முன்னொரு காலத்தில் ஒரு சிறிய தேசத்தில் ஓர் இளவரசி இருந்தாள். யார் பேச்சையும் கேட்காமல் தான்தோன்றித்தனமாக நடப்பதிலும், பெரியோரை மதிக்காமல் அவமரியாதை செய்வதிலும் கெட்டிக்காரி.

நல்ல பண்புகள் எதுவும் இல்லாமல் இருந்த இளவரசியை நினைத்து அரசரும், அரசியும் மனதில் எப்போதும் கவலையுடன் வாழ்ந்தார்கள். எப்போதாவது திருந்தி விடுவாள் என்ற நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருந்தார்கள்.

இளவரசிக்கு அரண்மனையிலேயே கல்வி கற்றுத் தருவதற்கும், மற்ற நுண்கலைகள் கற்றுத் தருவதற்கும் ஆசிரியை ஒருத்தி நியமிக்கப் பட்டிருந்தாள். ஆசிரியை தனக்கு அளித்த பணியை நிறைவேற்றாமல், கையில் தங்கத்தாலான ஒரு பந்தை எடுத்துக் கொண்டு அரண்மனையை ஒட்டி இருந்த நந்தவனத்தில் நுழைந்தாள் இளவரசி. பந்தைத் தூக்கிப் போட்டு விளையாடியபடி அதிகத் தொலைவு வந்துவிட்டாள். ஒரு முறை பந்தை அதிக வேகத்துடன் தூக்கியெறிந்தபோது, அங்கிருந்த ஒரு கிணற்றுக்குள் பந்து விழுந்துவிட்டது.

” அடடா, இந்தப் பந்தைத் தொலைத்து விட்ட விஷயம் தெரிந்தால் அரசர், அரசி மட்டுமல்லாமல் என்னுடைய ஆசிரியை வேறு என்னைக் கடிந்து கொள்வாரே? என்ன செய்வது? இந்தப் பிரச்சினையில் இருந்து எப்படி மீள்வது? ” என்று வாய்விட்டுப் புலம்பினாள்.

” இளவரசியாரே? என்ன ஆயிற்று? ஏன் இந்தக் கலக்கம்? ” என்று ஒரு குரல் கேட்டது. இளவரசி சுற்று முற்றும் தேடிய போது, ஒரு தவளையைப் பார்த்தாள். அந்தத் தவளையின் தோற்றத்தைப் பார்த்து முகத்தைச் சுளித்தாள். ‘ பார்க்கவே அருவருப்பாக இருக்கிறதே இந்தத் தவளை? ‘ என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.

” என்ன இளவரசி? ஏதாவது உதவி வேண்டுமா? ” என்று தவளை கேட்டதும் தான் இளவரசிக்கு உண்மை புரிந்தது.

” அட,  உனக்குப் பேசத் தெரியுமா? ஆச்சர்யமாக இருக்கிறதே? என்னுடைய பந்து கிணற்றுக்குள் விழுந்து விட்டது. எப்படி அதை எடுப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்”

” இவ்வளவு தானே? நான் எடுத்துத் தருகிறேன் ” என்று சொன்ன தவளை, கிணற்றுக்குள் பாய்ந்து சிறிது நேரத்தில் வெளியே வந்தபோது, வாயில் இளவரசியின் தங்கப் பந்தைக் கவ்வியபடி வந்தது.

உடனே அந்தப் பந்தைத் தவளையிடம் இருந்து இளவரசி பிடுங்கப் பார்த்தாள்.

” பொறுங்கள் இளவரசி. எனக்கு நன்றி சொல்ல வேண்டும் என்ற நல்ல பண்பு கூட இல்லையே உங்களிடம்? “

” நான் அப்படித் தான். என் மனதில் தோன்றியதைச் சொல்வேன்; செய்வேன்”

தவளை அதைக் கேட்டுச் சிரித்து விட்டுத் தொடர்ந்தது.

” இந்தப் பந்தை நான் உங்களிடம் தருகிறேன். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை. அதற்கு நீங்கள் ஒத்துக் கொள்ள வேண்டும் “

” சரி, என்ன நிபந்தனை என்று சீக்கிரம் சொல் தவளையே! ” அலட்சியமாகப் பேசிய இளவரசியின் குரலில் ஆணவம் தெறித்தது.

” என்னை உங்களுடன் அரண்மனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். நான் உங்களுடன் சேர்ந்து ஒரே தட்டில் உணவு உண்பேன். பின்னர் உங்களுடைய அறையில் உங்களுடன் சேர்ந்து இருப்பேன். உங்களுடைய படுக்கையில் தான் நானும் உறங்குவேன். இதற்கு நீங்கள் சம்மதித்தால் பந்தை நான் தருகிறேன் “

” சரி, சரி, சம்மதிக்கிறேன். ” என்று சொல்லி விட்டுத் தன்னுடைய பந்தைப் பிடுங்கிக் கொண்டு ஓடியே போனாள் இளவரசி. வாயால் நிபந்தனையை ஏற்றுக் கொள்வதாகச் சொன்னாலும், அவளுடைய மனம், தவளையின் நிபந்தனையை ஏற்கத் தயாராக இல்லை.

மதிய உணவு நேரத்தில் அரண்மனையின் சாப்பாட்டு அறையில் இளவரசியின் இருக்கையின் அருகே அந்தத் தவளை உட்கார்ந்திருந்ததைப் பார்த்துக் கோபம் கொண்ட இளவரசி, தவளையை அங்கிருந்து விரட்ட முயற்சி செய்தாள்.

” என்ன ஆயிற்று? ” என்று அரசர் வினவ, தவளையே தனது வாயால் நடந்தவற்றை அரசரிடம் முறையிட்டது.

” இளவரசி, தவளையின் பக்கம் நியாயம் இருக்கிறது. தவளையின் நிபந்தனையை நீ ஏற்றுக் கொண்டதால் அதன்படி நடக்க வேண்டும் ” என்று இளவரசியைக் கண்டித்து விட்டு அரசியுடன் அங்கிருந்து சென்று விட்டார்.

parambariya story 3
படம்: அப்புசிவா

இளவரசியும் வேறு வழியின்றித் தவளையைத் தன்னுடன் சேர்ந்து உணவருந்த அனுமதித்தாள். உணவு உண்ட பின்னர் தனது அறைக்கும் அழைத்துச் சென்றாள். இரவு ஆனதும் தவளை இளவரசியின் படுக்கையில் ஏறிப் படுத்துத் தூங்க ஆரம்பித்தது. தவளை நன்றாகத் தூங்கியதும் அதை ஒரு துணியில் நன்றாகக் கட்டி, சாளரத்தின் வழியே அரண்மனை நந்தவனத்தில் எறிந்து விட்டாள் இளவரசி.

அடுத்த நாள் என்ன ஆச்சரியம்! தவளையோ, இளவரசி உணவு அறையை அடையும் முன்னர்  அவளுக்காக அங்கே காத்துக் கொண்டிருந்தது. எதுவும் பேசாமல் உணவருந்திய இளவரசி, தனது அறைக்குச் திரும்ப, தவளை பின் தொடர்ந்தது.

இளவரசி என்ன முயற்சி செய்தாலும் தவளையை விரட்ட முடியவில்லை. மூன்று நாட்கள் முடிந்தன. நான்காவது நாள் காலை. இளவரசி முதல் நாள் இரவு நன்றாகத் தூங்கிய பின்னர் கண் விழித்துப் பார்த்தாள்.

அவளுடைய படுக்கையின் அருகே நின்றிருந்த அழகான இளைஞனைக் கண்டு திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தாள்.

” யார் நீ? என் அறைக்குள் அனுமதி இல்லாமல் ஏன் வந்தாய்? ” என்று கேட்டாள்.

” நேற்று வரை தவளையாக இருந்த அண்டை நாட்டு இளவரசன் நான். உன்னைப் போலவே ஆணவம் பிடித்துத் திரிந்த போது ஒரு தேவதையின் சாபத்தால் தவளையாக மாறினேன். சாபம் கொடுத்த தேவதை, ‘ உன்னைப் போலவே ஆணவம் கொண்ட இளவரசி தன்னுடன் உன்னைத் தங்க அனுமதித்தால் உன்னுடைய சாபம் தீரும்’ என்று சொல்லியிருந்தார், இப்போது தான் சாபவிமோசனம் கிடைத்தது ” என்று சொல்லிப் புன்னகைத்தான் அந்த இளவரசன்.

விஷயம் தெரிந்து அங்கு வந்த அரசரும், அரசியும் மகிழ்ச்சி அடைந்தனர். அன்று முதல் இளவரசியும் திருந்தி விட, இளவரசரும், இளவரசியும் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியோடு பல்லாண்டு காலம் வாழ்ந்தனர். தங்களுடைய குழந்தைகளைச் சின்ன வயதில் இருந்து நற்பண்புடையவர்களாக வளர்த்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments