அனுவும் வினுவும் அமைதியாக படுத்திருக்க, அனு பக்கத்தில் அப்பா படுக்க, வினு பக்கத்தில் அம்மா படுத்தார். ட்யூப்லைட்டை அணைத்துவிட்டு, இரவு விளக்கை ஒளிரவிட்டபடி கேட்டார் அப்பா , “இன்னைக்கு யார் கதை டர்ன்? அப்பாவா? அம்மாவா?”

“அம்மா!”

“என்ன அனு?”

“அது ஒன்னுமில்லை.. இன்னைக்கு நான் கதை சொல்லவா?”

“ஹை.. சூப்பர். நீயே சொல்லு. என்ன வினு, ஓகேவா?”

“ம்ம்..” இது வினு.

“என்ன வினு.. சவுண்ட் ரொம்ப கம்மியா வருது?” புன்னகையோடு கேட்டார் அம்மா.

“அது… ஒன்னுமில்லைமா.. நீ கதை சொல்லு அக்கா.”

கேள்வியாய் புருவம் உயர்த்திய அம்மாவின் முகம் இருட்டில் யாருக்கும் தெரியவில்லை. மற்ற இருவரின் முகங்கள் அம்மாவுக்குத் தெரியவில்லை.

அனு கதையை ஆரம்பித்தாள், “ஒரு அழகான ஊரு. அதுக்கு ஒரு கிரேட் ராஜா, ராணி. அந்த ராஜாக்கு  இளவரசனும் க்யூட் இளவரசியும் இருந்தாங்க; அவங்க ஒரு கலர்ஃபுல்லான அரண்மனையில் இருந்தாங்க..”

“இளவரசி, இளவரசன் கதையா இன்னைக்கு?”

“ஆமா..” என்று அம்மாவின் கேள்விக்கு பதில் சொன்ன அனு கதையைத் தொடர்ந்தாள், “ஒரு நாள் சாயங்காலம் இளவரசி, இளவரசனுக்கு ரொம்ப தாகமா இருந்தது. அவங்க கிச்சன் பானைல தண்ணீ இல்லை. என்ன பண்றதுன்னு இளவரசியும் இளவரசனும் அரண்மனையைச் சுத்தி சுத்தி வந்தாங்க.”

இதற்குள் ஆயிரம் சந்தேகம் கேட்டிருக்கும் வினு இன்று ஏனோ அமைதியாக இருந்தான். அதைக் கவனித்த அம்மா அவனை உற்சாகப்படுத்த வினுவின் பொறுப்பை தான் எடுத்துக் கொண்டு சந்தேகங்கள் கேட்கத் தொடங்கினார். “இளவரசி, இளவரசன்னு சொன்னியே அனு.. ‘யாரங்கே?’ அப்படின்னு சொன்னா யாரும் வர மாட்டாங்களா?”

“அது.. அன்னைக்கு சன்டேமா.. எல்லோரும் லீவ் போட்டாங்க.”

“ஓஹோ”

“ம்.. அப்போ இளவரசனும் இளவரசியும் ஒரு அழகான ஜாடி பார்த்தாங்க..”

“அக்காஆஆஆ..”

“என்ன ஆச்சி வினு பையா?” அம்மா.

“ஒன்னுமில்லைமா”

“கதை ஃப்ளோல போகும்போது டிஸ்டர்ப் பண்ணதேடா ப்ளீஸ்” என்று  மிடுக்காகச் சொன்னாள் அனு.

“ஓகே ஓகே.. சொல்லு..”

“அது அவ்ளோ அழகான ஜாடி. அதில் இருந்து கலர்கலரா லைட் வந்துச்சி. இளவரசியும் இளவரசனும் அந்த ஜாடிக்குள்ளே தண்ணீ இருக்கான்னு பக்கத்தில் போய் எட்டி பார்த்தாங்க.. கொஞ்சமாய் தண்ணீர் இருந்தது.  நல்ல வேளை.. இதாவது இருக்கேன்னு அந்த ஜாடியை எடுத்து அண்ணாந்து குடிச்சி பார்த்தா அனு..”

“அண்ணாந்து குடிச்சாளா? குட் கேர்ளா இருக்காளே!”

“ம்ம்.. ஆனா.. ஆச்சர்யம். பாட்டில்ல இருந்து தண்ணி அவள் வாய்க்கு வரலை. தலைகீழே கவிழ்த்தியும் வரலை. அந்த ஜாடியை வாங்கி இளவரசனும் ட்ரை பண்ணிப் பார்த்தான். அப்பவும் தண்ணீ வரலை”

“அப்புறம்..”

“ஜாடியைக் கீழே வைச்சிட்டு உள்ளே எட்டிப் பார்த்தாங்க ரெண்டு பேரும்.. அப்போ ஒரு மேஜிக் நடந்தது. ஒரு பச்சை கலர் லைட் வந்து இவங்க மேல் பட, இளவரசியும் இளவரசனும் குட்டியாகி பாட்டிலுக்குள்ள விழுந்துட்டாங்க.. “

“அச்சச்சோ!” அம்மாவுக்கு நிஜமாகவே கதை சுவாரஸ்யமாகி விட்டது.

“உள்ளே பாட்டிலுக்குள்ளே தண்ணி. ரெண்டு பேரும் மூழ்கப் பார்த்தாங்க. ரெண்டு பேருக்குமே நீச்சல் தெரியும். உடனே நீச்சலடிக்க ஆரம்பிச்சாங்க. கொஞ்ச நேரம் நீச்சலடிச்சதும் இரண்டு பேருக்குமே டயர்ட் ஆகிடுச்சி”

jar 1

“ஆமா பாவம்.. ஏற்கனவே தாகமா இருந்தாங்க இல்லையா!”

“ஆமா. இளவரசி என்ன பண்ணாங்க தெரியுமா?  கொஞ்சமா அந்த தண்ணியைக் குடிச்சாங்க.. என்ன ஆச்சர்யம். தண்ணி குடிச்சதும் இளவரசி கொஞ்சம் பெருசா ஆனாங்க. இளவரசிக்கு ஒரே ஆச்சர்யமா போயிடுச்சி. தன் தம்பியான இளவரசரையும்  உடனே நீச்சலடிச்சிகிட்டே தண்ணியை மடக் மடக்னு குடிக்க சொன்னாங்க. அவங்க குடிக்க குடிக்க, ஜாடில தண்ணீர் குறைஞ்சது. இளவரசியும் இளவரசனும் அளவு பெருசாகிகிட்டே வந்தாங்க.”

“வாவ்!!”

“தண்ணி காலியாகும் போது, இவங்களும் பெருசாகிட,  அதுக்கு மேல ஜாடியில்  இடம் இல்லாம ஜாடி ‘டமால்’னு வெடிச்சி இளவரசியும் இளவரசனும் மறுபடியும் நார்மல் சைசுக்கு வந்துட்டாங்க. அந்த மாயாஜால மோசமான கலர் கலர் கண்ணாடி ஜாடி சில்லு சில்லா சிதறிடுச்சி”

“ஹேஏஏஏ.. சூப்பர் அனு. சூப்பர் கதைல வினு?”

“அம்மா..” வகுப்பில் டீச்சர் கேட்ட, தெரியாத கேள்விக்கு பதில் சொல்லும் அளவுக்கு குறைவாக   வந்தது அனுவின் குரல்.

“என்ன மா?”

“அம்மாக்கு புரியலைக்கா..”

“எனக்கு என்ன புரியலை?” விளக்கு வெளிச்சத்தில் தன் பக்கத்தில் இருந்த இருவரையும் உற்றுப் பார்க்க முயற்சித்தார் அம்மா.

கண்ணில் பயத்துடன் படுத்திருந்த மகளையும் மகனையும் பார்த்து, வந்த சிரிப்பை அடக்கியபடி  , அப்பா சின்ன சிரிப்பு கலந்த குரலில் சொன்னார், “கதையோட கடைசி வாக்கியம் மறுபடியும் நீ ஒருமுறை சொல்லு அனு..”

அனு அமைதியாயிருக்க அம்மா சொன்னார், “என்ன கடைசி வாக்கியம். மாயாஜால, மோசக்கார கலர் கலர் கண்ணாடி ஜாடி சில்லு சில்லா……… வாட்? வாட்?”

“அம்மா.. அம்மா.. தெரியாம விழுந்துடுச்சிமா..” என்று எகிறிக் குதித்து அனுவும் வினுவும் அப்பாவின் அந்த பக்கம் போக, பொங்கி எழுந்த அம்மா, “இன்னைக்கு வாங்கின கண்ணாடி பாட்டிலை அதுக்குள்ளே உடைச்சுட்டிங்களா? இதுக்கு ஒரு கதை வேற” என்று தலையாணையால் மூவரையும் மொத்த சிரித்தபடி மூவரும் விளையாட்டில் குதித்து விட்டார்கள்🙂🙂

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments