“வணக்கம் நண்பர்களே! நான் உங்க அனு வந்திருக்கேன். இன்னிக்கு பிண்டு லீவு நண்பர்களே, அவனுக்கு பேட்டரி போட மறந்துட்டேன். அதுனால நான் மட்டும் தான் இன்னிக்கு உங்களுக்கு எக்ஸ்பிரிமெண்ட் செஞ்சு காட்டப் போறேன்!” என்று மகிழ்ச்சியோடு கூறினாள் அனு.

“தேவையான பொருட்கள் எல்லாம் நான் எடுத்து வெச்சுட்டேன் நீங்களும் எடுத்து வெச்சுடுங்க ஃப்ரெண்ட்ஸ்” – அனு.

தேவையான பொருட்கள்

1. கம் அல்லது க்ளூ – பெவிகால் க்ளூ

2. தூள் உப்பு

3. வாட்டர் கலர்ஸ் அல்லது போஸ்டர் கலர்ஸ்

4. தடிமனான ஏ4 காகிதம்

5. பென்சில்

6. இங்க் ஃபில்லர்/ ட்ராப்பர்

அனு, “என்ன ஃப்ரெண்ட்ஸ்! எல்லா பொருட்களையும் எடுத்துட்டு வெச்சுட்டீங்களா? எல்லாமே நம்ம வீட்டுல இருக்குற பொருட்கள் தானே! அடுத்து வாங்க செய்முறையைப் பார்க்கலாம்”

செய்முறை

1. முதலில் காகிதத்தில் உங்களின் மனதிற்குப் பிடித்த எளிமையான ஓவியத்தை பென்சிலின் மூலம் வரைந்து கொள்ளவும்

2. பிறகு வரைந்த ஓவியத்தின் கோட்டின் மேல் கோந்து அல்லது கம் தடவவும்.

3. அதன் பின் கோந்தின் மேல் உப்புத் தூளினைத் தூவவும்.

4. சிறிது சிறிதாக கோந்து போட்டு உப்பினைத் தூவிக் கொண்டே வந்தால் வேலை எளிதாக முடியும்.

5. தூவிய உப்பு காய்ந்த பிறகு, உங்களின் மனதிற்குப் பிடித்த நிறங்களை இங்க் ஃபில்லரின் மூலம் எடுத்து உப்பின் மீது சொட்டு சொட்டாக இடவும்.

6. சற்று நேரம் கழித்துப் பார்க்கையில் அழகிய உப்பு ஓவியம் தயாராகிவிடும்.

இந்த உப்பு ஓவியம் சற்று நேரம் மட்டுமே இருக்கும் அதன் பிறகு தானாகவே உதிரிந்து விழுந்துவிடும்.

“என்ன ஃப்ரெண்ட்ஸ் அழகான ஓவியத்தை ஈசியா வரைஞ்சுட்டோம்ல. இதுக்கு பின்னாடி என்ன அறிவியல் இருக்குன்னு பார்ப்போமா!”

அறிவியல் உண்மைகள்

உப்பின் மேல் நிறக்கலவைகளை போடும் போது உப்பு அதன் ஈரப்பதத்தை உறிந்து கொள்ளும். அதனால் நிறம் மட்டும் அழகாய் வெளியே தெரியும். சில நிமிடங்களுக்குப் பிறகு உப்பில் இருக்கும் நீர் அனைத்தும் நீராவி ஆகி மறைந்து போகும் எனவே உப்பு ஓவியம் தானாகவே உதிர ஆரம்பித்துவிடும்.

“என்ன நண்பர்களே! இந்த ஈசியான அறிவியல் சோதனையை செய்து பார்க்கிறீர்களா? அடுத்த மாதம் வேற ஒரு சூப்பரான எக்ஸ்பிரிமெண்டோடு வரேன். பை பூஞ்சிட்டுக்களே!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *