காட்டில் ஓர் ஆமையும் நத்தையும் அருகருகே வசித்து வந்தன. நட்புடன் பழகி வந்தன.
அவை இரண்டிற்கும் தங்களால் வேகமாக ஓட முடியவில்லை என்று மனதில் பெரிய வருத்தம். வேகமாக ஓடும் விலங்குகளைப் பார்த்துப் பார்த்து வருந்தின.
“நம்மால் இப்படி ஓட முடியவில்லையே!. நம்மை மட்டும் ஏன் இப்படி இறைவன் படைத்து விட்டான்?”
என்று குமுறிக் கொண்டே இருந்தன.
ஒரு நாள் அவை மெதுவாக நகர்ந்து இரை தேடிச் சென்று கொண்டிருந்தன. அருகில் ஒரு முயல் துள்ளிக் குதித்து ஓடி வந்தது.
” முயலாரே! முயலாரே! உங்களைப் போல் வேகமாக ஓட எங்களுக்கும் சொல்லிக் கொடுக்கிறீர்களா?”
என்று ஆமையும் நத்தையும் முயலை வேண்டின.
முயல் அவற்றைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தது.
“உஙகளுடைய ஓடுகளால் தான் உங்களால் வேகமாக ஓட முடியவில்லை. ஓடுகளைக் களைந்து விட்டு வாருங்கள். நான் உங்களுக்கு வேகமாக ஓடக் கற்றுத் தருகிறேன்”
என்று சொல்லி விட்டு அங்கிருந்து ஓடியது.
ஆமையும் நத்தையும் உடனே தங்களுடைய ஓடுகளைக் களைந்து விடும் முயற்சியில்
தீவிரமாக ஈடுபட்டன. அப்போது திடீரென அருகில் இருந்த புதரில் சலசலப்பு ஏற்பட்டது. உடனே முன்னெச்சரிக்கையுடன்
தங்களுடைய கூட்டிற்குள் ஒளிந்து கொண்டன. புதரிலிருந்து இரை தேடி ஓர் ஓநாய் வெளியே வந்து முயலின் பின்னே ஓடியது.
சிறிது நேரம் கழித்துத் தமது ஓடுகளிலிருந்து தலையை மட்டும் வெளியே நீட்டிப் பார்த்தன. முயலின் ரத்தத்தைப் பார்த்து மனதில் வருத்தமடைந்தன.
முயல் ஓநாய்க்கு இரையான விஷயம் புரிந்தது.
அந்த நிமிடம் அவற்றிற்குத் தங்களின் ஓடுகளின் மகிமை புரிந்தது. உயிரையே காப்பாற்றத் தானே தமக்குக் கவசமாக இறைவன் ஓடுகளைத் தந்திருக்கிறான்? அப்படி இருக்கும் போது தம்மால் முடியாத ஒரு செயலுக்காக வருந்திய தங்களுடைய முட்டாள் தனம் அவற்றிற்கு நன்றாகப் புரிந்தது.
அதற்குப் பின்னர் வேகமாக ஓட முடியவில்லை என்ற வருத்தமும் அவற்றின் மனதை விட்டு ஓடியது.
உயிர் காக்கும் ஓடுகளை எண்ணிப் பெருமை கொண்டன. அன்று முதல் சந்தோஷமாக வாழ்ந்தன.
நமக்குக் கிடைத்த நல்ல சிறப்புக்களைப் போற்றி வாழ வேண்டும். இல்லாததை எண்ணி இருப்பதை இகழக் கூடாது.
ஆண்டவன் படைப்பில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறது. இருப்பதில் இன்பம் கொண்டு இனிதே வாழ்வோம்.நிறைவுடன் வாழ்வோம்.
வங்கி வேலை, கணித ஆசிரியை அவதாரங்களுக்குப் பிறகு இப்போது எழுத்தாளர். அதுவும் சிறுவர் கதைகள் எழுத மனதிற்குப் பிடிக்கிறது. மாயாஜாலங்கள், மந்திரவாதி கதைகள் எழுத ஆசை. பூஞ்சிட்டு இதழ் மூலமாக உங்களுடன் உரையாடத் தொடர்ந்து வரப் போகிறேன். மகிழ்ச்சியுடன் நன்றி.