காட்டில் ஒரு மரத்தில் அரக்கன் ஒருவன் வசித்து வந்தான். ஓர் இளைஞன் காட்டுக்குள் வந்த போது அரக்கன்
அவனைப் பிடித்துக் கொண்டு விட்டான். தன்னை எங்கு சென்றாலும் தோள்களில்
சுமந்து கொண்டே செல்லும்படி கட்டளை இட்டு அவனது தோள்களில் ஏறிக் கொண்டான்.
தனது விதியை நொந்துகொண்ட இளைஞன் எங்கு சென்றாலும் அரக்கனைச் சுமந்து கொண்டு சென்றான். அரக்கனின் சுமையை எப்படி விட்டொழிப்பது என்று வருத்தப் பட்டுக் கொண்டிருந்தான்.
ஒருநாள் அரக்கனின் கால்கள் மிகவும் மென்மையாக இருப்பதை கவனித்து விட்டு அரக்கனிடம் கேட்டான்.
“உனது கால்கள் ஏன் இவ்வளவு மென்மையாக இருக்கின்றன.?”
உடனே அந்த அரக்கனும் கொஞ்சம் கூட யோசிக்காமல் அவனுக்கு மகிழ்ச்சியுடன் பதில் கூறினான்.
“நான் குளித்து முடித்து வந்தவுடன் கால்களில் ஈரம் காயும் வரை நடக்கமாட்டேன். நன்றாகக் காய்ந்த பின்னர் தான் கால்களைத் தரையில் ஊன்றுவேன்.”
அதைக் கேட்டு மகிழ்ந்த இளைஞன் அடுத்த நாள் அரக்கனைக் குளத்தருகே நீராடுவதற்காக இறக்கி விட்டான். குளித்து முடித்து விட்டு அவன் வரும் வரை சாதாரணமாக குளக்கரையில் காத்துக் கொண்டிருப்பான். இப்போது அவன் கால்களின் ஈரம் காயும் வரை எப்படியும் தன்னைத் துரத்த மாட்டான் என்பதால் துணிவுடன் அங்கிருந்து விரைந்து தப்பி ஓட ஆரம்பித்தான்.
தனது கால்கள் ஈரமாக இருந்ததால் அவனைத் துரத்திக் கொண்டு ஓட முடியாத அரக்கன், தான் முட்டாள்தனமாகத்
தனது கால்களைப் பற்றி இளைஞனிடம் சொல்லி இளைஞன் தப்பிக்க வழி காண்பித்து விட்டோமே என்று வருந்தினான்.
இளைஞனும் தனது அறிவின் உதவியால் அரக்கனின் பிடியிலிருந்து தப்பினான்.
அறிவே நமக்கு சிறந்த ஆயுதம்.
நுணலும் தன் வாயால் கெடும்.
வங்கி வேலை, கணித ஆசிரியை அவதாரங்களுக்குப் பிறகு இப்போது எழுத்தாளர். அதுவும் சிறுவர் கதைகள் எழுத மனதிற்குப் பிடிக்கிறது. மாயாஜாலங்கள், மந்திரவாதி கதைகள் எழுத ஆசை. பூஞ்சிட்டு இதழ் மூலமாக உங்களுடன் உரையாடத் தொடர்ந்து வரப் போகிறேன். மகிழ்ச்சியுடன் நன்றி.