(ரயிலின் நண்பர்கள். தி ரயில்வே சில்ரன் என்ற நாவல் 1905இல் எடித் நெஸ்பிட் என்ற பெண் எழுத்தாளரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. அப்போது நடந்த போர்கள், ரஷ்ய- ஜப்பானிய- ஆங்கிலேய அரசியல் சூழல்கள் இவற்றின் பின்னணியில், குழந்தைகளை மையமாக வைத்து இந்த நாவலை எழுதியுள்ளார் நெஸ்பிட். அவர் சந்தித்த சில நண்பர்களின் வாழ்வைத் தழுவியும் இந்த நாவலில் சம்பவங்கள் வருகின்றன. பலமுறை திரைப்படமாக எடுக்கப்பட்ட புகழ்பெற்ற நாவல் இது. தி ரயில்வே சில்ரன் நாவலை பூஞ்சிட்டு வாசகர்களுக்காக மொழியாக்கம் செய்து தருவதில்லை மகிழ்ச்சி அடைகிறேன்.
-டாக்டர் அகிலாண்ட பாரதி
ரயிலின் நண்பர்கள்
அத்தியாயம் 1
அவர்கள் சாதாரணக் குழந்தைகள் தான். என்னையும் உங்களையும் போல கவலையின்றி துள்ளித்திரிந்து விளையாடுபவர்கள்தான். அழகான வீடு, நல்ல வசதியான பெற்றோர், அன்பான குடும்பம் எல்லாம் அவர்களுக்குக் கிடைத்திருந்தது. யார் அவர்கள்? ராபர்ட்டா, பீட்டர், ஃபிலிஸ் இவர்கள் தான் அந்த மூன்று பேர். ராபர்ட்டா இவர்களில் மூத்த சகோதரி. அவளுக்கு அடுத்து தம்பியான பீட்டர். பீட்டரை விடச் சிறியவள் ஃபிலிஸ்.
மூவரும் எல்லாக் குழந்தைகளையும் போல இருந்தது, பள்ளிக்குச் சென்றது எல்லாம் பீட்டரின் பத்தாவது பிறந்தநாள் வரைதான். பீட்டரின் பத்தாவது பிறந்த நாள் மிகவும் மகிழ்ச்சியாக கழிந்தது நிறைய நண்பர்கள் வந்திருந்தனர் ஏகப்பட்ட பரிசுகள் அவனுக்குக் கிடைத்தன. அந்தப் பரிசுகளும் ஒரு ரயில் எஞ்சினும் ஒன்று. அன்றைய நாள் முழுவதும் மூவரும் அந்த ரயில் இன்ஜினை வைத்து மகிழ்ச்சியாக விளையாடினார்கள். ஆனால் மறுநாளே வருந்தத்தக்க விதமாக அந்த என்ஜின் உடைந்துவிட்டது. அன்றுமுதல் அவர்கள் வாழ்வும் மாறிவிட்டது.
“அப்பா இந்த இன்ஜின் உடைஞ்சிடுச்சு. எங்களுக்கு ரொம்ப ரொம்பப் பிடிச்ச பொருள் இது. இதை சரி பண்ணித் தாங்களேன்?” என்று மூவரும் சென்று அவர்களது தந்தையிடம் கேட்டனர்.
அவரது தந்தை ஒரு பெரிய நிறுவனத்தில் நல்ல பொறுப்பில் இருந்தார். பொம்மைகள், கார், விளையாட்டுப் பொருட்களில் ஏற்படும் பழுதுகளை சரி செய்து விடுவார். “இந்த சனிக்கிழமை முழுசும் உங்களுக்காகவே நான் ஒதுக்குறேன்.. இந்த ரயில் இன்ஜினை நாம சேர்ந்து சரி பண்ணிடலாம்” என்றார். மகிழ்ச்சியுடன் சனிக்கிழமை வருவதற்காகக் குழந்தைகள் காத்திருந்தனர்.
ஆனால் அதற்கு முதல் நாளே அவர்களது வீட்டில் ஒரு பரபரப்பான சம்பவம் நடந்தது. ராபர்ட்டா, பீட்டர் மற்றும் ஃபிலிஸ் மூவரும் உள்ளறையில் படித்துக் கொண்டிருக்க, அப்பாவைப் பார்க்க சில மனிதர்கள் வந்தார்கள். அவர்களுக்கும் அப்பாவுக்கும் ஏதோ காரசாரமான விவாதம் நடந்தது. பின் அவர்களுடன் அப்பாவும் காரில் ஏறிப் போய்விட்டார். வெகு நேரம் கழித்து இவர்களது அறைக்கு வந்த அம்மாவின் முகம் சோகமாக இருந்தது.
“அம்மா! அப்பா எங்கேம்மா?” என்று ஃபிலிஸ் கேட்டாள்.
“அப்பாவுக்கு ஒரு அவசர வேலை வந்துடுச்சு.. அதனால போயிட்டாங்க. முடிஞ்ச அளவு சீக்கிரம் வந்துடுவாங்க.. நீங்க சீக்கிரம் தூங்குங்க” என்று கூறிவிட்டு அம்மா சென்றார். இவர்களும் விரைவில் உணவை முடித்துவிட்டுத் தூங்கினர்.
காலையில் மூவரும் கண்விழிக்கையில் அம்மா வீட்டில் இல்லை. “அம்மா முக்கியமான வேலையா லண்டனுக்கு போய் இருக்காங்க.. சாயங்காலம் வர்றதுக்கு நேரம் ஆகும்னு சொன்னாங்க” என்று அவர்களது வீட்டின் பணிப்பெண் கூறினார்.
மாலையில் வெகு நேரம் கழித்துத் திரும்பி வந்த அம்மா மிகவும் சோர்வுடன் காணப்பட்டார். “அம்மா! அப்பா எப்ப வருவாங்க?” என்று பீட்டர் கேட்க,
“நீங்க தைரியமான குழந்தைகள் ஆச்சே.. நான் சொல்றதைக் கேப்பீங்களா?” என்றார் அம்மா.
“என்னம்மா?” என்று ராபர்ட் கேட்க,
“நம்ம வாழ்க்கையில இப்ப சில மாற்றங்கள் வரப்போகுது.. நாம இங்கே இருந்து கிராமத்துக்கு போகப் போறோம். இதைவிட சின்ன வீட்ல இருக்க நீங்க பழகிக்கணும்.. ரொம்பக் குறைவான பொருட்கள் தான் அங்கே இருக்கும். அப்பாவும் நம்ம கூட வருவாங்க.. ஆனா அதுக்கு ரொம்ப நாள் ஆகும்” என்றார் அம்மா.
“ஏன்மா?” என்று பீட்டர் கேட்க,
“அதுவா? நாம ஏழைங்க மாதிரி வாழுற விளையாட்டு விளையாடப் போறோம்” என்றபடி புன்னகைத்தார் அம்மா. அம்மாவின் புன்னகையில் சோகம் இருப்பது போல் ராபர்ட்டாவுக்குத் தெரிந்தது. பீட்டரும் ஃபிலிஸும், “சரிம்மா! நாங்களும் அந்த விளையாட்டு விளையாட வர்றோம்” என்று ஆவலுடன் கூறினார்கள்.
ஓரிரு நாட்களிலேயே அவர்களது வீட்டிலிருந்த முக்கியமான பொருட்கள் தவிர, பெட்டிகளில் கட்டப்பட்ட கலைப்பொருட்கள், பெரிய பெரிய மேஜைகள், நாற்காலிகள், பாத்திரங்கள் அனைத்தையும் யார் யாரோ வந்து வாங்கிப் போனார்கள். “அப்ப ரயில் இன்ஜினை சரி பண்ண முடியாதா அம்மா?” என்று பீட்டர் கேட்டதற்கு அம்மா பதிலே சொல்லவில்லை.
அம்மா கூறியது போலவே நான்கு பேரும் சற்றுத் தள்ளி உள்ள கிராமம் ஒன்றில் குடியேறினர். அவர்கள் வீடு மிகவும் சிறியதாக இருந்தது. இருந்தாலும் அந்த சுற்றுப்புறத்தையும் அதன் அழகையும் குழந்தைகள் ரசித்தனர். எப்பொழுதும் கலகலப்பான சுபாவம் உடைய அவர்களால் அந்த ஊரில் வெகு சீக்கிரம் ஒன்றிப் போக முடிந்தது. அம்மா அவர்களைப் பள்ளியில் சேர்ப்பது பற்றி எதுவும் சொல்லவில்லை. அதனால் பகல் முழுவதும் அங்குமிங்கும் சுற்றித் திரிந்து பொழுதைப் போக்கினார்கள். அது ஒரு வகையில் அவர்களுக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது.
இவர்களது வீட்டில் இருந்து சற்றுத் தள்ளி ஒரு ரயில் நிலையம் இருந்தது. அதிலிருந்து கிளம்பும் ரயிலை அடிக்கடி போய்ப் பார்ப்பதும், அருகிலிருந்த ஒரு மலைக் குகையின் வழியே ரயில் நுழைந்து வெளியே வருவதை சற்று உயரத்தில் இருந்து பார்ப்பதும் அவங்களுக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்காக மாறியது. குகையிலிருந்து ரயில் வெளியே வருவதைப் பார்க்கும் போது ஒரு பெரிய டிராகன் தன் குகையில் இருந்து வெளி வருவதைப் போல் இருக்கிறது என்று ராபர்ட்டா கூறினாள். ரயிலை மூவரும் தங்கள் விளையாட்டுத் தோழனாகவே எண்ணத் துவங்கினர்.
-தொடரும்
குழந்தைகள் மத்தியில் இருப்பது எப்போதும் பிடிக்கும். ‘கதை சொல்லு கதை கேளு’ என்ற பெயரில் குழு ஒன்றை நடத்தி வருகிறேன். நாவல்கள், சிறுகதைகள், மருத்துவக் கட்டுரைகள் சில வருடங்களாக எழுதி வருகிறேன்.