“அம்மா நான் ரக்சன் கூட விளையாட போகட்டுமா?” என வந்து நின்றான் சஷ்வின்.
“வீட்டுப் பாடமெல்லாம் இருக்கில்ல.. அதெல்லாம் எழுத வேண்டாமா?” எனக் கேட்டார் யமுனா.
“ம்மா… ஹோம் வொர்க்லாம் முடிச்சுட்டேன் மா ப்ளீஸ்ம்மா விளையாட விடுங்கம்மா” கண்களில் கண்ணீர் தேங்கி நின்றது.
“விளையாடுறதுன்னா நம்ம பாப்பா கூட விளையாடு.. யார் வீட்டுக்கும் போக கூடாது. யார் கூடவும் விளையாட விட மாட்டேன்” கடினமான குரலில் யமுனா அதட்டவும் வீறிட்டு அழ ஆரம்பித்தான்.
“அம்மா சொல்ற பேச்சு கேக்க மாட்டியா? உன் பாப்பா கூட சண்டை போடாம விளையாட முடியலையா உன்னால? ஏன் அடுத்தவங்க வீட்டுக்கு போகனும். அமைதியா இரு” மேலும் அதட்டல்.
அரண்டு போனவன் தேம்பிக் கொண்டே போய் அவனது தங்கையுடன் விளையாட ஆரம்பித்தான்.
சஷ்வினுக்கு ஐந்து வயதாகிறது. அவனது தங்கை ராஷ்மிகா விற்கு மூன்று வயது.
யமுனா பெரும்பாலும் குழந்தைகளை வெளியில் விடுவதில்லை. தினமும் செய்திகளில் இடம்பெறும் சிறார்களுக்கெதிரான குற்றச் செயல்களின் தாக்கத்தால் பெரும்பான்மையான பெற்றோர் பிள்ளைகளை கோழிக்குஞ்சுகளைப் போல அடைகாக்க வேண்டியிருக்கிறனரே அதில் யமுனாவும் விதிவிலக்கல்ல.
எனினும் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் குடிவந்த புதிதில் சஷ்வினை வெளியில் விளையாட விட்டு கண்காணிப்பார். ஒவ்வொரு மனிதர்களும் குழந்தையிடம் எப்படி பழகுகிறார்கள் என்ன மாதிரி நடத்துகிறார்கள் என்பதை கூர்மையாக அவதானித்தார்.
அவளது மனதிற்கு சரியென பட்டது இரண்டே குடியிருப்புகள் தான். அங்கே மட்டும் செல்ல தடையில்லை.
ஹமீது தாத்தாவும் ஷகினா பாட்டியும் குழந்தை மேல் மிகுந்த அன்பு காட்டினார்கள். அவர்களது பிள்ளைகள் எல்லாம் வெளிநாடுகளில் இருக்க, தாத்தா பாட்டி என ஒட்டிக் கொண்ட சஷ்வினை தங்களது பேரன் போல ஆதூரத்துடன் அணைத்துக் கொண்டனர்.
பின், ரக்சனின் தாய் உமா. ரக்சன் அப்போது 6 வயது பையன். சஷ்வினுக்கு 3 வயது. ரக்சனை விட சின்ன பையன் அத்தை அத்தை என ஒட்டவும் இயல்பாகவே அவனை ஏற்றுக் கொண்டார்.
ரக்ஷனுக்கும் அவனது அக்கா ரக்ஷிதாவிற்கும் சஷ்வினையும் அவனது குட்டி தங்கை 6 மாத ராஷ்மிகாவையும் மிகவும் பிடித்து விட்டது.
ஆதலால் நான்கு குழந்தைகளும் ஒருவருக்கு ஒருவர் என சகோதரத்துவத்துடன் அன்போடு பழக ஆரம்பித்தார்கள்.
அவர்களுக்குள் சிறுசிறு சண்டைகள் வந்தாலும் அதையெல்லாம் உமாவோ யமுனாவோ பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்பதால் இத்தனை ஆண்டுகளாக அந்த நட்பு தொடர்கிறது.
ஆனால், சமீபமாக ரக்ஷனின் போக்கால் மிகவும் எரிச்சலடைந்திருந்தார் யமுனா.
ரக்ஷனின் தேம்பல் ஒலி இன்னமும் கேட்டுக் கொண்டிருந்தது.
யமுனா.. யமுனா.. என்ற குரல் யமுனாவின் சிந்தனையைக் கலைத்தது.
“வாங்க ஷாகிம்மா…” உற்சாகமான ஷகினா பாட்டியை வரவேற்றார்.
“பால் பனியாரம் செஞ்சேன். சஷ்வினுக்கும் ராஷ்மிகுட்டிக்கும் குடுக்கலாம்னு கொண்டு வந்தேன்..சஷ்வின் எங்க?” என கேட்டுக் கொண்டே வந்து அமர்ந்தார் ஷகினா.
“அதோ இருக்கானே.. வரவர அடம் அழுகை எல்லாம் அதிகமாகிடுச்சு ஷாகிம்மா” என்றார் யமுனா
“சஷ்வின் நல்ல பையனாச்சே அப்படியெல்லாம் அடம்பிடிக்க மாட்டானே. சஷ்ஷூம்மா ஷாகிபாட்டிகிட்ட வா டா” என அழைக்கவும் தேம்பிக் கொண்டே வந்தான்.
“ஷாஷி பாருங்க ஷாஷி அம்மா என்னை ரக்சன் கூட விளையாட விட மாட்றாங்க” என புகார் வாசித்தான்.. பின்னாலேயே வந்த ரக்ஷிதாவும் “ஷாச்ஷா அம்மா விட்ல” என்றாள் மழலையில்.
“ஏன் யமுனா? என்ன ஆச்சு? உனக்கும் உமாவுக்கும் ஏதாவது பிரச்சினையா?”
“அய்யோ ஷாகிம்மா நான் ஏன் உமா அக்காகிட்ட சண்டை போட போறேன். நம்ம ரக்ஷன் தான் இப்பல்லாம் ரொம்ப கோபப்படுறான். தினமும் நாலு பேரும் ஓடிப்பிடிச்சு விளையாடுறோம்னு ஓடி இவங்க ரெண்டு பேருக்கும் தான் அடிபடுது. நான் எதாவது சொல்லிருப்பனா? ரக்ஷன் தான் வந்து இவங்க ரெண்டு பேருக்கும் அடிதடியெல்லாம் சொல்லி குடுக்குறான். ரெண்டும் கட்டி உருளுறாங்க”
“இதெலாம் எப்பவும் நடக்குறது தானே புதுசா என்ன?”
“இந்த ரக்ஷன் பெரிய க்ளாஸ் போக போக ரொம்ப கோபப்படுறான் ஷாகிம்மா.. சின்ன பசங்ககிட்ட கத்துறான். அன்னிக்கு ஓடிப்பிடிச்சு விளையாடிட்டு இருந்தாங்க. அவன் திடீர்னு நின்னுட்டான். பின்னாடியே வந்த சஷ்வின் அவன் மேல இடிச்சிட்டான்.. அதுக்கு போய் என்ன பேச்சு பேசுறான் அவன். என் கண்ணு முன்னாடியே ‘டேய் உனக்கு கண்ணு தெரியலையா இப்டி வந்து கால்ல மிதிச்சிட்டயே.. அறிவில்லயா உனக்கு’னு கேக்குறான். இங்க அவன் அம்மா நான் உக்காந்திருக்கேன். அந்த பயம் கூட இல்ல அவனுக்கு. நான் இருகறப்பவே இப்படி பேசுறான் நான் இல்லன்னா என்னெல்லாம் பேசுவான். அதான் அவன் கூட விளையாட போகாதனு சொன்னேன்”
“நீ இல்லைன்னாலும் அவன் அதத்தான் பேசுவான் யமுனா. எங்க தலைமுறைல எங்கள கண்டிக்க பெரியவங்க யாரும் வீட்ல இருக்க மாட்டாங்க. உங்க தலைமுறையில் இருந்தாலும் இப்படி வீட்டுக்குள்ள அவங்க கண்காணிப்புல நீங்க வளரல. ஆனா இப்ப 24/7 பசங்க பெரியவங்க கண்ணெதிர்க்க தான் வளருறாங்க. அப்ப பெரியவங்க இருக்காங்க இல்லன்னு யோசிச்சு பேச அவங்க பழகலைல்லம்மா.. ரக்ஷன் குழந்தையில் இருந்து சிறுவனா வளர்றான்.. அந்த வளர்ச்சியால இப்படி குணநலன்ல மாற்றம் வருது. பொறுமையா எடுத்து சொன்னா புரிஞ்சிப்பான். அதுக்காக விளையாட அனுப்பாம இருப்பயா குழந்தைய?” என மிருதுவாக கேட்டார் ஷகினா.
‘ஷாகிம்மா சொல்றதும் சரிதானோ’ என்ற யோசனையில் இருந்த யமுனாவின் அலைபேசி ஓசை எழுப்பவே அதை காதுக்கு கொடுத்தாள்.
“ஏ நாயே..உசுரோட தான் இருக்கியா இல்ல செத்து தொலச்சிட்டயா?” என்ற குரல் உற்சாகமாக கேட்டது.
“நீ செத்த இடத்துல பாதாம் மரமே முளைச்சிருக்கும்னு நெனச்சேன் எரும… எப்டி இருக்க?” என்ற யமுனாவின் உரையாடல் நிமிடங்களை விழுங்கியபடி நீடித்தது.
அவள் பேசி முடிக்கும் வரை காத்திருந்த ஷகினா கேட்டார் “உண்மைலயே நீயும் உன் நட்பும் ஒருத்தருக்கு ஒருத்தர் சாகனும்னு நினைச்சீங்களா என்ன?”
“ச்செ ச்செ என்ன ஷாகிம்மா. அப்டியெல்லாம் இல்ல.. இதெல்லாம் சும்மா கிண்டலுக்காக பேசிக்கிறது. நான் நல்லா இருக்கனும்னு என் நட்பை விட வேறு யார் நினைக்க முடியும்?”
“இந்த பதில நீ ரக்ஷனுக்கும் சஷ்வினுக்கும் பொறுத்திப் பார் பெண்ணே” என்ற ஷகினா எழுந்து சென்று கதவைத் திறக்கவும் அந்தப் பக்கம் ரகஷன் நின்றிருந்தான்.
“சஷ்வின் தங்கம் ஏன் டா நேத்து விளையாட வரல.. ஐ மிஸ் யூ” என்றவாறு வந்து சஷ்வினை அணைத்துக் கொண்டான்.
பின்னாலேயே சந்த ரக்ஷிதா “செல்லக்குட்டி என்ன செய்ற” என்ற படி ரக்ஷனாவை தூக்கியவள், அப்படியே வந்து “அத்தை அம்மா வடை சுட்டாங்க நாங்க சஷ்வினுக்கும் பாப்பாக்கும் வேணும்னு எடுத்துட்டு ஓடி வந்துட்டோம்” என்றாள்.
அம்மா விளையாட விடுவாரா இல்லையா என யமுனாவை ஏக்கத்தோடு பார்த்தபடி நின்ற சஷ்வினுக்கு விரிந்த புன்னகையை பரிசளித்து ஆமோதித்தார் யமுனா.
அன்பு அனைத்தும் செய்யும்.. தூய நட்பு கொடுஞ்சொற்களையும் மறக்கும் மன்னிக்கும் என தனக்குள் சொல்லிக் கொண்டார் யமுனா.
பொறியியல் பட்டதாரி, தற்சமயம் இல்லத்தரசி; இரு சிறார்களின் தாய்; இரண்டு அச்சு புத்தகங்கள் வெளியாகி இருக்கின்றன. என்னைச் சுற்றி நிகழும் சமூக நிகழ்வுகள் கதைகளாக உருப்பெருகின்றன. தொடர்ந்து வாசித்து எழுதி, என்னை நானே மேம்படுத்த முயன்று கொண்டிருக்கும் புதிய எழுத்தாளர் நான்.