புளி சாப்பிட்ட புலி

ஒரு நாட்டில் ஒரு காடு இருந்தது. அந்த காட்டில் ஒரு புலி இருந்தது. புலிக்கு புளிக்குழம்பு சாப்பிட வேண்டும் போல ஆசையாக இருந்தது.

ஆனால் புளிக்குழம்பு எப்படி செய்ய வேண்டும் என்று புலிக்குத் தெரியவில்லை.

அதனால் புலி ஒரு புளியமரத்திடம் சென்று புளிக்குழம்பு செய்வது பற்றி கேட்டது.

புளியமரம் தனக்கு புளிக்குழம்பு என்றால் என்னவென்றே தெரியாது என்று புலியிடம் சொன்னது.

புளிக்குழம்பு செய்யத் தெரியாத புளியமரத்தால் எரிச்சலான புலி புளியமரத்தின் மேல் ஏறி புளியம்பழங்கள் நிறைந்த புளியமரத்துக் கிளையை ஓங்கி அடித்தது.

புளியம்பழங்கள் நிறைந்த கிளை அப்படியே சரிந்து மரத்தடியில் இருந்த மழைக்குட்டையில் விழுந்தது. கிளை விழுந்த வேகத்தில் புலியும் சரிந்து மரத்தின் மறுபுறமாக குதித்தது.

“புளிக்குழம்பு தெரியவில்லை என்பதற்காக என் கிளையை உடைத்துவிட்டாயே வலிக்கிறதடா” என வேதனையில் கத்தியது புளியமரம்.

தன் தவறை உணர்ந்த புலி “என்னை மன்னித்து விடு புளியமரமே, உன் புளியங்கிளையை உன்னிடமே கொடுக்கிறேன்” என குட்டைக்கு அருகில் சென்றது.

அங்கிருந்த வழுவழுப்பான மண் சரிவில் சிக்கி குட்டைக்குள் விழுந்துவிட்டது புலி.

படம்: அப்புசிவா

அப்போது புலியின் வாய்க்குள் குட்டை நீர் சென்றது.

புளிப்பும் இனிப்புமான சுவையில் இருந்தது குட்டை நீர். புலியால் குட்டை நீரை ருசி பார்க்காமல் இருக்க முடியவில்லை. ருசி பார்த்தபின் அதை விட்டு வெளியேறவும் மனமில்லை.

புளிக்குழம்பு இப்படித்தான் இருக்கும் என தானாகவே முடிவு செய்த புலி, தன் புளிக்குழம்பு வைக்கும் திறனைக் கண்டு தானே வியந்தது.

“புளியமரமே இனி உன் இலை கூட உதிராமல் உன்னை நான் பாதுகாப்பேன்” என வாக்குக் கொடுத்த புலி, புளியம்பழங்கள் நிறைந்து நனைந்து புளித்துக் கிடந்த குட்டைக்குள் இருந்து எழவே இல்லை.

மீள இயலாமல் குட்டை நீர் முழுவதையும் சொட்டு விடாமல் குடிக்க முயன்ற புலி, புளி நீரின் வீரியம் தாளாது மயங்கிச் சரிந்தது.

புலியின் செய்கையைக் கண்டு மெளனமாக சிரித்தது புளியமரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *