இரவுவிளக்கின் மிதமான ஒளியில் மின்விசிறி முடிந்தவரை அமைதியைக் கிழித்தபடி சுற்றிக் கொண்டிருக்க, அப்பா கேட்டார், “ஓகே.. அப்பா கதை சொல்ல ஆரம்பிக்கவா?”
அம்மா, அம்மா அருகில் படுத்திருந்த வினு, அப்பா அருகில் படுத்திருந்த அனு மூவரும் ஒரு சேர, “ம்.. ஆரம்பிங்க!” என்று சொன்னார்கள்.
“ஒரு ஊருல ராமு, சோமுன்னு ரெண்டு பசங்க இருந்தாங்க. அவங்க வீட்ல ஒரு நாய்க்குட்டி, ஒரு பூனைக்குட்டி பெட் அனிமல்சா இருந்தது.”
“ம்….”
“ஒரு நாள்சாயங்காலம், பூனைக்குட்டிக்கு ரொம்ப பசிச்சது.
பூனைக்குட்டிக்கு சாப்பிட என்ன ரொம்ப பிடிக்கும்?”
“மீன்” வினுவின் பதில்.
“ம்ம்.. அன்னைக்கு அவங்க வீட்ல மீன்இல்லை. வேறஎன்ன பிடிக்கும்?”
“பால்..” அனுவின் பதில்.
“எஸ்.. அந்த பூனைக்குட்டிக்கும் பால்னா ரொம்ப பிடிக்கும். அடுப்படிக்குள்ள போய் பால் எங்கேன்னு தேடிச்சி. நாய்க்குட்டியும் கூட போச்சி. பால் பானைக்குள்ள பால் கொஞ்சமா இருந்தது. பால் பானைக்குள்ளே தலையை விட ட்ரை பண்ணினா தலை உள்ளே போகவேயில்லை. பானையோட வாய் சின்னதா இருந்தது.”
” பூனை எப்பவுமே பால் பானையைத் தட்டி விட்டுட்டு கொட்டின பாலைக் குடிக்கும்..” அம்மா பூனைக்கு ஐடியா கொடுத்தார்.
“ராமு, சோமு வீட்டுல பால்பானை ரொம்ப ஸ்ட்ராங்கான இரும்பால் செஞ்சது. பூனைக்குட்டியால் அதை நகர்த்தவே முடியலை..”
“அச்சச்சோ!! அப்புறம்?”
“என்ன பண்றதுன்னு நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் இந்த பக்கம், அந்த பக்கம் நடந்து நடந்து யோசிச்சாங்க.. நாய்க்குட்டிக்கு அடுப்பு எப்படி ஆன் பண்றதுன்னு சோமு சொல்லிக் கொடுத்திருந்தான்.”
“அப்பா.. அதெப்படி நாய்க்குட்டியால் அடுப்பு பற்ற வைக்க முடியும்?” வினுவின் சந்தேகமாய்க் கேட்க,
“அவங்க வீட்டுல ரிமோட் அடுப்புடா.. அலெக்சா! ஆன் தி அடுப்புனா ஆன் ஆகிடும். அப்படிதானேப்பா!” அனு தன் டிஜிட்டல் அறிவைக் காட்டினாள்.
“ஆமாம்.. நாய்க்குட்டி அடுப்பை ஆன் பணணியதும் பால் சூடாகி சூடாகி, பொங்கி, பானையை விட்டு கீழே கொட்டிடுச்சி. நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் “ஹேய்ய்!” அப்படின்னு சந்தோசப்பட்டுச்சி; பூனைக்குட்டி பசி தீர கொட்டுன பாலைக் குடிச்சிடுச்சி.”
அப்பா கதை சொல்லி, அமைதியாய் இருக்க, அம்மா, “இப்போ என்ன? பாலைக் காய்ச்சுறேன்னு பொங்க வைச்சிக் கொட்டிட்டீங்க! அதைத்தானே இப்படி கதையா சொல்றீங்க! புரிஞ்சிடுச்சி! புரிஞ்சிடுச்சி!”
அம்மா, கோபமா சொல்கிறாரா.. சமாதானமாகி சொல்கிறாரா.. என்று தெரியாமல் அனுவும் வினுவும் அமைதியாக இருக்க, அம்மா திரும்பிப் படுத்தபடி, “ம்க்கும்.. தப்பு பண்ணிட்டு அதை சமாளிக்க ஒரு கதை! செய்யறதெல்லாம் செஞ்சிட்டு, நாய்க்குட்டி பூனைக்குட்டி மேலே பலியைத் தூக்கி போடுறீங்க!! சரி.. பால் பொங்கிக் கொட்டினதும் அடுப்பைக் க்ளீன் பண்ணாங்களா.. இல்லையா?”
“அது.. நாய்க்குட்டி ஓடிப்போய் ராமுவைக் கூப்பிட்டு வந்துடுச்சா.. ராமு வந்து க்ளீன் பண்ணிட்டான்.”
“அப்படியா? சோமு என்ன பண்ணினான் தெரியுமா?”
“என்ன பண்ணான் மா?” அனுவும் வினுவும் கேட்க, “நாய்க்குட்டி, பூனைக்குட்டி, அதுங்களோடு சேர்ந்து சேட்டை பண்ற ராமு மூனு பேருக்கும் நல்லா அடி கொடுத்தான்!” என்று தலையணை எடுத்து எழுந்திருக்க, அனுவும் வினுவும் சிரித்தபடி, “நோ! நோ! அம்மா!” என்று அங்கும் இங்கும் ஓடி ஆரம்பித்தார்கள்.
தென் தமிழகத்தில் சிறு ஊரில் பள்ளிப்படிப்பு, சென்னையில் கல்லூரிப் படிப்பு, மருத்துவராகப் பணி.. எழுத்துப்பணியில் அனுபவம்: சில சிறுகதைகள், ஒரு குழந்தைகளுக்கான கதைத்தொகுப்பு, இரண்டு நாவல்கள். இவற்றை விட இந்த மின்னிதழின் ஆசிரியர் குழுவில் இருப்பதற்கு எனக்கிருக்கும் பெரிய தகுதியாக நான் கருதுவது, எனது வாசித்தல் பயணம்தான். ஆறு வயதில் எழுத்துக்கூட்டி படிக்கத் தெரிந்த நாள்முதல் வாழ்வின் எல்லா சூழ்நிலையிலும் என் உற்ற துணையாய் இருப்பது புத்தகங்களே.. ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற எண்ணத்தில் விழுந்த வித்துதான் இந்த மின்னிதழ். இது தளிராய் வளர்ந்து விருட்சமாய் மாறி, நம்தமிழ் குழந்தைகள் ஒவ்வொருவரையும் சென்றடைய வேண்டும்.