adimurai 1

அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நேரம். வீட்டில் அம்மா அப்பா தாத்தா பாட்டி என அனைவரும் இருக்க, ராமுவை விளையாடுவதற்காக அண்டை வீட்டுக் குழந்தைகள் (neighbour children) அழைத்தார்கள். தெருவில் விளையாடுவதற்கு வாய்ப்பும் அனுமதியும் கிராமத்தில் பாட்டி தாத்தா வீட்டில் தங்கி இருக்கும் பொழுது மட்டுமே கிடைக்கும். எனவே ராமு தனக்கு கிடைத்த வாய்ப்பை தவற விட மனமில்லாமல் அம்மாவின் முகத்தைப் பார்த்தான்.

சுகந்தி: ராமு, ஓடிப் பிடித்து விளையாடும்போது கை கால் அடிபடாம பத்திரமா விளையாடு! ரெண்டு மணி நேரம் நல்ல விளையாண்டுட்டு வீட்டுக்கு வா. நான் வேண்டாம்னு  சொல்லல.

(சொன்ன வேகத்தில் விரைந்து வெளியே சென்று விட்டான் ராமு.)

பாட்டி: சங்கர் சின்ன பிள்ளையா இருந்தப்போ, விடுமுறை நாள்னா எப்போ விளையாடப் போறாங்க, எப்போ வீட்டுக்கு வந்து சாப்பிடுறாங்க, அப்படிங்கறதே தெரியாது‌. ஊருன்னாலே பாதுகாப்பாகத் தான் இருக்கும். இந்த காலத்துல தான் நேரக் கணக்கை சொல்லி அனுப்ப வேண்டியதா இருக்கு.

சங்கர்: ஆமாம் பிள்ளைகளை அப்படியே விட்டா தான் அடிபட்டு உதைபட்டு தைரியமா வளருவாங்க. ராமுவுக்காவது பாட்டி வீட்டுக்கு வந்தா கிராமத்துல தெருவில விளையாட வாய்ப்பு இருக்கு. அங்க அடுக்குமாடி குடியிருப்பில கூண்டுக்கிளி மாதிரி குழந்தைகள் வளருவதைப் பாத்தா வருத்தமா(worry) இருக்கு.

(இப்படியெல்லாம் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே விளையாடப் போன ராமு சற்று நேரத்திற்கெல்லாம் தலை தெறிக்க (hurry) வீட்டிற்குள் ஓடி வந்தான்.)

தாத்தா: என்ன ஆச்சு ராமு?! ஏன் இப்படி அரண்டு (fear) போய் ஓடி வர?!!

ராமு: தாத்தா! கருப்பும் வெள்ளையும் கலந்த மாதிரி தெருவில் ஒரு நாய் இருக்கும் தானே? அது என்னைப் பார்த்தவுடனே துரத்த ஆரம்பிச்சுடுச்சு. தப்பிச்சு ரொம்ப தூரம் ஓடி வரதுக்குள்ள பயந்து போயிட்டேன்.

பாட்டி: தெருவுல கல்லு கம்பு ஏதாவது இருந்தா எடுத்து வீச வேண்டியதுதானே ராமு?! திரும்பி ஓடி இருக்குமே.

ராமு: அதிர்ச்சியானதுல எனக்கு அப்படி செய்ய தோணவே இல்ல பாட்டி.

சங்கர்: இந்த மாதிரி சமயத்துல எப்படி நடந்துக்கணும் அப்படின்னு உனக்கு முன்னாடியே சொல்லியிருக்கணும் ராமு. அது எங்க தப்பு தான்.

கௌரி: மேலை நாடுகள்ல பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கு அவசர காலத்துல எப்படி நடந்துக்கணும் அப்படின்னு பயிற்சியெல்லாம் இருக்கு. நம்ம ஊர்ல தான் அத பண்றது இல்ல. பூகம்பம் வந்தா எப்படி தப்பிக்கனும், நெருப்பு பிடிச்சா என்ன பண்ணனும், எதிரிங்க அடிச்சா எப்படி தாக்கணும், என எதுவுமே நம்ம ஊரு பிள்ளைகளுக்கு தெரிவதில்லை.

தாத்தா: சொல்லப்போனால் தற்காப்புக் கலைகளெல்லாம் தமிழ்நாட்டிலிருந்து தான் மேலை நாடுகளுக்குப் போயிருக்கு. நாம தான் இப்போ அதன் மதிப்பை உணராமல் தொடர்ந்து கடைப்பிடிக்காமல் இருக்கிறோம்.

பாட்டி: அந்த காலத்துல தேசிய போராட்ட வீரர்களெல்லாம் தற்காப்பு கலைகளை கத்துக்கிட்டு தான் ஆங்கிலேயனை எதிர்த்து போரிட்டாங்க. துப்பாக்கியில சுட்டு தான் வீரர்களை வீழ்த்தினார்களே தவிர, ஒத்தைக்கு ஒத்த வந்தா நம்ம போராட்டக்காரர்கள் கிட்ட ஆங்கிலேயன் தோற்றுப் போயிடுவாங்க.

ராமு: அது என்ன பாட்டி தற்காப்புக் கலை? எங்களுக்கு ஏன் சொல்லிக் கொடுக்காமல் விட்டாங்க?

தாத்தா: ஆபத்து நேரத்தில் எதிரிகளை எதிர்த்து போரிடுகிற முறை தான் தற்காப்புக் கலை. அவங்க தாக்க வரும்போது எப்படி தடுக்கணும்? நாம எப்படி திருப்பித் தாக்கணும்? என்பதற்கெல்லாம் ஒரு முறை இருக்கு ராமு.

இந்த கலைகளையெல்லாம் ஆங்கிலேயர்கள் தடுத்தது தான். பின்னாளில் வந்த கல்வி முறையில தற்காப்பு கலைகளை சேர்க்காமலேயே விட்டுட்டாங்க.

ராமு: கலைகள்னு சொல்றீங்க. அப்படின்னா அதுல எத்தனை தற்காப்புக் கலைகள் இருக்கு தாத்தா?

தாத்தா: இந்த காலத்துல நிறைய இருக்குது ராமு. ஜப்பான்காரங்கரோட, ஜூடோ, கராத்தே, மல்யுத்தம், கொரிய நாட்டு தேக்வாண்டோ, சீனாகாரங்களோட குங்ஃபூ, இத்தாலி நாட்டு கிளாடியஸ், என இன்னும் பல இருந்தாலும் இது எல்லாத்துக்கும் அடிப்படை தமிழ்நாட்டுல இருந்த அடிமுறை தான்.

தமிழ் மொழியிலிருந்து எப்படி மலையாளம், கன்னடம், தெலுங்கு என பிற மொழிகள் பிரிந்ததோ அதேபோல அடிமுறையிலிருந்து களரி, வர்மம், சிலம்பம் போன்ற தற்காப்புக் கலைகளும் பிரிந்தன.

எதிரிகிட்ட இருந்து நம்மள பாதுகாத்துக் கொள்ள இந்த தற்காப்புக் கலைகள் எதிர்த்துப் போரிட்டு சண்டை போட உதவினாலும் வைத்தியத்துக்கும் பயன்படுது.

இப்போதெல்லாம் கண்ணுக்கு ஒரு டாக்டர் காலுக்கு ஒரு டாக்டர் என தனித்தனியா இருக்காங்க. அந்த காலத்துல அத்தனைக்கும் ஒரே வைத்தியர் தான்.

பொதிகை மலையில் வாழ்ந்த அகத்தியர் தற்காப்புக் கலைகளைக் கற்று வைத்தியமும் பார்த்த சித்தர். கடவுளாக மதிக்கப்படுகிறார்.

காஞ்சிபுரத்தில் நம் மன்னனாக வாழ்ந்த போதிதர்மன் புத்த மதத்தை பரப்புவதற்கு சைனாவுக்குப் போனவர். அப்படியே அவருக்குத் தெரிந்த தற்காப்புக் கலைகளையும் வைத்தியத்தையும் அந்த நாட்டுக்குக் கொடுத்தவர்.

கன்னியாகுமரியில் பிறந்த களரி எனும் கலை, இப்போ கேரளாவில் மட்டும் வாழ்ந்துகிட்டு வருது. இப்படி இன்னும் இத பத்தி நிறைய சொல்லிக்கிட்டே போகலாம் ராமு.

கௌரி: அந்த காலத்துல மன்னர்களும் போர் வீரர்களும் தெரிந்து வைத்திருந்த இந்த கலை மீண்டும் உயிர்பெற்று வருது. இதற்கான வகுப்புகள் எல்லாம் இப்போ நடக்குது. ராமுவையும் அங்க சேர்த்துவிடலாம்.

தன்னை காப்பாற்றிக் கொள்ளும் முறை தெரிந்தால் தானே வீரனா வளர முடியும்? நாயைப் பார்த்து என்ன! எல்லாத்தையும் கத்துக்கிட்டு சிங்கத்தைப் பார்த்தே தைரியமா இருக்கப் போறான் ராமு. அப்படித்தானே ராமு?

(ராமுவின் முகத்தில் தன்னம்பிக்கையோடு ஒரு புன்னகை.)

சங்கர்: சின்ன வயசுல எங்களுக்கு இதெல்லாம் கத்துக்குற வாய்ப்பே இல்லாம போயிடுச்சு. இணையதள வசதியெல்லாம் வந்துட்டதால ராமுவுக்கு இப்போ ஈசியாக கற்றுக் கொடுக்கலாம். வாய்ப்பு இருக்கு. எங்கேயாவது வகுப்பு இருக்கான்னு தேடிப் பார்க்கிறேன்.

(தனது கைபேசியில் கூகுள் மூலம் சங்கர் வகுப்பினை தேட ஆரம்பித்து விட்டார்)

பாட்டி: இந்த காலத்துல சிறுவர்களுக்கு பள்ளிக்கு போயிட்டு வர வழியில கூட ஆபத்து அதிகமாக இருக்கிறது. சின்ன பொண்ண கடத்திக்கிட்டு போறாங்க. டிவியை தொறந்தா இப்படித்தான் செய்தி வருது. தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்கிற கலையை சின்ன பிள்ளைகளுக்கு கண்டிப்பா கற்றுக் கொடுக்கணும்.

சங்கர்: அம்மா! இந்த வகுப்புகளெல்லாம் எங்க நடக்குதுன்னு இணையதளத்தில் தேடி கண்டுபிடிச்சிட்டேன். ராமுவுக்கு இது உடற்பயிற்சியாகவும் இருக்கும். களரி, கராத்தே, ஜுடோ, தேக்வாண்டோ, சிலம்பம், வர்மம் என எல்லாத்துக்கும் அடிப்படையான அடிமுறையை ராமு கத்துக்கப் போறான். உனக்கு மகிழ்ச்சி தானே ராமு?

ராமு: ஹைய்யா! அப்பான்னா அப்பா தான்!! கத்துக்கறதுக்கு முன்னாடியே எனக்கு தைரியமும் ஆரோக்கியமும் வந்துடுச்சு. விடுதலைப் போராட்ட வீரர்கள் போல நானும் இனிமே வீரனாகப் போறேன்.

(ராமுவின் முகத்தில் மிதந்த பெருமிதத்தை அனைவரும் ரசித்துப் புன்னகைத்தனர்.)

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *