ஒரு உழவரிடம் விசுவாசமாக வேலை செய்த ஒரு குதிரை இருந்தது. அதற்கு வயதாகிவிட்டதால் அதனால் அதிக வேலை செய்ய முடியவில்லை. அது வேலை செய்யவில்லை என்பதால், உழவர் அதற்குத் தீனி கொடுப்பதை நிறுத்திவிட்டார்.
“இனிமேல் ஒன்னால எனக்கு எந்தப் பயனும் இல்ல. வேலை செய்ய, ஒனக்கு இன்னும் தெம்பு இருக்குதுன்னு, நீ நிரூபிக்கணும்; அதுக்கு ஒரு சிங்கத்தை இங்க கொண்டு வரணும்; அப்ப தான் நான் ஒன்னை இங்கே வைச்சிக்குவேன். இல்லேன்னா, இந்தக் குதிரை லாயத்திலிருந்து நீ வெளியே போயிடு” என்று சொல்லி வெளியே துரத்தி விட்டார் மாஸ்டர்.
குதிரைக்கு மிகவும் வருத்தமாகிவிட்டது. வெயில், மழையிலிருந்து தப்பிக்க, அது ஒரு காட்டுக்குப் போனது. அங்கே ஒரு நரி அதனைப் பார்த்தது.
“ஏன் இப்பிடி சோகமாத் தலையைத் தொங்கப் போட்டுக்கிட்டு இருக்கிறே? எப்பவும் தனியாவே இருக்கிறே?” என்று நரி குதிரையிடம் கேட்டது.
“பேராசையும், விசுவாசமும் ஒன்னா ஒரு வீட்டுல இருக்க முடியாது போலருக்கு. என் மாஸ்டர் பல வருஷமா நான் அவருக்கு உண்மையா உழைச்சுக் கொட்டுனதை மறந்துட்டாரு. இப்ப என்னால நிலத்தை ஆழமா உழ முடியலை. அதனால் அவரு எனக்குச் சாப்பாடே கொடுக்காம, வீட்டை விட்டுத் துரத்தி விட்டுட்டாரு” என்றது.
“ஒனக்கு ஒரு வாய்ப்புக் கூட கொடுத்துப் பார்க்காமலா?” என்று கேட்டது நரி.
“அவர் கொடுத்த வாய்ப்பு, ரொம்ப மோசமானது. நான் ஒரு சிங்கத்தை, அவர்கிட்ட கொண்டு வர்ற அளவுக்கு வலிமையா இருந்தா, அவரு என்னை வைச்சுக்குவாராம். என்னால அது முடியாதுன்னு அவருக்கு நல்லாவே தெரியும்” என்றது குதிரை.
“நான் ஒனக்கு உதவி பண்றேன். கீழே நல்லா காலை நீட்டிப் படுத்துக்கோ. செத்துப் போனது மாதிரி, அசையாம கிட” என்றது நரி.
குதிரை நரி சொன்னது போலவே, கீழே செத்துப் போனது போல் கிடந்தது.
நரி பின்னர் கொஞ்ச தூரத்திலேயே இருந்த சிங்கத்தின் குகைக்குச் சென்றது.
“அங்க ஒரு குதிரை செத்துக் கிடக்குது; என் கூட வாங்க; ஒங்களுக்கு நல்ல சாப்பாடு கிடைக்கும்” என்று சிங்கத்திடம் நரி சொன்னது.
அதைக் கேட்ட சிங்கம், நரியுடன் சென்றது.
“இங்க ஒங்களுக்குச் சாப்பிட வசதி படாது; அந்தக் குதிரையை ஒங்க வாலுல கட்டி விடறேன். நீங்க இதை இழுத்துக்கிட்டே போயி, ஒங்க குகையில வைச்சி நல்லாப் பிய்ச்சித் தின்னலாம்” என்று குதிரையின் பக்கத்தில் போய் நின்ற போது, நரி சொன்னது.
சிங்கத்துக்கு நரியின் அந்த யோசனை பிடித்திருந்தது. எனவே குதிரையை அதன் வாலில் சேர்த்துக் கட்ட அது கீழே படுத்தது. ஆனால் நரி குதிரையின் வாலைச் சிங்கத்தின் கால்களோடு சேர்த்துக் கெட்டியாகக் கட்டியது.
கட்டி முடித்தவுடன் நரி குதிரையின் தோளில் தட்டி, “வெள்ளை குதிரையே இழு” என்றது. குதிரை பாய்ந்து எழுந்து, சிங்கத்தை வாலால் இழுத்துச் சென்றது.
சிங்கம் பயங்கரமாகக் கர்ஜித்தது. காட்டில் இருந்த பறவைகள் எல்லாம் பயந்து நடுங்கிப் போய்ப் பறந்தன. ஆனால் குதிரை சிங்கத்தை அந்த நாட்டின் வழியே இழுத்துக் கோண்டு, அதன் மாஸ்டர் வீட்டுக்குச் சென்றது.
அவர் சிங்கத்தைப் பார்த்தவுடன், “இனிமே நீ இங்கேயே இருக்கலாம்” என்று குதிரையிடம் சொன்னார். அதன் கடைசிக் காலம் வரை, அதற்குப் போதுமான தீனியும் தின்னக் கொடுத்தார்.
(ஆங்கிலம் – கிரிம் சகோதரர்கள்)
(தமிழாக்கம் – ஞா.கலையரசி)
பெயர் ஞா.கலையரசி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.com என் வலைப்பூ. புதிய வேர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன்.