கின்னியின் உணவுப்பை

சின்னியும் கின்னியும் ஒரே வகுப்பில் படிக்கிறார்கள். சின்னிக்கு பள்ளியின் வடக்குப் பக்கத்து ஊரில் வீடு. கின்னிக்கு தெற்குப்பக்க ஊர்.

சின்னிக்கு கின்னியை கொஞ்சமாக பிடிக்கும். ஆனால் அவன் கொண்டு வரும் மதிய உணவு என்றால் ரொம்பவே பிடிக்கும்.

அதனால் காலை வகுப்பு இடைவேளையின் போதே எப்படியாவது கின்னியின் உணவை எடுத்து உண்டு விடுவான் சின்னி.

சின்னி தன் உணவை காலி செய்து விடுவதாக கின்னி அவன் தாயிடம் சென்று கூறினான்.

அதனால் கின்னியின் அம்மா சின்னிக்கும் சேர்த்து உணவு கொடுத்து விட ஆரம்பித்தார்.

அவனுக்கும் உணவு சேர்த்து சுமந்து வருவது ரொம்பவும் கடினமாகத் தோன்றியது கின்னிக்கு.

அதனால் சின்னியை கொஞ்சம் பிடிக்காமல் போய் விட்டது கின்னிக்கு.

ஒரு சமயம் பெரிய்ய்ய மழை பெய்தது. அதுவரை அப்படி ஒரு மழை அந்தப் பகுதியில் பெய்ததே இல்லை. பனை மர உயர அளவிற்கு எங்கு பார்த்தாலும் வெள்ளம் வெள்ளம் வெள்ளம்…

வடக்குப்பக்க ஊர் கொஞ்சம் மேடான இடத்தில் இருந்ததால் மழை நீர் வடிந்து விட்டது.

ஆனால் தெற்குப் பக்க ஊர் பள்ளமான பகுதியில் இருந்ததால் ஊரே நீரில் மூழ்கி விட்டது. எல்லா வீடுகளும் நீருக்குள் மாட்டிக் கொண்டன.

பள்ளி கூட வெள்ளம் வடியும் வரை விடுமுறை விடப்பட்டது. அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டன. அந்தப் பகுதியில் எந்த தொழிற்சாலையுமே இயங்கவில்லை.

அதனால் தினமும் சீக்கிரமே வேலைக்குப் போய் தாமதமாக வீடு வரும் சின்னியின் பெற்றோர் கூட அவனுடன் வீட்டிலேயே இருந்தார்கள்.

அப்பா அம்மா உடன் இருப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும் கின்னியை நினைத்து வருத்தமாக இருந்தது சின்னிக்கு.

சின்னி தன் நண்பன் கின்னியை நினைத்து கவலை அடைந்தான். அதனால் அவன் சோகம் தாளாமல் அழ ஆரம்பித்தான்.

சின்னியின் பெற்றோர் அவனை சமாதானம் செய்தனர். பின்னர் வடக்கு ஊர் மக்கள் எல்லாம் போய் தெற்கு ஊர் மக்களைத் தங்கள் ஊருக்கு அழைத்து வந்தார்கள்.

அந்த ஊரின் சத்திரங்களிலும் கோவில்களிலும் மசூதிகளிலும் சர்ச்களிலும் தெற்கு ஊர் மக்கள் தங்க வைக்கப்பட்டார்கள்.

சின்னி தன் பெற்றோருடன் வந்து கின்னியையும் அவனது பெற்றோரையும் தன் வீட்டிற்கு அழைத்துப் போனான்.

அவர்களை மிகவும் அன்பாகவும் பாதுகாப்பாகவும் கவனித்துக் கொண்டான்.

தினமும் சுவையான உணவும் கொடுத்தான். வெள்ளம் வடியும் வரை சின்னியின் வீட்டிலேயே தங்கி இருந்தார்கள் கின்னியின் குடும்பம்.

வெள்ளம் வடிந்த பின் வழக்கம் போல பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தார்கள்.

இப்போது கின்னிக்கு சின்னியை ரொம்ப பிடித்தது. அதனால் அவனாகவே சின்னிக்கும் சேர்த்து உணவு கொண்டு வந்தான்.

இப்போது அந்த உணவுப் பை கனமாகவே தோன்றவில்லை கின்னிக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *