அடுக்கு மாடிக் கட்டிடத்தில் உள்ள வீட்டில், ஒரு சின்ன பெண் குழந்தை அக்கறையாகப் படித்துக் கொண்டிருந்தாள். அவள் பெயர் தீபிகா.

 தீபிகா மிகவும் நல்ல குழந்தை. அதிகாலையில் எழுந்து விடுவாள். அவள் அம்மாவைத் தொந்தரவு செய்யாமல் அவளே பல்துலக்கி, யோகா செய்துவிட்டுக் குளித்து விடுவாள். அதன் பின் பாடங்களைப் படிப்பாள்.

 அவள் நன்றாகப் படிக்கும் குழந்தை என்பதால், அன்று நடத்தும் பாடங்களை அன்றே படித்து விடுவாள். தன் வீட்டுப் பாடங்களைச் சரியான நேரத்தில் முடித்துவிடுவாள். ஏதாவது சந்தேகம் இருந்தால், அவள் அம்மாவிடமோ, அப்பாவிடமோ கேட்டுத் தெரிந்து கொள்வாள்.

 அதனால், அவளுக்குப் பள்ளியிலும் நல்ல பெயர். அவளும் பள்ளிக்கு மிகச் சந்தோஷமாகச் சென்று கொண்டிருந்தாள்.

அவள் நாட்கள் இப்படிச் சென்று கொண்டிருக்க, அன்று தீபிகா பள்ளியிலிருந்து மிகவும் சோர்வாக வந்தாள். ‘தீபிகாவுக்கு என்ன ஆச்சு?’ அவள் அம்மா அவளை யோசனையாகப் பார்த்தார். ஆனால், எதுவும் கேட்கவில்லை. அவளே சொல்லட்டும் என்று அமைதியாக இருந்தார்.

ஆனால், தீபிகாவோ யாரிடமும் பேசாமல் படுத்துவிட்டாள். மறுநாளும், அவள் சோர்வாக வர, “தீபிகாவுக்கு என்ன ஆச்சு?” என்று அன்பாகக் கேட்டார் அவள் அப்பா.

“ஒண்ணுமில்லை அப்பா…” தன் தலையை அசைத்துக் கொண்டாள்.

“தீபிகாவுக்கு அம்மா சாக்லேட் தரவா?” என்று கேட்டு அவள் அம்மா, சாக்லேட் கொடுக்க, அதை வாங்கி சாப்பிட்டுக் கொண்டாள்.

“இப்ப சொல்லு தீபிகா. ஸ்கூலில் என்ன ஆச்சு?” என்று அன்பாகக் கேட்டார் அவள் அம்மா.

“ஒண்ணுமில்லை…” என்று மறுப்பாகத் தலையசைத்தாள்.

ஆனால், நாட்கள் செல்ல செல்ல அவள் இன்னும் சோர்வாகப் பள்ளிக்குச் சென்றாள். சில சமயம் பள்ளிக்குச் செல்லவே அழுதாள். ஆனால், எப்படிக் கேட்டும் காரணத்தை மட்டும் அவள் சொல்லவே இல்லை.

தீபிகாவின் அம்மாவும், அப்பாவும் பள்ளிக்குச் சென்று கேட்டும் அவர்களால் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்பொழுது தான் தீபிகாவின் அம்மாவுக்குச் சட்டென்று மேஜிக் பெட்டியின் நினைவு வந்தது.

அவள் அம்மா, அவளிடம் ஓர் சின்ன மரப்பெட்டியைக் கொடுத்தார். அது மிகவும் அழகாக இருந்தது. அதில் சின்ன சின்ன கண்ணாடி, பல வண்ண நிறத்தில் பூக்கள் என்று அந்த பெட்டி மிகவும் அழகாக இருந்தது.

தீபிகா அதை மிகவும் ஆசையோடு வாங்கிக் கொண்டாள். “தீபிகா, இந்தா மேஜிக் பெட்டி. இதில் நீ ஏன் சோகமா இருக்கன்னு எழுதி பத்திரமா வச்சுக்கோ. மேஜிக் பெட்டி உன் பிரச்சனையைச் சரி பண்ணிடும்” என்று தீபிகாவின் அம்மா கூற, அவளுக்குப் பயங்கர சந்தோஷம்.

கொஞ்சம் தூரம் சென்றதும் மீண்டும் தன் தாயிடம் வந்து, “அம்மா, மேஜிக் பெட்டி உண்மையிலே எல்லாவற்றையும் சரி செய்துவிடுமா?” என்று சந்தேகமாகக் கேட்டாள்.

“கண்டிப்பா, நீ தான் அம்மா அப்பா கிட்ட உன் பிரச்சனையைச் சொல்ல மாட்டேங்குறியே. அப்ப, உன் பிரச்சனையை மேஜிக் பெட்டிக்குள் எழுதி வைத்திரு. அது சரி செஞ்சிடும்.” என்று அவள் அம்மா, அவளுக்கு நம்பிக்கை கொடுத்தார்.

தீபிகாவும் தன் பிரச்சனையை ஒரு காகிதத்தில் எழுதி, அந்த பெட்டிக்குள் போட்டு தன் அறையில் வைத்துவிட்டு, பள்ளிக்குச் சென்றாள்.

தீபிகா, பள்ளிக்குச் சென்ற பின் அவள் அம்மா அதை எடுத்துப் பார்த்தார். உடனே பள்ளிக்குச் சென்று தீபிகாவின் பிரச்சனையைச் சரி செய்தார்.

 தீபிகா அன்று பள்ளியிலிருந்து மிகவும் சந்தோஷமாக வந்தாள். “அம்மா, மேஜிக் பெட்டி எல்லா பிரச்சனையும் சரி செய்திருச்சு” என்று மிகவும் ஆனந்தமாகச் சொன்னாள். அவள் அம்மாவும், “அப்படியா?” என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டார்.

இரண்டு நாட்கள் சென்றன. தீபிகா வழமை போல், சந்தோஷமாகப் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தாள்.

 அப்பொழுது தான் தீபிகாவுக்கு ஒரு சந்தேகம் வந்தது. ‘உண்மையில் மேஜிக் பெட்டி என் பிரச்சனையைச் சரி செய்திருக்குமா?’ என்ற கேள்வி எழ, அவள் நேராக அவள் அம்மாவிடம் சென்றாள்.

“அம்மா, என்னை நாலு பேர் கிண்டல் பண்ணினாங்க. நான் அம்மா அப்பா கிட்டச் சொல்லுவேன். மிஸ் கிட்ட சொல்லுவேன்னு சொன்னேன். ஆனால், என்னை அடிச்சிருவேன்னு மிரட்டினாங்க” தீபிகா, பேசப் பேச அவள் தாயும் தந்தையும் அமைதியாக இருந்தனர்.

“அது தான் பயந்துகிட்டு நான் உங்க கிட்டச் சொல்லலை. ஆனால், இப்ப நீங்க தான் பிரச்சனையைச் சரி செய்திருக்கீங்க. அந்த மேஜிக் பாக்ஸ் எதுவும் பண்ணலை. அதைக் கூட என்னால் அப்ப யோசிக்க முடியலை” என்று தீபிகா வருத்தமாகக் கூற, அவள் அம்மா தன் மகளைப் பார்த்துப் புன்னகைத்தார்.

“உண்மை தீபிகா. நீ பிரச்சனையை உன்கிட்டயே வச்சிருந்தா, உன் மூளை கூட ஒழுங்கா வேலை செய்யாது. எதுவா இருந்தாலும் வீட்டில் அம்மா கிட்ட அப்பா கிட்டயோ பெரியவங்க கிட்டயோ சொல்லிடனும்.” அவள் அம்மா கூற, தீபிகா “சரி அம்மா” என்று தலையசைத்தாள்.

“யார் மிரட்டினாலும் பயப்படக் கூடாது. நீ மிரட்டலுக்குப் பயந்து வீட்டில் சொல்லலைனா பிரச்சனை தான் பெருசாகும்” தீபிகாவின் அப்பா கூற, “சரி அப்பா. எதுவா இருந்தாலும் நான் உடனே வீட்டில் சொல்லிடுவேன்” என்று தீபிகா வேகமாகத் தலையசைத்தாள்.

“அம்மா, என்ன இருந்தாலும் எனக்கு இந்த மேஜிக் பெட்டியை பிடிச்சிருக்கு” தீபிகா அந்த மேஜிக் பெட்டியைக் கையில் வைத்துக்கொண்டு கூற, அவள் அம்மாவும் அப்பாவும் அவளைப் பார்த்துச் சிரித்தனர்.

What’s your Reaction?
+1
2
+1
6
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
1 கருத்து
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments