” தாத்தா, தாத்தா, நம்ப பக்கத்து வீட்டு நாய் நிறையக் குட்டி போட்டிருக்கு இல்லையா? அந்தக் குட்டிங்க எல்லாம் கீ, கீன்னு சின்னக் குரலில கத்தறது குழந்தைங்க கத்தற  மாதிரியே இருக்கு எனக்கு” என்றான் அந்தச் சிறுவன்.

ஆமாம், அவர்களுடைய பக்கத்து வீட்டில் வளர்த்து வரும் உயர் ஜாதி நாய் நேற்று இரவு ஐந்து குட்டிகளை ஈன்றெடுத்திருந்தது. பக்கத்து வீடு என்று சொல்ல முடியாது. பெரிய மாளிகை தான் அது.

நகரமும் இல்லாமல் கிராமமும் இல்லாமல் இருந்த அந்த ஊரின் ஒரே ஒரு பெரிய மாளிகை அது தான். ஊரிலேயே செல்வாக்கு வாய்ந்த ஒரு பெரியவரின் குடும்பம் அந்த மாளிகையில் வசித்து வந்தது.

அந்த ஊரில் வசிக்கும் குடும்பங்களில் அதிக வசதி வாய்ந்த குடும்பம் என்பதால் அந்த ஊரில் வசித்த அனைவருமே அந்த வீட்டினரை மதிப்புடன் தான் பார்ப்பார்கள். வீட்டின் தலைவரான அந்தப் பெரியவர் குணத்தில் தங்கமானவர். பண்பிலும், பழகும் விதத்திலும் சிறந்தவர் என்பதால் ஊர் மக்களுக்கு அவரை மிகவும் பிடிக்கும். ஏழை எளியவர்களுக்கு வலியப் போய் முடிந்த உதவிகளைச் செய்வார். மரியாதையுடன் நடத்துவார்.

அந்த மாளிகையில் தான் உயர் ஜாதி நாய் ஒன்றை வளர்த்து வந்தார்கள். வீட்டைக் காவல் காப்பதற்காகக் கொண்டு வரப்பட்டாலும் இப்போது எல்லோரோடும் நட்புடன் பழகியதால் அந்த நாயை எல்லோருக்கும் பிடிக்கும். வீட்டின் அங்கமாகவே அந்த நாயையும் பிரியத்துடன் கவனித்துக் கொண்டார்கள். அக்கம் பக்கத்தினருக்கும் ரோஸியை, (அந்த நாயின் பெயர் தான் ரோஸி) மிகவும் பிடிக்கும்.

வெள்ளை, கருப்பு, மஞ்சள், பிரவுன், கறுப்பும் வெள்ளையும் கலந்த நிறம் என்று விதவிதமான நிறங்களில் அழகான நாய்க்குட்டிகள். தாய் ரோஸி தனது குட்டிகளை அன்புடன் சுற்றி வந்தது.

ஒரு குட்டி பிறந்தவுடன் இறந்து போக, நான்கு குட்டிகள் மீதமிருந்தன. நான்கிலும் வெள்ளை நிறக்குட்டி அழகோ அழகு. உடல் முழுவதும் புஸுபுஸுவென்று முடியுடன் வெள்ளை வெளேரென்று அழகாக இருந்த அந்தக் குட்டிக்கு, ” வெண்பனி” என்று பெயர் வைத்தார் வீட்டு எஜமான்.

இரண்டு நாட்கள் கழிந்தன. பக்கத்து வீட்டுச் சிறுவன் அருண் தனது ஜன்னலில் இருந்து தாயுடன் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த அந்தக் குட்டிகளை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த வெண்ணிறக் குட்டியைப் பார்க்கப் பார்க்க அவனுக்கு, தன் வீட்டிற்குக் கொண்டு வந்து வளர்க்க ஆசையாக இருந்தது.

Dogg
படம்: அப்புசிவா

” தாத்தா, நீங்க பக்கத்து வீட்டு அங்கிள் கிட்டப் பேசி அந்த வெள்ளை நிறக் குட்டியை எனக்கு வாங்கித் தரீங்களா? நாமளே அதை வளக்கலாம் தாத்தா ” என்றான். அவனுடைய பேச்சைக் கேட்ட தாத்தா பெருமூச்செறிந்தார்.

” அருண், நானும் அப்படி நெனைச்சுத் தான் பக்கத்து வீட்டு ஐயா கிட்டப் பேசப் போனேன். ஆனா அவரு ஏற்கனவே அவரோட நண்பர்களுக்குத் தரதா பிராமிஸ் பண்ணிட்டாராம். நமக்கு அதிர்ஷ்டம் அவ்வளவு தான். பரவாயில்லை விடு. வேற நாய்க்குட்டி நான் உனக்கு வாங்கிட்டு வந்து தரேன் ” என்று சொல்லி விட்டு நகர்ந்தார்.

ஆனால் பாவம் அருணால் அந்த வெள்ளை நிறக் குட்டியை மறக்கவே முடியவில்லை. அன்று இரவு தூங்கும் போது கூடக் கனவில் அந்த வெண்பனி தான் வந்து அவனுடன் விளையாடிக் கொண்டிருந்தது.

பக்கத்து வீட்டில் அடுத்த நாள் காலையில் இருந்து பரபரப்பாக இருந்தது. வாகனங்களில் வீட்டு எஜமானரின் நண்பர்கள் வந்து இறங்கி, தங்களுக்குப் பிடித்த நாய்க்குட்டிகளை எடுத்துப் போய்க் கொண்டிருந்தார்கள்.

மதிய நேரமாகிவிட்டது. ஜன்னல் வழியே பக்கத்து வீட்டையே காலையில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அருண், தாத்தாவைக் கூப்பிட்டான். அவன் குரலில் ஒரே பரபரப்பும், மகிழ்ச்சியும் தெரிந்தன.

” தாத்தா, தாத்தா, இங்கே பாருங்க அதிசயத்தை” என்று அங்கே வந்த தாத்தாவிடம் பக்கத்து வீட்டுத் தோட்டத்தைச் சுட்டிக் காட்டினான்.

அவன் காட்டிய திசையில் தோட்டத்தில் தாய் நாயுடன் அந்த வெள்ளை நிறக் குட்டி வெண்பனி மட்டும் தனியாக சோகத்துடன் நின்று கொண்டிருக்க, ரோஸியோ தன்னிடம் மிஞ்சியிருந்த ஒரே குட்டியைப் பரிவுடன் பார்த்துக் கொண்டிருந்தது.

” அதிசயமா இருக்கே! எல்லாக் குட்டிகளையும் நண்பர்களுக்குக் கொடுக்கப் போறதா ஐயா என் கிட்ட சொன்னாரே? சரி, இரு, நான் போய் என்ன ஆச்சுன்னு விசாரிச்சுட்டு வரேன் ” என்று சொல்லி விட்டுப் பக்கத்து வீட்டுக்கு விரைந்தார் அருணின் தாத்தா. அவர் பின்னாலேயே தானும் போகலாமா, வேண்டாமா என்று யோசித்த படி இருந்தான் அருண்.

” வாங்க, வாங்க, அருண் எப்படி இருக்கான்? ” பக்கத்து வீட்டுப் பெரியவர், அருணைப் பற்றித் தாத்தாவிடம் விசாரித்தார்.

” நல்லா இருக்கான். அந்த நாய்க் குட்டிகளை நண்பர்களுக்குக் கொடுக்கப் போறதாச் சொன்னீங்களே? இந்தக் குட்டியை  மட்டும் யாருக்கும் கொடுக்கலையா? ” என்றார் தாத்தா.

” ஆமாம், வந்தவங்க யாருக்குமே இதைப் பிடிக்கலை. சரி, அம்மா கிட்டயே இருந்துட்டுப் போகட்டுமேன்னு விட்டுட்டேன் “

” அப்படியா? ஆச்சரியமாக இருக்கே! இதைப் பிடிக்கலையா? இது தான் உள்ளத்துக்குள்ள ரொம்ப அழகுன்னு அருண் சொல்லறான்” என்றார் தாத்தா பெருமையுடன்.

” அழகு தான். அது நடக்கும் போது நீங்க பாக்கலையா? ” என்று பெரியவர் சுட்டிக் காட்டினார். அருணின் தாத்தா அப்போது தான் அதை கவனித்தார். அந்த வெள்ளை நாய்க்குட்டி நொண்டி நொண்டி நடப்பதை கவனித்தார்.

” அதுக்குப் பிறப்பிலேயே குறை. காலில் பிரச்சினை. அதுனால தான் இப்படி நடக்குது. இந்தக் காரணத்தால தான் யாரும் இந்தக் குட்டியை யாரும் எடுத்துக்கலை” என்றார் பெரியவர் வருத்தத்துடன். அருணின் தாத்தா அதிர்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருந்தவர், டக், டக்கென்ற சத்தத்தைக் கேட்டுத் திரும்பினார்.

ஊன்றுகோல்களின் உதவியுடன் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்த அருணைப் பரிதாபமாகப் பார்த்தார் தாத்தா.

” அங்கிள், நான் இந்தக் குட்டியை  வளக்கட்டுமா? எனக்குத் தரீங்களா? ” என்று கேட்டபோது பெரியவரால் மறுக்க முடியவில்லை.

வெண்பனி வேகமாக வந்து அருணின் அருகே நின்றது. அவர்களுடைய நட்பை இனி யாராலும் பிரிக்க முடியாது. ரோஸி பலமாகக் குரைத்துத் தனது சம்மதத்தைத் தெரிவித்தது. பக்கத்து வீட்டுப் பெரியவரும், அருணின் தாத்தாவும் தங்களுடைய கண்ணீரை அடக்க மிகவும் கஷ்டப்பட்டார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments