“டாக்டர் சென் இருக்கார்ங்களா..”

  “இருக்கிறார் உங்களுக்கு என்ன வேணும்.” சென்னின் மூத்த மகன் கேட்டபடி நகர்ந்தான்.

  “என் பேரு மாரி உன்னோட அப்பாவோட ஃபிரண்ட்..இந்த பல் ரொம்ப நாளா பிரச்சனை பண்ணுது.. எதுவும் சாப்பிட முடியலை.”

  “அப்படியா வாங்க.. இங்கேயே வெயிட் பண்ணுங்க அப்பா இப்ப வந்திடுவார்..” கொஞ்சம் பயத்தோடு சொல்லி விட்டு நகர்ந்தான்.

  “அடடா..மாரியா.. வா வா..வந்து படு செக் பண்ணறேன்..”அந்த மருத்துவமனை நீருக்கு அடியில் ஆயிரம் அடிக்கு கிழே இருந்தது.

  டாக்டர் சென் என்பது மீன் இனத்தின் டாக்டர் அவர்.. ஆழ்கடலில் ஒரு சட்டம் இருந்தது. அங்கே இருக்கின்ற மீன் இனத்திற்கு டாக்டர் உண்டு.

  பெரிய மீன்கள் சிறு மீன்களை பிடித்து உண்ணும் போது அவைகளின் பற்களில் இடையே சிக்குகின்ற உணவு துணுக்குகளை  சுத்தம் செய்வது தான் இதனுடைய வேலை..

  இந்த மீன்களுக்கு எந்த கெடுதலும் செய்ய கூடாது என்பது அங்கே சட்டம்.

  இன்றைக்கு வரைக்கும்  அந்த சட்டத்தை யாரும் மீறியது கிடையாது.இன்றைக்கு மாரி என்கிற மீன் வந்து இருந்தது. அடிக்கடி வருகிற ரெகுலர் பேசண்ட் இந்த மாரி அதற்கு காரணம் அதனுடைய பற்களின் அமைப்பு..

  சாதாரண பற்கள் அதற்கு கிடையாது.  கோணல் மாணல்லான அமைப்பு அதனுடைய பற்களின் அமைப்பு.. அது மட்டும் அல்ல.. தலைக்கு மேல் ஒரு நீண்ட கொம்பு போல வேறு இருந்தது.

  அதனாலேயே பெரும்பாலும் யாரிடமும் பேசுவது கிடையாது.மனம் விட்டு பேசுவது டாக்டர் செனிடம் மட்டுமே..

  டாக்டர் சென்னிற்கு ஐம்பது குழந்தைகள்.. சமீபத்தில் தான் அவருக்கு பிறந்து இருந்தது. அவர் வசிக்கின்ற அதே இடத்தில் தான் அந்த மீன்களும் வாழ்ந்தது.

  சென் தன்னுடைய குழந்தைகள் மேல் உயிரையே வைத்து இருந்தது.

  இன்று வரையிலும் யாருமே எந்த கெடுதலும் செய்தது கிடையாது. மிகுந்த மகிழ்ச்சியோடு தான் வாழ்ந்து வந்தது.

  எல்லாம் அந்த திமிங்கிலம் வரும் வரையில் மட்டுமே.. அது இந்த பக்கம் வந்த பிறகு சென்னிற்கு நிறைய பயம் தொற்றி இருந்தது.

  திமிங்கலம் வந்ததில் இருந்தே அங்கிருந்த மீன்களை விழுங்க ஆரம்பித்தது.. அது நீண்ட தூரத்தில் இருந்து இங்கே சமீபத்தில் வந்து இருந்தது .

  இது வரையிலும் சென் பார்த்தது கிடையாது. ஆனால் பயம் மனதிற்குள் இருந்து கொண்டே இருந்தது.

  “இதோ இந்த பல்லில் தான் சிக்கி இருக்கு. என்ன மாரி எப்பவுமே பிரச்சனை தானா..”

  “என்ன செய்ய.. நான் வாங்கி வந்த வரம் போல இருக்கு.. எனக்கே கஷ்டமா இருக்கு அடிக்கடி இங்க வர..”

  “அட ஏன் இப்படி சொல்லற.. இதுதானே என்னோட வேலை..”சொன்னபடி வாய்க்குள் சென்று உணவு துணுக்குகளை எடுத்து விட ஆரம்பித்தது.

  “பார்த்து.. பார்த்து..மெதுவா..”

  “நீ வாயை  மூடிடாத..மூடியால் நான் அப்புறம் உயிரோட இருக்க மாட்டேன்.”அந்த நேரத்திலும் சென் ஜோக் அடித்தார்.

  “ஏன் சென்.. காமெடி பண்ணற.. நான் யாருக்கும் எந்த கெடுதலும் செய்ய மாட்டேன். “

  “அது தான் தெரியுமே..இப்ப எல்லாம் நிறைய பயம் வருது. “

  “புதுசா வந்த திமிங்கலத்தாலயா.. “

  “ஆமாம் மாரி இந்த பசங்களை காப்பாத்தனுமே அவங்களுக்காக தானே நான் வாழறேன். “

  “இங்கே எல்லாம் வராது.அந்த திமிங்கிலம்..”

  “எனக்கு நம்பிக்கை இல்லை இப்ப நான் ரொம்ப பயந்து இருக்கிறேன் முன்ன மாதிரி எல்லாம் இல்ல பசங்களை எப்படி காப்பாத்த போறேன்னு எனக்கு தெரியலை.

  முன்னெல்லாம் நிறைய சட்ட திட்டம் இருந்தது .அதுக்கு எல்லா மீன்களும் அடிபணிந்தாங்க ஆனா இப்போ அப்படி கிடையாது .எல்லார்கிட்டயும் ஒரு மாற்றம் தெரியுது .

  இந்த திமிங்கலம்  வந்த பிறகு எல்லாமே மாறிப்போச்சு. அவங்க அவங்க உயிரை காப்பாத்த நினைக்கிறார்களே தவிர யாருமே மத்தவங்கள பத்தி யோசிக்கிறது இல்ல.”

  “அப்படி எல்லாம் சொல்லாத.. அது மாதிரி எதுவும் ஆகாது நீ பசங்க கிட்ட சொல்லி வச்சிடு.. திமிங்கலம் மாதிரி பெரிய உயிரினம் வந்தா வெளியே வரக்கூடாது. இங்கேயே பத்திரமா இருக்கணும்னு..”

  “எனக்கு ஒன்னும் புரியலை மாரி.. இது குட்டி குகை மாதிரியான ஒரு இடம். உனக்கு தான் தெரியுமே..இந்த இடத்துல திமிங்கலத்தால உள்ள வர முடியாது தான் ஆனால் ஏமாற்றி வெளியே கூப்பிட்டா என்ன செய்ய முடியும். ஒரு வேளை நான் வர லேட் ஆகிடுச்சுன்னா.. பசங்க என்னை தேடி வெளியே வந்துட்டா.. இப்படி எல்லாம் தினம் பயந்துகிட்டு இருக்குறேன்..

  நானும் சாப்பிடணும் தானே பசங்களுக்கும் ஏதாவது கொண்டு வந்து கொடுக்கணுமே ..இங்கேயே இப்படியே இருக்க முடியாது இல்லையா..”

  “கவலைப்படாத சென் நானும் இங்க அடிக்கடி வருவேன் இல்லையா நானும் உன் பசங்களுக்கு காவலா இருப்பேன். என்னை நம்பலாம் .”

  “சரி எதனால இப்படி சிக்கி இருக்கு அப்படி என்ன தான் சாப்பிட்ட…”

  ” நீ கவனிச்சியா ..இதுக்கு நான் என்ன பதில் சொல்றது. வாய் எல்லாம் பல்லு இஷ்டத்துக்கு மாறி மாறி வளர்ந்து இருக்கும் போது என்ன சாப்பிட்டாலுமே சிக்கிக்குது மத்தவங்க வராங்களோ இல்லையோ தினம் தினம் உன்னிடம் வர்றது எனக்கு வழக்கமா போயிடுச்சு.”

  “நீ அத பத்தி எல்லாம் கவலைப்படாத..  நான் உனக்கு நண்பன் இல்லையா..நான் உனக்கு எப்பவுமே பக்க பலமா துணையா இருப்பேன். என்ன பிரச்சனையா இருந்தாலும் எந்த நேரமாக இருந்தாலும் நீ இங்க வந்து என்னை கூப்பிடலாம். உடனே சரி பண்ணி விட்டுடுவேன் “இப்படி பேசிய படியே வாய்க்குள் இருந்து வெளியே வந்தார் டாக்டர் சென்.

  ” நானும் தான் சென்..உனக்கு துணையாக இருப்பேன்.”மாரி பதிலுக்கு கூறியது.

  இருப்பதிலேயே மிகவும் குட்டியான மீன்.. அதனால் எல்லோருடைய வாய்க்குள்ளும் எளிதாக சென்று உணவு துணுக்களை கடித்து இழுத்தபடி வெளியே வர முடிந்தது.. சமயத்தில் அந்த உணவு துணுக்குகள் தான் இவருடைய வயிற்றுப் பசிக்கும் உணவாக மாறும்.

  “நீ மட்டும் தான் சென் என்கிட்ட இயல்பா பேசுற.. மத்தபடி எல்லாருமே என்கிட்ட பேசுறது இல்ல வாயில் பல்லு தான் இப்படி இருக்குன்னா..அதுக்கேத்த மாதிரி மண்டையில வேற நீளமா இது மாதிரியான ஒரு கொம்பு வேற.. இதனால என்ன பிரயோஜனம். யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லாம எதுக்காக அந்த கடவுள் இந்த மாதிரி என்னை அசிங்கமா படைத்தானோ தெரியல..”

  “ஏன் மாரி இப்படி எல்லாம் சொல்ற.. மீன் இனத்தில் நிறைய வகை உண்டு இல்லையா அதுல நீ ஒரு அரிய வகை மீன்.. அது தான் உண்மையும் கூட.. அதனால நீ தேவையில்லாம எதை பத்தியும் யோசிக்காத..

  இப்படி படைச்சதால் நீ எதுக்கு உபயோகமாக மாட்டேன்னு  எப்படி சொல்லற நிச்சயமா உனக்கும் அந்த கடவுள் ஏதாவது ஒரு வேலை கொடுத்து இருப்பாரு..”

  ” என்னத்த பெருசா வேலை கொடுத்துட்டாரு.. இதோ இப்படித்தான் சுத்திக்கிட்டு இருக்குறேன்.. எங்க போறேன். என்ன செய்யறேன். எதுவுமே புரியுது இல்லை..” சற்றே கவலையாக பேசிவிட்டு நகர்ந்தது.

  சென்னின் மன பயம் உண்மையாக நடக்கும் நேரமும் வந்தது .அந்த திமிங்கலம் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த பக்கமாக வந்திருந்தது.

  அது வந்த நேரமோ என்னவோ சென்னின் குழந்தைகள் அனைவருமே அன்றைக்கு அவர்கள் இருந்த அந்த குகைக்கு வெளியே  விளையாடு கொண்டிருந்தனர் .

  அந்த நேரத்தில் வந்த திமிங்கலம் சற்றும் யோசிக்காமல் மொத்த மீன் குஞ்சுகளையும் தன்னுடைய வாயால் விழுங்கிவிட்டது. மின் குஞ்சுகளை மட்டும் அல்ல கூடவே நிறைய தண்ணீரையும்..

  பாம்… பாம்… என்கின்ற அந்த சத்தம் அங்கே அருகில் இருந்த பலரையுமே பயப்படுத்தியது .சென் சற்று தூரத்தில் சென்றிருந்தவர்க்கு அந்த குரல் கேட்கவும் பயந்து அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தார்.

  சென்னின் பதட்டம் மாரிக்கும் தொற்றிக் கொண்டது. இருவருமே வேகமாக நீந்தி அந்த இடத்திற்கு வந்தனர் .அங்கே வந்து பார்க்கையில் சென்னின் குழந்தைகள் யாருமே இல்லை.

  சென்னிற்கு மனது ஆறவே இல்லை அந்த இடத்திலேயே அமர்ந்து அழ ஆரம்பித்துவிட்டது.”.படிச்சு படிச்சு சொல்லிட்டு போனேன். என்னோட பசங்ககிட்ட..விளையாட வெளியே வராதிங்கன்னு.. இப்படி அநியாயமா சொன்ன பேச்சைக் கேட்காமல் வெளியே வந்து திமிங்கலத்துக்கு இறையாகிட்டாங்களே.‌

  திமிங்கலம் வாய்க்குள்ள போனவங்க யாராலயுமே திரும்ப வர முடியாதுன்னு சொல்லுவாங்களே”என்று சொல்லி அழ அப்போதுதான் மாரிக்கு ஒரு யோசனை தோன்றியது .

  “அப்படி கிடையாது சென்..  சில நேரத்துல திமிங்கலம் நிறைய தண்ணீர் குடிச்சிட்டு மொத்தமாக வெளியேற்றும். ஒருவேளை அப்படி வெளியேற்றும் போது நம்ம பசங்க வரவும் வாய்ப்பு இருக்கு .நீ இங்கேயே இரு நான் பார்த்துவிட்டு வரேன்” என்று சொல்லியபடி வேகமாக திமிங்கலம் சென்ற திசையை நோக்கி சென்றது .

  அங்கே திமிங்கலம் மொத்தமாக நிறைய நீரை குடித்துவிட்டு சுற்றிக் கொண்டிருந்தது .கோபம் அத்தனை வந்தது மாரிக்கு.. ‘குழந்தைகளை மொத்தமாக வாய்க்குள் விழுங்கி விட்டு இப்போது சந்தோஷமாக நீந்துகிறாயா’ என்றுமனதில் நினைத்தபடியே வேகமாக சென்று தன்னுடைய நீட்ட கொம்புகளால்  வேகமாக மோத ஏற்கனவே வாய்க்கால் வைத்திருந்த நீரை மொத்தமாக  பெரிய சத்தத்தோடு வெளியேற்றியது .

  திமிங்கலம் வெளியேறிய நீரோடு சென்னின் ஐம்பது குழந்தைகளுமே வெளியே வந்து விழுந்தது .

  விழுந்த உடனேயே  மாரி வேகமாக அனைவரையும் அழைத்துக் கொண்டு சென் இருந்த இடத்திற்கு வந்திருந்தது .

  சென்னிற்கு தன்னுடைய குழந்தைகளை பார்க்கவும் அத்தனை சந்தோஷம்.. மகிழ்ச்சியாக அனைத்து குழந்தைகளையும் கட்டி அணைத்துக் கொண்டது .

  புறத்தோற்றம் எப்படி இருந்தாலும் மாரியின் அகத்தோற்றம் அத்தனை அழகு..கூடவே இருவரது நட்பும்..

  உண்மைதானே குழந்தைகளே!!

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments