அது ஒரு பாலைவனம் அங்கே நிறைய ஒட்டகம் இருந்துச்சு. அதுல ஒரு ஒட்டகம் பேரு கிட்டி. கிட்டி படு சுட்டியாம். ஆனா எல்லோருக்கும் உதவி செய்யுமாம். ஒரு நாள் அதுமட்டும் தனியா தூரமா விளையாட போயிடுச்சு. எங்கேயோ ஒரு சத்தம் கேட்டுச்சாம். அங்க ஓடிப்போயி பார்த்தா கருப்பா, குண்டா ஒரு உருவம் இருந்துச்சு. அதுக்குப் பயம் வந்துடுச்சு. இருந்தாலும் வெளியே காட்டிக்காம “யாரு நீ? இது எங்க ஏரியா. இங்க என்ன பண்றன்னு கேட்டுச்சாம்”.
“என் பேரு பட்டு. நான் ஒரு யானை. எங்க அம்மா, அப்பா, அண்ணன், தாத்தா எல்லோரும் வேற காட்டுக்கு நடந்து போகும்போது நான் வழி தவறி இங்க வந்துட்டேன். எனக்குத் தண்ணி தாகமா இருக்கு. எப்படியாவது எங்க அம்மா கூட சேர்த்துடுன்னு சொல்லுச்சு.”

“உன்ன பார்த்தா பாவமா இருக்கு. என்கிட்ட கொஞ்சம் தண்ணி இருக்கு. குடின்னு கொடுத்துச்சு” கிட்டி.
“வாங்கித் தண்ணியைக் குடிச்சிட்டு என்னா வெயிலு எங்கேயும் நிழலே இல்லன்னு சொல்லுச்சு” பட்டு.
“இது பாலைவனம். இங்க வெயிலும், மணலும் நிறைய இருக்கும். நான் உயரமா இருக்கேன்ல நீ என்னோட நிழலில் நடந்து வா. சூடு தெரியாதுன்னு சொல்ல”, அதோட நிழலில் நடந்து வந்துச்சாம் பட்டு.
கொஞ்ச தூரம் நடந்து வந்தப்ப யானைக் கூட்டம் ஒன்னு காட்டிலிருந்து வந்துச்சு. பட்டு,” எங்க அம்மா வந்துட்டாங்க” சொன்னவுடன் அவங்ககிட்ட யானையைக் கூட்டிட்டு போயி விட்டுச்சு கிட்டி.
எல்லோரும் “நன்றி” சொன்னாங்க. திரும்பவும் அம்மாகிட்ட ஓடி வந்துச்சாம் கிட்டி.