பள்ளியின் முழு ஆண்டு விடுமுறைக்கு கண்ணன், கீதா, ரகு மற்றும் லலிதா பாட்டி, தாத்தா வீட்டிற்கு தங்களின் பெற்றோர்களுடன் வந்திருந்தனர்.

பாட்டியிடம் தினமும் கதை கேட்டு, தாத்தாவிடம் கோலி, கில்லி, பச்சை குதிரை கற்று, பக்கத்து வீட்டு அம்மு அக்காவுடன் கல்லாங்காய், சில்லு கோடு விளையாடி நாட்களைக் கழித்துக் கொண்டிருந்தனர்.

தினமும் நீதிக் கதைகளைக் கேட்டு சோர்ந்து போனதால், ஒருநாள் கீதா பாட்டியிடம், “பாட்டி, பாட்டி இன்னிக்கு பேய் கதை சொல்லுங்களேன்!” என நச்சரித்தாள்.

பாட்டியும் ஒரு பூதத்தின் கதையைச் சொல்லத் தொடங்கினார். அவரை சுற்றி உட்கார்ந்திருந்த குழந்தைகள் அனைவரும், ஆ வென்று வாயைப் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

பாதி கதையைக் கேட்டுக் கொண்டிருந்த போதே, கண்ணன் மட்டும் உறங்கிப் போயிருந்தான். மற்ற மூவரும் ஆவலும், பீதியுமாகக் ‘ஆ’, ‘ஊ’ என்று கூச்சலிட்டபடி கதையை முழுவதும் கேட்டுவிட்டு உறங்கச் சென்றனர்.

மறுநாள் மாலை வேளையில், அனைவரும் வீட்டிற்குள்ளேயே கண்ணாமூச்சி விளையாடத் துவங்கினார்கள்.

முதலில் கண்ணன் கண்ணைப் பொத்திக் கொள்ள, மற்ற மூவரும் போய் ஒளிந்து கொண்டார்கள்.

கதவின் பின்னால், திரைசீலைக்குப் பின்னால், சோபாவிற்குப் பின்னால் என வழக்கமாய் ஒளியும் இடங்களில் மற்ற மூவரும் ஒளிந்திருந்ததால், அவர்களை நொடி நேரத்தில் கண்டுபிடித்துவிட்டான் கண்ணன்.

இப்போது முதலில் மாட்டிக் கொண்ட கீதா கண்ணை மூடிக் கொள்ள, மற்ற மூவரும் ஓடிப் போய் ஒளிந்து கொண்டார்கள்.

ரகு கதவிற்குப் பின்னாலும், லலிதா அவனுக்குப் பின்னாலும் ஒளிந்து கொண்டதால் அவர்களை மிக எளிதாகக் கண்டுபிடித்து விட்டாள்  கீதா. ஆனால் கண்ணனை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை.

kannan enge
படம்: அப்புசிவா

இப்போது கீதாவோடு சேர்ந்து மற்ற இருவரும் கண்ணனைத் தேடத் தொடங்கினர். “கண்ணா, கண்ணா!” என்று சத்தமாக அழைத்துக் கொண்டு ஒவ்வொரு அறையின் கதவிற்குப் பின்னாலும் தேடினர். வாசலில் ஓடிப் போய், அவன் வேறு எங்காவது இருக்கிறானா என்றும் தேடினர், ஆனால் அவனைக் காணவில்லை.

“பாட்டி, பாட்டி! கண்ணனைக் காணும் பாட்டி!” என லலிதா ஓடிப் போய் பாட்டியிடம் தஞ்சம் அடைய, “இங்க தான் எங்கயாவது இருப்பான் குட்டிம்மா நல்லாத் தேடிப் பாருங்க!” என்றார்.

“இல்ல பாட்டி! கண்ணனை எங்க தேடியும் காணும்!” என ரகு அழும் குரலில் கூற,

“என்னடா சொல்ற! கண்ணனைக் காணுமா! கண்ணா, கண்ணா!” என பாட்டி வீடு முழுவதும் கத்திக் கொண்டே தேடினார்.

ஆனால் கண்ணன் இருக்கும் சுவடு தெரியவில்லை. “கண்ணா, கண்ணா!” என்று அழைத்தபடி பாட்டி அழத் துவங்க, பாட்டியோடு சேர்ந்து குழந்தைகளும் அழத் துவங்கினர்.

இவர்களின் அனைவரின்

கூக்குரல் கேட்டதும், பக்கத்து வீட்டு மாமாவுடன் பேசிக் கொண்டிருந்த தாத்தா ஓடி வந்தார்.

“என்னாச்சு?” என அவரும் பதறி கண்ணா கண்ணா என்று கத்தத் துவங்க,

“ஹா, ஹா, ஹா எல்லாரும் நல்லா ஏமாந்தீங்களா! நான் இங்க தானே இருக்கேன்!” என்று அவர்கள் முன்னால் வந்து நின்றான் கண்ணன்.

அவனைப் பார்த்த ஆசுவாசத்தில் பாட்டி நிம்மதி பெருமூச்சு விட, தாத்தா கோபத்தோடு அவனருகே சென்றார்.

“எங்க கண்ணா போயிருந்த? உன்னைக் காணும்னு நாங்க எல்லாம் எவ்வளவு தேடுனோம் தெரியுமா! என்ன உன் தலையில் எல்லாம் ஒட்டடையா இருக்கு, எங்க ஒளிஞ்சுக்கிட்டு இருந்த?” என்று  சற்று கண்டிப்புடன் தாத்தா கேட்க,

கண்ணன் பயந்தபடியே, “கட்டிலுக்கு அடியில் ஒளிஞ்சுக்கிட்டு இருந்தேன் தாத்தா!” என்றான்.

இப்போது பயப்படும் முறை மற்ற மூன்று பேருடையது ஆனது.

“அய்யோ பாட்டி! இது கண்ணன் இல்ல பூதம்!” என்று மூவரும் அலறினார்கள்.

“டேய் நான் பூதம் இல்லடா! கண்ணன் தான்!” என்று கூறி கண்ணன், ஹா ஹா என்று சிரிக்க, மூவரும் மேலும் அலறினார்கள்.

“ஏய் பசங்களா சும்மா இருங்கடா எல்லாரும். அதான் கண்ணன் வந்துட்டான்ல போங்க போய் வேற ஏதாவது விளையாடுங்க!” என்று கூறினார் தாத்தா.

“இல்ல தாத்தா! இது கண்ணன் இல்ல பூதம் தான். நேத்து பாட்டி எங்களுக்கு ஒரு பூதக் கதை சொன்னாங்க, அதுல கட்டிலுக்கு அடியில பூதம் இருக்குன்னும், அங்க யாரு போனாலும் அது அவங்க உடம்புக்குள்ள புகுந்துக்கும்னும் சொன்னாங்க!” என கண்களை உருட்டிக் கூறினாள் கீதா.

தாத்தா பாட்டியை ஒருமுறை பார்த்து முறைத்துவிட்டு, “கட்டிலுக்கு அடியில் விஷ பூச்சிகளும், ஒட்டடையும் இருக்க வாய்ப்பிருக்கு குழந்தைகளா! உங்ககிட்ட உண்மையைச் சொல்லி போகாதீங்கன்னு சொன்னா கேப்பீங்களா கேட்கமாட்டீங்க தானே! அதுனால தான் பாட்டி பூதம்னு சொல்லி பயமுறுத்தி வெச்சிருக்காங்க!” என்று ஆறுதல் கூறினார் தாத்தா

அப்போதும் பிள்ளைகள் குழப்பதுடன் இருக்க, “கண்ணா நீ கட்டிலுக்கு அடியில் பூதத்தைப் பார்த்தியா!” என்று கேட்டார்.

“இல்லியே! பூதமும் இல்லை, பிசாசும் இல்லை. கட்டிலுக்கு அடியில் இருட்டா இருந்துச்சு, காத்தும் வரலை அவ்வளவு தான். நல்லவேளை நேத்து கதை சொல்லும் போது தான் தூங்கிட்டேன் இல்லைன்னா எனக்கு ஒளிஞ்சுக்க புதுசா ஒரு இடம் கிடைச்சிருக்காது!” என்று சிரித்தபடி கூறினான் கண்ணன்.

அதோடு நில்லாமல் ரகுவின் கையைப் பற்றி இழுத்துக்கொண்டு ஓடிப் போய் கட்டிலுக்கு அடியில் டார்ச் அடித்துக் காட்டினான்.

“பாரு ரகு! பூதம் எல்லாம் இல்லவே இல்லை. வெறும் தூசி தான்!” என் ரகுவிற்கு கண்ணன் தைரியம் கொடுக்க, அவன் பின்னால் கீதாவும், லலிதாவும் வந்து பார்த்து உண்மையைப் புரிந்து கொண்டனர்.

“பிள்ளைகளா, எந்த செய்தியை யார் சொன்னாலும் அதை ஆராய்ந்து தெரிந்து கொள்ளணும் சரியா!” என்று தாத்தா அறிவுரை வழங்கினார்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments