கணும். ரெண்டு பேர் மட்டும் இங்க இருங்க. மத்தவங்க ரோந்து செய்யப் போகலாம்” என்று அடுத்தடுத்து உத்தரவுகளைப் பிறப்பித்து விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

அனைத்தையும் அமைதியாக கவனித்த தாமரை, எதிரிகளைத் தனியாக எதிர்கொள்வதற்கு முன்னால் சில முன்னேற்பாடுகளை மேற்கொள்ள நினைத்தாள். நேரமும் அதிகமில்லை. அந்த முரடர்கள் கூட்டம் குழந்தைகளுக்கு ஏதாவது தீங்கு விளைவிப்பதற்கு முன்னால் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குழந்தைகளைக் காப்பாற்றுவது முக்கியம். அதே சமயம் குற்றவாளிகளைக் கையும் களவுமாகப் பிடிப்பதும் அவசியம். இவர்களிடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் இந்த ஏழைத் தொழிலாளிகளையும் காப்பாற்ற வேண்டும்.

 உடனடியாக, “மின்மினி, தாமரை டு கோல்டன் தமிழச்சி” என்று சொன்ன தாமரை, கோல்டன் தமிழச்சியாக உருமாறினாள் . மனதிற்குள் மின்மினி தேவதையை மீண்டும் நினைத்துக் கொண்டு, “மின்மினி, என்னைப் பறக்க வை, என்னுடைய கடமைகளை நல்லபடியாக முடிக்க எனக்கு சக்தி கொடு மின்மினி தேவதையே” என்று வேண்டிக் கொண்டவள், மரத்திலிருந்து உயரே கிளம்பி வானில் பறக்க ஆரம்பித்தாள்.

வானில் மின்னலிட்டது போல திடீரென்று பிரகாசமாகத் தெரிந்த வெளிச்சத்தால் கவரப்பட்டு அங்கே வேலை செய்து கொண்டிருந்த மரம் வெட்டிகள் நிமிர்ந்து பார்த்து ஆச்சர்யத்தில் ஆழ்ந்து போனார்கள்.

“வானத்தில யாரோ தேவதை ஒண்ணு பறந்து போகுது பாருங்க! இந்த தேவதையோட உடம்பு அப்படியே தங்கம் மாதிரி தகதகன்னு ஒளி வீசுது. இந்த மாதிரி காட்சியை இதுவரைக்கும் வாழ்க்கையில் பாத்ததே இல்லை” என்று வியப்புடன் அவர்கள் பார்க்கும் போதே கோல்டன் தமிழச்சி அவர்களுடைய பார்வையில் இருந்து மறைந்து போனாள்.

வனத்தின் எல்லையை அடைந்த தாமரை, கீழே இறங்கினாள். அந்த இடத்தில் மொபைல் நெட்வொர்க் வேலை செய்ததைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தாள். தனக்கு உதவி செய்த ஓய்வு பெற்ற நீதிபதியை அழைத்துப் பேசினாள். தான் எடுத்த புகைப்படங்களையும் அனுப்பினாள்.

“அங்கிள், தவறு நடக்குதுங்கறதை ப்ரூவ் பண்ணத் தேவையான ஆதாரங்கள் எல்லாமே சேகரிச்சுட்டோம் நாங்க. ஆனா என் கூட வந்த எல்லா ஃப்ரண்ட்ஸும் அந்த சமூக விரோதிகள் கிட்ட மாட்டிக்கிட்டாங்க. நான் மட்டும் எப்படியோ தப்பிச்சு வெளியே வந்திருக்கேன். உங்களுக்குத் தெரிஞ்ச  போலீஸ் ஆஃபீஸர் கிட்டப் பேசி உதவிக்கு ஆளனுப்புங்க, ப்ளீஸ் அங்கிள்” என்று கெஞ்சுவது போலப் பேசினாள் தாமரை.

“ஆபத்தான இடத்துக்குத் தனியாப் போகக் கூடாதுன்னு நான் எச்சரிக்கை செஞ்சும் கேக்காமப் போயி மாட்டிக்கிட்டீங்களேம்மா? சரி, நான் சீக்கிரமா உதவிக்கு போலீஸ் அனுப்ப ஏற்பாடு செய்யறேன். அதுவரைக்கும் எப்படியாவது சமாளிக்கப் பாரும்மா. நீங்க இருக்கற லொகேஷனைக் கொஞ்சம் அனுப்பி வை. விரைவில் அங்கே வர உதவியா இருக்கும்” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தார். தாமரையும் தனக்குத் தெரிந்த வரை அந்த இடத்தை விளக்கித் தகவல் அனுப்பி வைத்தாள்.

அங்கிருந்து தனது பறக்கும் சக்தியை உபயோகித்து மீண்டும் பறக்க ஆரம்பித்த கோல்டன் தமிழச்சி வானில் வட்டமிட்டபடி தனது பள்ளி நண்பர்கள் இருக்கும் இடத்தைத் தேடிக் கொண்டே பறந்தாள்.

காட்டின் நடுவில் ஓரிடத்தில் லேசாக வெளிச்சம் தெரிய, அந்த இடத்தை அடைந்து அங்கிருந்த ஒரு மரத்தின் அருகில் ஒளிந்து நின்று நோட்டம் விட்டாள். ஆமாம், அவள் நினைத்தது சரி தான். அவளுடைய நண்பர்கள் அனைவரும் அங்கு தான் இருந்தார்கள். அனைத்து முரடர்களும் கூடி நின்று குழந்தைகளை என்ன செய்வது என்று விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அங்கேயிருந்த ஒரு குகைக்குள் குழந்தைகளைத் தள்ளி ஒரு பாறையால் குகையின் நுழைவுப் பகுதியை மூடிவிட்டுத் தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“எல்லாருமே இங்கேயே நின்னு கண்காணிக்க முடியாது. ரெண்டு பேரையும் மட்டும் காவலுக்கு விட்டுட்டு மத்தவங்க மீதி வேலையை முடிக்கப் பாக்கணும். கடைசி நாளுங்கறதுனால அதிக எச்சரிக்கையா கண்காணிக்கணும். எந்தத் தடங்கலும் வரக் கூடாது. இந்தப் பசங்க உள்ளே நடக்கறதைப் பாத்துட்டாங்க. இவங்களை வெளியே விடறது ஆபத்து. என்ன செய்யலாம்? ” என்றான் அந்தத் தலைவன் தீவிர யோசனையுடன்.

“சின்னக் கொழந்தைங்க பாஸ். அவங்க உசுருக்கு எதுவும்  பாதிப்பு வரவேணாமே? ” என்றான் ஒருத்தன் தயக்கத்துடன்.

“அவங்க உசுரைப் பத்திக் கவலைப்பட்டு, நம்ம உசுரை இழக்கலாமா? கருணை தெய்வமே! அவங்க உசுரைக் காப்பாத்தணுமா? நம்ம உசுரை இழக்கணுமா? ” என்று எகத்தாளமாகக் கேட்டான். மற்றவர்கள் அவனுடைய பதிலைக் கேட்டு நெளிந்தார்கள். அவனைத் தவிர மீதி யாருக்கும் அவனுடைய யோசனை பிடிக்கவில்லை என்று தெரிந்தது.

“சரி, என்ன பண்ணனும்னு நான் பாத்துக்கறேன். நீங்க எல்லாரும் போயி எல்லாப் பகுதிகளிலயும் நல்லா அலர்ட்டா சுத்திப் பாருங்க. எங்கயாவது ஏதாவது ஆள் நடமாட்டம் இல்லை சந்தேகத்தைக் கிளப்பற மாதிரி ஏதாவது நடவடிக்கை கண்ணில பட்டா, உடனே உங்க விசிலை பலமா அடிச்சு எனக்கு ஸிக்னல் கொடுக்கணும்” என்று அவர்களை அனுப்பிவிட்டு இரண்டு நம்பிக்கையான அடியாட்களை மட்டும் தன்னுடன் நிறுத்திக் கொண்டான்.

மற்றவர்கள் அங்கிருந்து நகர்ந்த பின்னர் தன்னுடன் இருந்த இருவரை அழைத்து அவர்கள் காதுக்குள் ஏதோ ரகசியமாகச் சொன்னான். அது மட்டும் என்னவென்று தாமரைக்குப் புரியவில்லை. அவர்கள் தலையசைத்தபடி நடந்து சென்று சிறிது நேரத்தில் ஒரு சாக்குப் பையுடன் வந்தார்கள்.

“என்ன கெடைச்சுதா? ” என்று அந்த பாஸ் கேட்க,

“ஹ்ம், கிடைச்சிருச்சு. காட்டுப் பகுதி தானே? ஏழெட்டு கிடைச்சிருக்கு. சரி, அந்தப் பசங்களுக்கு சாப்பாடு ஏதாவது கொடுக்க வேணாமா? ” என்று கேட்க ,

“என்ன சாப்பாடா? இந்தப் பாம்புகளால கடி பட்டு நல்லாக் கூப்பாடு தான் போடப் போறாங்க” என்று சொல்லிவிட்டு, தான் சொன்ன ஜோக்குக்குத் தானே சிரித்துக் கொண்டான்.

அவர்களைக் கண் கொட்டாமல் கவனித்துக் கொண்டிருந்த தாமரைக்கு அப்போது தான் அந்தக் கேடு கெட்டவனின் திட்டம் புரிந்தது. பகீரென்றது அவளுக்கு. கையை உயர்த்தி, “கோல்டன் தமிழச்சி, பற” என்று சொன்னதும் பறக்க ஆரம்பித்தாள். அந்தக் கொடியவர்கள், பாம்புகள் இருந்த பையை எடுத்துக் கொண்டு குகையின் வாயிலை அதற்குள் அடைந்திருந்தார்கள்.

பளீரென்ற வெளிச்சத்துடன் தங்கள் முன் தோன்றிய உருவத்தைக் கண்டு முதலில் பயந்த அந்த மூன்று பேரும், சுதாரித்துக் கொண்டு அந்த உருவத்தை எதிர்த்து சண்டை போடுவதற்குள் மின்னல் வேகத்தில் தாமரை செயல்பட்டாள்.

அவர்கள் கையிலிருந்த கோணிப்பையைப் பிடுங்கி, அவர்கள் மேலேயே அந்தப் பாம்புகளைப் தூக்கிப் போட அவர்கள் அலறல் தொடங்கினார்கள். தனது முழு சக்தியையும் உபயோகித்து குகையின் நுழைவு வாயிலில் இருந்த பாறையை அகற்ற, தாமரையின் நண்பர்கள் பாய்ந்து வெளியே ஓடிவந்தார்கள். பாம்புகளை சமாளிக்க முடியாமல் நடனமாடிக் கொண்டிருந்த மூவரையும் பார்த்து கைகொட்டிச் சிரித்தார்கள்.

“வேடிக்கை பாத்துக்கிட்டு டயத்தை வேஸ்ட் பண்ணாம, இங்கிருந்து தப்பிக்கற வழியைப் பாருங்க. வாங்க என் பின்னால. நான் வழி காட்டறேன்” என்று தாமரை சொல்ல, அந்தக் குழந்தைகள் தங்கள் முன்னே நின்ற அந்தத் தங்கப் பெண்ணைக் கண்டு ஆச்சர்யத்தால் உறைந்து போனார்கள்.

அதற்குள் அந்த ரௌடிகள் பாம்புகளை உதறிவிட்டு அவர்களை நோக்கி ஓடிவர, கோல்டன் தமிழச்சி மின்னல் வேகத்தில் அவர்களைத் தாக்கினாள். அவர்கள் உதறிய பாம்புகளை மீண்டும் தூக்கி அவர்கள் மீது போட்டாள். அதற்குள் மற்ற அடியாட்களும் அங்கே வேகவேகமாக ஓடிவந்தார்கள்.

“அண்ணே, போலீஸ் டீம் ஒண்ணு காட்டுக்குள் வந்திட்டிருக்கு. நாம எல்லாரும் சீக்கிரமாத் தப்பிக்கணும். வாங்க” என்று கத்திக் கொண்டே ஓடி வந்தவர்கள், அங்கே இருந்த நிலைமையைப் பார்த்துத் திகைத்துப் போனார்கள். அத்தனை பேரையும் ஒரே ஆளாகத் தாக்கி சமாளித்த கோல்டன் தமிழச்சி பாய்ந்து பாய்ந்து அவர்களைத் தாக்கி நிலைமையைத் தன் பிடிக்குள் கொண்டு வந்தாள். அருகிலிருந்த மரங்களில் அனைவரையும் கட்டிப் போட்டாள். தனது சக்தியால் நல்ல தடிமனான கயிற்றை வரவழைத்திருந்தாள் தமிழச்சி. அதற்குள் போலீஸ் டீம் அருகில் நெருங்கி வருகின்ற சத்தம் கேட்டது.

“ஓகே ஃப்ரெண்ட்ஸ்,  என் வேலை முடிந்து. இவங்களை எல்லாரையும் போலீஸில புடிச்சுக் கொடுத்து தண்டனை வாங்கித் தாங்க. அந்த மரம் வெட்டும் தொழிலாளிங்க எல்லாரும் அப்பாவிங்க. அவங்களை உருட்டி மிரட்டி இவங்க தான் மரங்களை வெட்ட வச்சிருக்காங்க. அவங்களை விட்டுரச் சொல்லி போலீஸ் அதிகாரி கிட்ட நீங்க எடுத்துச் சொல்லுங்க. பை, பை , நான் உங்களைப் பிரியற டயம் வந்துடுச்சு. உங்க முயற்சியால இந்தக் காடு அழியாமல் காப்பாத்தப் பட்டிருக்கு. அதுவே நல்ல விஷயம்” என்று சொல்லி விட்டுப் பறக்கத் தொடங்கினாள்.

“கோல்டன் ஏஞ்சல், யாரு நீங்க? கொஞ்ச நேரம் வெயிட் பண்ணி எங்க ஃப்ரண்ட் தாமரையைப் பாத்துட்டுப் போங்க. அவ தான் இந்த நல்ல காரியத்தை ஆரம்பிச்சு வச்சது” என்று அவர்கள் சொல்லச் சொல்ல, கோல்டன் தமிழச்சி புன்னகையுடன் பறந்து சென்று விட்டாள்.

சிறிது நேரத்தில் அங்கே போலீஸ் டீம் வந்தது. அவர்களுக்குப் பின்னாலேயே தாமரையும்  வந்து சேர்ந்தாள்.

தாங்கள் பார்த்த அதிசயங்களை எல்லாம் தாமரைக்கு, பள்ளிக் குழந்தைகள் எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்த போது போலீஸ் டீம் கயவர்களைக் கைது செய்து தேவையான நடவடிக்கைகளைச் செய்தது.

கோல்டன் தமிழச்சியின் உதவியுடன் பள்ளிக் குழந்தைகள் வனத்தை மீட்ட செய்தி செய்தித் தாள்களிலும் ஊடகங்களிலும் பிரமாதமாகப் பேசப்பட்டது.

எங்கெல்லாம் தன்னைச் சுற்றி அநியாயம் நடந்ததோ அங்கெல்லாம் தலையிட்டு நீதியை நிலைநாட்டி வந்தாள் கோல்டன் தமிழச்சி.

தாமரை, “நான் நன்றாகப் படித்துப் பெரியவளாகிக் காவல் துறை அதிகாரியாக வேண்டும். ஐ. பி. எஸ். பரீட்சை எழுதித் தேர்வாகி வீரதீர சாகசங்கள் செய்ய வேண்டும் ” என்று மனதிற்குள் முடிவெடுத்தாள்.

வாழ்க கோல்டன் தமிழச்சி!

வளரட்டும் அவளுடைய சாகசச் செயல்கள்!

நிறைவு.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments