ஒரு கிராமத்தில் ஓர் ஏழை விவசாயி தன்னிடம் ஒரு காளை வைத்திருந்தான். வயலை உழுவதற்கும், நீர் இறைப்பதற்கும், சுமைகளைச் சுமப்பதற்கும், இனப் பெருக்கத்திற்கும் அந்தக் காளையை உபயோகப் படுத்தி வந்தான்.

காளைக்கு வயதாகி விட்டதால் வேலை செய்ய முடியாமல் ஓய்ந்து போனது. பலவீனமாகவும் ஆனது. அதனால் விவசாயி காளையைக் காட்டில் விட்டு விட்டான்.

“என்னால் உனக்கு உணவு தந்து இனிப் பராமரிக்க முடியாது. நீயாக எப்படியாவது பிழைத்துக் கொள்.”

என்று சொல்லி விட்டான்.

காளை காட்டில் திரிந்து ஒரு குகையைக் கண்டு பிடித்தது. குகைக்கு அருகே நிறையப்

புற்கள் அடர்ந்த இடமும் நீர்நிலையும் இருந்ததால் ஆளரவமில்லாத அந்த குகையைத் தனது இருப்பிடமாக்கிக் கொண்டது.

சரியான உணவு உண்டு ஓய்வும் எடுத்ததால் திரும்பவும் நல்ல பலத்துடனும் புத்துணர்ச்சியுடனும் குகையில் காளை மகிழ்ச்சியாக வசித்து வந்தது.

ஒரு நாள் பசியில் துடித்துக் கொண்டிருந்த சிங்கம் ஒன்று குகை அருகில் வந்ததைக்

காளை பார்த்து விட்டது.  தனது  புத்திசாலித்தனத்தால் சிங்கத்திடம் இருந்து தப்பிக்கக் காளை  ஒரு திட்டம் தீட்டியது. குகையில் ஒளிந்து கொண்டு சத்தமாகப் பேசியது.

“குழந்தைகளே! உங்கள் பசியைத் தீர்ப்பதற்காகவே இறைவன் ஒரு சிங்கத்தை நமது குகைப் பக்கம் அனுப்பி இருக்கிறார். அந்த சிங்கம் குகையை நோக்கி வருகிறது. அருகில் வந்ததும் அதைக் கொன்று உங்கள் பசியாற்றி விடுகிறேன். அது வரை பொறுத்துக் கொள்ளுங்கள்”

என்று சொன்னது. அதைக் கேட்டு சிங்கம்

பயந்து போனது. ஏதோ புதிய விலங்கு காட்டிற்குள் வந்திருக்கிறது. தன்னை விட வலிமையானது. அதனால் தான் தன்னையே கொல்வதாகச் சொல்கிறது என்று எண்ணி பயந்து அங்கிருந்து தலை தெறிக்க ஓட ஆரம்பித்தது.

singam
படம்: அப்புசிவா

 சிங்கம் ஓடியதைப் பார்த்த காளை  நிம்மதிப் பெரு மூச்சு விட்டது.

ஓடிக் கொண்டிருந்த சிங்கத்தை வழியில் அதனுடைய நண்பனான நரி ஒன்று பார்த்தது.

“சிங்க ராஜா,சிங்க ராஜா! ஏன் இப்படி பயந்து ஓடி வருகிறீர்கள்? என்ன ஆயிற்று?”

என்று கேட்டது.

“அதோ அங்கிருக்கும் குகையில் ஒரு புதிய விலங்கு வந்து வசித்துக் கொண்டிருக்கிறது. என்னையே கொன்று தனது குழந்தைகளுக்கு உணவாகத் தரத் திட்டம் தீட்டியது. நான் தப்பித்து ஓடி வந்து விட்டேன்.”

சிங்கம் சொன்னதை நரி நம்பவில்லை.

” இல்லை சிங்கராஜா. இந்தக் காட்டில் உங்களை விட வலிமையான விலங்கு இருக்க முடியாது.உங்களுக்கு ஏதோ தவறாகத் தோன்றி இருக்கிறது. என்னால் நம்ப முடியவில்லை. என்னுடன் வாருங்கள். திரும்பப் போய்ப் பார்க்கலாம்”

என்று நரி அழைத்தது.

“இல்லை. இல்லை. நான் வர மாட்டேன். ஒரு முறை தப்பி விட்டேன். திரும்பப் போய் மாட்டிக் கொள்ள மாட்டேன் நான்”

என்று சிங்கம் மறுத்து விட்டது.

“இல்லை சிங்கராஜா. நானும் வருகிறேன். நமது வால்களை ஒன்றாகக்

கட்டி விடலாம். அந்த விலங்கு தாக்கினாலும் என்னை முதலில் தாக்கட்டும். அதற்குள் நீங்கள் தப்பி ஓடி வந்து விடலாம்.”

என்று சொல்ல இரண்டும் தங்களது வாலை

ஒன்றாகக் கட்டிக் கொண்டு குகைக்கு அருகில் சென்றன. சிங்கமும் நரியும் எதிர் எதிர் திசைகளில். நரி குகையை நோக்கியும். சிங்கம் எதிர் திசையில் ஓடுவதற்குத் தயாராகவும் நின்று கொண்டன. வால்கள் நடுவில்.

நரியும் சிங்கமும் சேர்ந்து வருவதைக் காளை பார்த்து விட்டது. தந்திரக் கார நரி புரிந்து கொண்டு சிங்கத்தைக் கூட்டி வந்திருக்கும் என்பதைத் தெரிந்து கொண்ட

காளை, திரும்பவும் குகைக்குள் சென்று சத்தமாகப் பேசியது.

” நரியே! இரண்டு சிங்கங்களைக் கூட்டி வருவதாகச் சொல்லி விட்டு ஏன் ஒரே ஒரு சிங்கத்தைக் கூட்டி வந்திருக்கிறாய் இப்படி?. இன்று எனது குடும்பத்திற்கு அரை வயிறு உணவு தானா?”

என்று காளை  சொல்ல, சிங்கம் அதை நம்பி விட்டது.

“அடடா! இந்த நரியும் இந்தப் புதிய விலங்குடன் கூட்டு சேர்ந்து விட்டதா? நம்மையே மாட்டி விடப் பார்க்கிறதே! நம்மை ஏமாற்றி இங்கே கூட்டி வந்து விட்டதே!”

என்று எண்ணி அங்கிருந்து மிக வேகமாக ஓட ஆரம்பிக்க நரி தரதரவென்று இழுத்துச் செல்லப்பட்டது. வாலைக் கட்டிக் கொண்டிருந்ததால் தன்னை விடுவித்துக் கொள்ள முடியாமல் மண்ணிலும் கல்லிலும் மோதித் தேய்ந்து  இறந்து போனது.

காளையும் தனது புத்தி சாதுர்யத்தால் உயிரைக் காப்பாற்றிக் கொண்டது.

உடல் வலிமையை விட புத்திக் கூர்மையே சிறந்தது.

இக்கட்டான சமயத்தில் பதட்டப் படாமல் தீர யோசித்து முடிவெடுத்தால் நம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.

அறிவே சிறந்த தற்காப்பு ஆயுதம்.

( நான் கேள்விப்பட்ட பஞ்ச தந்திரக் கதை)

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments