ஒரு கிராமத்தின் நடுவில் ஒரு குளம். அந்தக் குளத்தில் பல வகையான மீன்கள் இருந்தன. அவற்றில் மூன்று மீன்கள் நல்ல நண்பர்கள்.

ஒரு மீன் முன்யோசனை மீன். அதாவது வருமுன் காப்பான். எந்த விஷயத்தையும் பெரிய பிரச்சனையாக மாறுவதற்கு முன்னாலே நன்றாக யோசித்து செயலாற்றி விடும். அதனுடைய முன்யோசனை பல சமயம் அதற்கு நல்ல பலன்களைத் தந்திருக்கிறது.

இரண்டாவது மீன் சமயோசித மீன். அதாவது வருங்கால் காப்பான். மிகுந்த புத்திசாலி. இக்கட்டான தருணத்தில் யோசித்து சட்டென்று முடிவெடுத்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டு விடும்.

அதனுடைய சமயோசித புத்தி அந்த மீனுக்குக் கிடைத்த மிகப் பெரிய வரப்ரசாதம்.

மூன்றாவது மீனுக்கு இந்த இரண்டு நற்குணங்களும் கிடையாது. அது வந்த பின் காப்பான். விதியை நம்பி எந்த முயற்சியும் எடுக்காமல் இருந்து விடும். எது நடந்தாலும் விதிப்படி தான் நடக்கும். நாம் என்ன செய்தாலும் நடக்கப்

போவதை நம்மால் தடுக்க முடியாது என்று உறுதியாக நம்புகின்ற மீன்.

மூன்று மீன்களும் வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்டிருந்தாலும் நட்புடன் பழகி வந்தன.

Fish
படம்: அப்புசிவா

ஒரு நாள் பகல் நேரத்தில் இரண்டு மனிதர்கள் குளத்தருகில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.

“நம்முடைய ஊரில் இருக்கும் குளத்தில்

மீன்களே இல்லை. வெகுவாகக் குறைந்து விட்டன. நமது மீன் பிடிக்கும் தொழிலே மிகவும் மலிந்து விட்டது.”

“என்ன செய்வது என்று புரியவில்லை. இந்தக் குளத்தில் நிறைய மீன்கள் இருக்கின்றன. நாளை நாம் இங்கு வந்து

மீன் பிடிக்கலாம் . நிறைய மீன்கள் கிடைக்கும்”

பேசிக் கொண்டே அவர்கள் இருவரும் அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டார்கள்.

அவர்கள் பேசியதை அந்த மூன்று மீன்களும் கேட்டுக் கொண்டிருந்தன.

முன்யோசனை மீன் அதாவது வருமுன் காப்பான் மீன் சொன்னது,

“நாளை வலையுடன் வந்து நம்மைப் பிடித்துக் கொண்டு போவார்கள் இவர்கள்.

அதனால் நாம் இன்றே இங்கிருந்து போய்விடலாம்.”

மற்ற இரண்டு மீன்களும் ஒத்துக் கொள்ளவில்லை.

“மனிதர்கள் சொல்வதைப் போல் எப்போதும்

செய்வதில்லை. அதனால் நாம் இப்போது எதற்கும் கவலைப் படத் தேவையில்லை.

பிரச்சினை வரும் போது பார்த்துக் கொள்ளலாம்.”

முன்யோசனை மீன் சொன்னது.

“இல்லை. அப்படி எல்லாம் நினைக்கக் கூடாது. நாளைக் காலை திடீரென அவர்கள் வலையுடன் வந்து விட்டால் என்ன செய்வது? அதனால் இன்றே இங்கிருந்து கிளம்பிப் போவது தான் நல்லது. நீங்கள் வரவில்லை என்றால் பரவாயில்லை. நான் கிளம்புகிறேன்.”

என்று சொல்லி அங்கிருந்து கிளம்பி விட்டது வருமுன் காப்பான்.

அடுத்த நாள் காலையில் அந்த இரண்டு மனிதர்களும் வலையுடன் வந்து வலையை வீசினர். புத்திசாலி மீனும் விதியை நம்பும் மீனும் வலையில் மாட்டிக் கொண்டன.

புத்திசாலி மீன் அதாவது வருங்கால் காப்பான் இறந்து போனது போல்

கண்களை மூடிக் கொண்டு அசையாமல் கிடந்தது. உடனே அந்த மனிதர்கள்,

” இந்த மீன் இறந்து கிடக்கிறது. எப்போது இறந்ததோ தெரியவில்லை.”

என்று நினைத்துக் கொண்டு குளத்தில் தூக்கிப் போட்டு விட்டனர். உயிர் தப்பிய மீன் மகிழ்ச்சியுடன் அங்கிருந்து நீந்திச் சென்றது.

விதியை நம்பும் மீன் அதாவது வந்த பின் காப்பான் தப்பித்துப் போக முடியாமல் துள்ளித் துள்ளிக் குதித்தது. அந்த மனிதர்கள்  விதியை நம்பும் மீனைக் கம்பால் அடித்துக் கொன்றனர்.

விதியை நம்பி எந்த முயற்சியும் எடுக்காமல் இருந்ததால் உயிரையே இழந்தது அந்த மீன்.

( நான் சிறுவயதில் கேட்ட பஞ்சதந்திரக் கதை)

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments