ஏழை விவசாயி ஒருவர் தன் வீட்டில் ஆடு, கோழிகளை வளர்த்து வந்தார்.
கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்ட கோழி இருந்தது .
ஆடுகள் மொத்தம் முப்பதிற்கு மேல் இருந்தது . வீட்டிற்கு அருகிலேயே காலியாக இருந்த இடத்தில் தனியாக கொட்டகை அடித்து அதை பத்திரமாக வளர்த்து வந்தார்.
ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொன்று என தனித்தனியாக பிரித்து வளர்த்து வந்தார்.
அடுத்த மாதத்தில் இருந்து கோழி முட்டையிட ஆரம்பிக்கும். சற்று விரிவு படுத்தலாம் தீபாவளி நேரத்தில் இந்த கோழிகளை விற்று தீபாவளிக்கு வேண்டிய உடைகளை குழந்தைக்கு வாங்கி கொடுக்கலாம் என்று யோசித்து வைத்து இருந்தார். ஆனால் அவருடைய ஆசை நிறைவேறும் என்பது போல தெரியவில்லை .
இவர்களில் வீட்டிற்கு சற்று தொலைவில் ஒரு வீடு இருந்தது அங்கே அந்த வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்தனர்.
தினமும் காலை, மாலை இரண்டு வேலையும் அவிழ்த்து விட அந்த நாய் இவர்களின் கோழிகளை ஒவ்வொன்றாக தூக்கிக்கொண்டு சென்றது .
இதை எப்படி சரி செய்வது என்று இவருக்கு தெரியவில்லை .மிகவும் கவலைக்கு உள்ளானார் .
ஒரு முறை நேரில் பார்த்து கூட அவரிடம் பேசிவிட்டு வந்திருந்தார். “உங்க வீட்டு நாய் அடிக்கடி வந்து கோழிகளை தூக்கிட்டு போயிடுது.. நான் வேறு ஒரு தேவைக்காக அதை வளர்த்துக்கிட்டு வரேன். கொஞ்சம் கவனமா பாருங்களேன்” என்று சொல்ல ,அவரும் மிக திமிராக பதில் சொல்லி அனுப்பி வைத்தார் .
“நீ வளர்க்கிற கோழிகளை நீ தான் பத்திரமா பார்த்துக்கணும்.. அதை எதுக்காக இங்க வந்து சொல்லிக்கிட்டு இருக்கற.. என்னால எந்த உதவியும் செய்ய முடியாது .உன் பொருளை பத்திரமா பார்த்துக்க வேண்டியது உன்னோட கடமை என்னோடது கிடையாது .என்னோட நாய் அப்படித்தான் செய்யும். நீ சொல்றது எல்லாத்தையும் கேட்டுக்கிட்டு இருக்க முடியாது புரிஞ்சுதா” என்று சொல்லி அனுப்ப ,அவரிடம் சண்டையிட பிடிக்காமல் கவலையோடு வீடு திரும்பினார்.
இரவில் படுத்தவருக்கு தூக்கமே வரவில்லை . அப்போது அவனுடைய பத்து வயது மகள் தந்தையிடம் வந்து பேச்சு கொடுத்தாள்.
“அப்பா நான் உங்ககிட்ட ஒன்னு கேட்பேன். நீங்க சரின்னு சொல்லுவீங்களா *.
“என்னடா பட்டு குட்டி உனக்கு என்ன வேணும் .நீ கேட்டு நான் என்ன இல்லைன்னு சொல்லி இருக்கிறேன்”.
“அப்பா இன்னைக்கு காலையில புதுசா கோழி குஞ்சு பொரிச்சதை பார்த்தேன். எனக்கு அதில் இருந்து இரண்டு கோழிகுஞ்சுகளை தனியா தருவீங்களா ..நான் பத்திரமா வளத்துக்குவேன் ப்ராமிஸ்..”
“உனக்கு கோழி வளர்க்க பிடிக்குமா”.
” அப்பா எனக்கு மட்டும் இல்ல எல்லா குழந்தைகளுக்குமே ஏதாவது வளர்க்க பிடிக்கும் ப்ளீஸ் எனக்கு தருவீங்களா..”
“தரேன்மா”என்றவரின் மனதிற்குள்ளும் புதியதாக ஒரு யோசனை தோன்றி இருந்தது .
அடுத்த நாளே மகளையும் அழைத்துக் கொண்டு நாய் வளர்க்கின்றவர் வீட்டிற்கு சென்றிருந்தார் . அவருடைய மகளும் இவருடைய குழந்தையோடு தான் பள்ளியில் படித்தது.
அழகான கலர் கலரான நான்கு கோழி குஞ்சுகளை அந்த வீட்டில் இருந்த குழந்தைக்கு பரிசளித்தார் .
என் குழந்தை ரொம்ப ஆசையா இந்த கோழிக்குஞ்சுகளை வளர்க்க ஆசைப்பட்டா.. அதேபோலதான் உங்க வீட்டு குழந்தையும் பார்த்து ஆசைப்படும் அதனால வளர்க்க இதை கொண்டு வந்தேன்.
அவருடைய குழந்தையும் ஆசையாக அந்த கோழி குஞ்சுகளை வாங்கிக் கொண்டது.
அடுத்த சில நாட்களிலேயே ஒரு அதிசயம் நிகழ ஆரம்பித்தது. கொடுத்து விட்டு வந்த கோழிக்குஞ்சுகளை மிகவும் பாசமாக அந்த குழந்தை பார்த்துக்கொள்ள , கோழிகளை தூக்க முயற்சி செய்த நாயை மிரட்ட ஆரம்பித்து இருந்தனர்.
நாளடைவில் நாய் கோழிகளை பார்த்தால் துரத்தி பிடிக்காத அளவிற்கு மாறி இருந்தது.
இப்போது இந்த ஏழை விவசாயி மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார் அவருடைய ஆசை, கனவு நிறைவேற போகிறதே..
இனி பயமில்லாமல் கோழிகளை வளர்க்கலாமே.. இவர் ஆசைப்பட்டது போலவே தீபாவளிக்கு கோழிகளை வித்து மகிழ்ச்சியாக கொண்டாட போகிறாரே..
என்ன குழந்தைகளா இந்த கதை உங்களுக்கு பிடிச்சிருந்ததா.. அவர் வசதி இல்லாதவர் தான் .ஆனால் அவர் சமயோகிதமாக யோசித்ததால், அந்த யோசனை அவருக்கு நல்ல விதமாக கை கொடுத்தது .
அது போல தான் நாமும் இக்கட்டான சூழ்நிலை வரும் போது அதில் இருந்து வெளியே வர, அவரை போலவே எப்படி முயற்சி செய்யலாம் அப்படின்னு யோசிச்சோம்னா.. எல்லா பிரச்சனைக்கும் ஒரு தீர்வு கிடைக்கும்.
நான் ராஜேஸ்வரி.d (கவிசெளமி),கோவையில் வசிக்கிறேன். இரண்டு வருடமாக கதைகள் எழுதுகிறேன். புதினம்2020 போட்டியில் மூன்றாவது பரிசு வாங்கி புத்தகமாக வெளிவந்தது மறக்கமுடியாத அனுபவம்