ரேச்சல் லூயிஸ் கார்சன் (1907-1964)

ரேச்சல் லூயிஸ் கார்சன் (Rachel Louise Carson) அமெரிக்காவைச் சேர்ந்தவர். அமெரிக்க மீன்வளப் பணியகத்தில், கடல் உயிரியலாளராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கினார்.
இயற்கையை மிகவும் நேசித்த இவர், 1950 களில், முழு நேர இயற்கை எழுத்தாளர் ஆனார். இவர் எழுதிய ‘தி சீ அரவுண்ட் அஸ்’ (The Sea Around Us) அமெரிக்காவின் தேசிய புத்தக விருதை வென்றது.

569px Rachel Carson


சுற்றுச்சூழலைக் காப்பதன் அவசியத்தை உணர்ந்த இவர், செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளால், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராயத் தொடங்கினார்.
அமெரிக்காவில் 1920 இல் எல்ம் மரங்களைப் பாதித்த பூஞ்சக்காளான் நோய்க்கு, எறும்பு மருந்தை வண்டி வண்டியாகத் தெளித்தார்கள். அந்த இலைகளைத் தின்ற புழுக்கள், அந்த மருந்தால் பாதிக்கப்பட்டன. அதனால் அந்தப் புழுக்களைத் தின்ற அமெரிக்க ராபின் குருவிகளுக்கும், பாதிப்பு ஏற்பட்டது. அமெரிக்க ராபின் குருவிகள் பெருமளவு அழிந்தன. 1954 க்குப் பிறகு, அவற்றைக் காண்பதே அரிதாகிவிட்டது.


தம் பாடல் மூலம் வசந்தத்தைக் கட்டியம் கூறி வரவேற்கும் ராபின் குருவிகள் இல்லாமல், அமெரிக்காவில் வசந்த காலத்தில் மயான அமைதி நிலவியது. இந்த உண்மைகளை எடுத்துக் கூறி, இவர் எழுதிய புத்தகம் தான் ‘மெளன வசந்தம்’ (1962). (The Silent Spring) இந்நூலைப் பேராசிரியர் ச.வின்செண்ட், தமிழாக்கம் செய்து வெளியிட்டுள்ளார். எதிர் பதிப்பகம் மூலம், இது வெளிவந்துள்ளது.


பூச்சிக்கொல்லி மருந்துகளின் பாதிப்புகளை உலகம் அறிய செய்த மிக முக்கியமான புத்தகமிது. அதற்குப் பிறகு தான், எறும்பு மருந்தை உலகமுழுதும் தடை செய்தார்கள். சுற்றுச்சூழல் இயக்கத்துக்கு, உத்வேகம் தந்த நூல் இது எனலாம்.


உலகை மாற்றிய ஐந்து புத்தகங்களில் இதுவும் ஒன்று என்று குறிப்பிடப்படுவதிலிருந்து, இவர் சுற்றுச்சூழலுக்கு ஆற்றியிருக்கும் பங்களிப்பை நாம் அறிந்து கொள்ளவியலும்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments