மொழிபெயர்ப்பு சிறார் நாவல்
தமிழாக்கம் உதயசங்கர்
வெளியீடு:புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை-18
விலை ரூ 70/-.
இந்த மலையாள சிறார் அறிவியல் நாவலை எழுதியவர் சி.ஆர் தாஸ். திருச்சூரில் வசிக்கும் இவர், ஐம்பதுக்கும் மேற்பட்ட குழந்தை இலக்கிய நூல்களை எழுதியுள்ளார். கேரள சாகித்ய அகாடமி விருது உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றிருக்கிறார். இதனை எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள் சிறப்பாகத் தமிழாக்கம் செய்திருக்கிறார்.
சூசியின் பெற்றோர் ஆசிரியர்கள். அறிவியல் ஆசிரியரான அவள் அப்பா மூலம், சூசி இயற்கையிலிருந்து நேர மேலாண்மை பாடங்களைக் கற்றுக் கொள்கின்றாள்.
நட்பும், சமாதானமும், ஆரோக்கியமும், அன்பும் அடுக்களையிலிருந்து கிடைக்கின்றன என்ற விபரத்தை, சூசியின் அம்மா சொல்லிக் கொடுக்கிறார். நேர மேலாண்மை குறித்த சூசியின் தேடல், இளம் வயதிலேயே அமெரிக்க அறிவியலாளர்களுடன் வீடியோ கருத்தரங்கில் கலந்து கொள்ளும் வாய்ப்பை அவளுக்கு அளிக்கின்றது. மேலும் ஒரு புத்தகம் எழுதும் அளவுக்குக் கனவுகளும், அனுபவங்களும் கிடைக்கின்றன.
நேர ஒழுங்கைக் கடைபிடிக்காத ஸ்டீபன், சிறிய தவறு கூட வாழ்வில் பெரிய தோல்விக்குக் காரணமாகும் என்பதைத் தன் அனுபவம் மூலம் தெரிந்து கொள்கிறான். காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை; நம் வேலைகளைச் சரியாக நிறைவேற்ற உதவுகிற ஒரு கோட்பாடு தான், நேர மேலாண்மை என்பதைக் குழந்தைகள் புரிந்து கொள்ளும் விதத்தில், விளக்கும் புத்தகம்.
9 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்க்கான கதைப்புத்தகம். அவசியம் வாங்கிக் கொடுத்துக் குழந்தைகளை வாசிக்கச் செய்யுங்கள்.
https://thamizhbooks.com/product/kaala-kanavukal/
பெயர் ஞா.கலையரசி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.com என் வலைப்பூ. புதிய வேர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன்.