அத்தியாயம் – 1
ஒரு விலங்குகள் காப்பகத்தில் தான் டிங்கு வாழ்ந்து வந்தது. டிங்கு ஒரு குரங்கு, டிங்குவிற்குப் பக்கத்துக் கூண்டில் ரிங்கு இருந்தது. ரிங்கு ஒரு வரிக்குதிரை. இருவரும் நெருங்கிய நண்பர்கள். டிங்கு குரங்கு மிகவும் வாலு, ரிங்கு வரிக்குதிரை ரொம்ப சாது.
அதே ஊரில் ஒரு பணக்காரர் சில விலங்குகளை வளர்த்தார். அவை ஒரு யானை, ஐந்து கிளிகள், இரண்டு முயல்கள் மற்றும் இரண்டு நெருப்புக் கோழிகள். அங்கு இருப்பது எந்த விலங்கிற்கும் பிடிக்கவில்லை. ஏனெனில் அந்த பணக்காரர் தனது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அந்த விலங்குகளை வைத்து வாரத்திற்கு ஒருமுறை வித்தை காட்டுவார்.
ஐந்து கிளிகளில் ஒன்றின் பெயர் மிதுன். அந்த யானையின் பெயர் மதன். ஒரு நாள் காலையில் மிதுன் கிளி, மதனை வேகவேகமாக எழுப்பியது.
“ஏன் மிதுன், என்னை இவ்வளவு சீக்கிரம் எழுப்பின?” என்று சோகமாகக் கேட்டது யானை மதன்.
“எனக்கு ஒரு யோசனை வந்திருக்கு, வா காதைக் காட்டு” என மிதுன் மதனிடம் திட்டத்தை சொன்னது.
“இன்று காலை பத்து மணிக்கு பணக்காரர் ஒரு நிகழ்ச்சி நடத்துறார். அந்த நிகழ்ச்சிக்கு அவர் குடும்பத்தினர், நண்பர்கள் எல்லாருமே வராங்க! நாம தான் அதுல முக்கிய கதாபாத்திரங்கள். நாம் அதில் மோசமாக நடித்தால், அவர் அவமானத்தால் நம்மை வெளியே துரத்திவிடுவார் என்று நினைக்கிறேன். அவர் துரத்திவிட்டால், நாம் இங்கிருந்து தப்பித்து விடலாம்” – என்று கீச் கீச்சென்று கத்தியது மிதுன்.
மதனிற்கு இந்த யோசனை பிடித்திருந்தது. அதனால் சரி என்று தலையாட்டியது. அவர்கள் திட்டம் போலவே நிகழ்ச்சியில் மோசமாக நடித்தார்கள்.
அந்த பணக்காரர் மிகவும் கோபப்பட்டார், அவர் முகத்தைப் பார்க்கக் கூட முடியவில்லை. ஆனால் நல்லவேளை இவர்களை அடிக்காமல் துரத்திவிட்டார், ஏனென்றால் அவர்கள் வீட்டுக்கு விருந்தினர் வந்ததைக் கண்டு சிறிது மகிழ்வாக இருந்தார்.
மதனும், மிதுனும் அந்த பணக்காரரிடம் இருந்து தப்பித்து வெகு தூரம் சென்றுவிட்டார்கள்.
“நான் சொன்ன ப்ளான் வேலை செஞ்சுது பாத்தியா மதன்” என்றது மிதுன் கிளி.
“ஆமாம் மிதுன், ஆனா எனக்கு இப்ப பசிக்கிதே!” என்றது மதன் யானை.
“உனக்கு எப்பப் பார்த்தாலும் பசிக்குமா?” என்றது கிளி மிதுன்.
“ஆமாம், நான் ஒண்ணு சொல்லட்டுமா, நான் சிறியவனா இருக்கும் போது என் நண்பர்களோடு விளையாடுவேன். அப்படி ஒரு நாள் விளையாடும் போது, வழி தவறிவிட்டேன். மூன்று நாட்கள் தான் என்னால பசி தாங்க முடிஞ்சிது, நான் அழுததால இன்னும் அதிகமா பசித்தது. அதன் பிறகு என் அம்மா வந்து என்னைத் தேடி கூட்டிச் சென்றாள். வீட்டுக்கு சென்று நான் நன்றாகச் சாப்பிட்டேன்” என்றது மதன்.
“ஆமாம் உனக்கு அதிகமா பசிக்கும், நீ யானை அல்லவா!” – கிளி மிதுன்.
அப்போது திடீரென்று ஒரு குறட்டை சத்தம் கேட்டது.
மருத்துவம் சார்ந்த துறையில் இளங்கலை மற்றும் முதுகலை முடித்துள்ளேன். ஒரு மருத்துவ கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறேன்.கடந்த இரண்டு வருடங்களாக சிறுகதைகள் மற்றும் புதினங்கள் எழுதிக் கொண்டிருக்கிறேன். யூ ட்யூப்பில் ஒலி வடிவ கதைக்களுக்கான சானல் ஒன்றையும் நடத்திக் கொண்டு வருகிறேன்.