ஆறாம் வகுப்பு ‘அ’ பிரிவு வகுப்பறையில் ஆசிரியர் இல்லாமல் மாணவர்கள் அனைவரும் அங்குமிங்குமாய் அமர்ந்து கொண்டு பேசிக்கொண்டும் விளையாடிக் கொண்டும் இருந்தனர். கடைசிக்கு முந்தைய பெஞ்சில் அகிலா அழுதுக்கொண்டிருக்க ரேவதி அவளை அருகில் இருந்து சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள்.

“அழாத அகிலா… டீச்சர் கிட்ட மேக்ஸ் நோட்ட வீட்ல மறந்து வச்சிட்டு வந்துட்டேன்னு சொல்லிரு… டீச்சர் நாளைக்கு கொண்டு வந்து காட்டுன்னு சொல்லுவாங்க… பயப்படாத…”

“இல்ல ரேவதி… டீச்சருக்கு சும்மாவே என்ன பிடிக்காது… நா சரியா கணக்கு போட மாட்டுக்கேன்னு என்னய திட்டிக்கிட்டே இருப்பாங்க… நா நோட்டு கொண்டு வரலனு சொன்னா அவ்ளோதான்…”

திடீரென வகுப்பினுள் கோபி சாக்பீஸ் மற்றும் டஸ்டருடன் நுழைந்தான். மொத்த வகுப்பும் அமைதியாகி மாணவர்கள் அனைவரும் அவன் ஏதோ சொல்ல போகிறான் என்று அவனை உற்று கவனித்தார்கள்.

“ரமணி டீச்சர் ஹெச்.எம்மை பார்க்க போயிருக்காங்க… இப்போ வந்துடுவாங்க… பேசுறவங்க பேரை போர்ட்ல எழுதி போட சொன்னாங்க… எல்லாரும் அவரவர் இடத்துக்கு போங்க…” என்றான்.

akila marandha padam
படம்: அப்புசிவா

கோபி தான் அந்த வகுப்பின் லீடர். மேலும் ரமணி டீச்சரின் செல்லப் பிள்ளை. அதனால் அனைத்து மாணவர்களும் அவனுக்கு பயந்து நடப்பார்கள். ஒரு நிமிடத்தில் அனைத்து மாணவர்களும் அவரவர் இடத்துக்கு சென்று அமர்ந்து வகுப்பறை சீரானது. ஒரு சின்ன குண்டூசி கீழே விழுந்தாலும் சத்தம் கேட்கும் அளவிற்கு அமைதி நிலவியது.

அகிலாவுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்ததாக எண்ணினாள். ரமணி டீச்சர் வரும் முன் ஹோம்ஒர்க் கணக்குகளை முடித்துவிடலாம் என்று நினைத்து ரேவதி பையில் ஒழித்து வைத்த தனது நோட்டை எடுத்து எழுத தொடங்கினாள்.
அவள் சீக்கிரம் பார்த்து எழுதுவதற்காக ரேவதி தனது நோட்டை எடுத்து கொடுத்து கைகளால் செய்கை செய்து கண்களால் பேசினாள். கோபி இருவரையும் நோட்டமிடுவதை பார்த்து ரேவதி தனது ஆள் காட்டி விரலை வாயில் வைத்து மூடிக்கொண்டாள்.

அகிலா வேக வேகமாக ரேவதியின் நோட்டை பார்த்து கணக்குகளை எழுதிக்கொண்டிருந்தாள். இன்னும் மூன்று கணக்கு தான் மீதம் இருந்தது. அகிலாவுக்கு டீச்சரிடமிருந்து தப்பி விடுவோம் என்ற நம்பிக்கை வந்ததால் முகத்தில் பயம் மறைந்து தெளிவு உண்டானது. மகிழ்ச்சியில் ரேவதியை பார்த்து சிரித்துவிட்டு தொடர்ந்து எழுதினாள்.

சட்டென்று ரமணி டீச்சர் வகுப்பறையினுள் நுழைந்தார். அகிலாவின் கண்கள் பொங்கியது. இன்னும் அவளுக்கு இரண்டு கணக்குகள் தான் மீதம் இருந்தது.

அமைதியாக இருந்த வகுப்பறையை பார்த்துவிட்டு
“கோபி… வெரி குட்… உன் இடத்துக்கு போ…” என்று சொல்லிக்கொண்டே மேஜையில் புத்தகங்களை வைத்துவிட்டு நாற்காலியில் அமர்ந்தார்.

“ம்ம்ம்… ஹோம்ஒர்க் நோட்டை எல்லாரும் கொண்டுவந்து வைங்க… ஹோம்ஒர்க் எழுதாதவங்க முன்னாடி வாங்க…”

அனைத்து மாணவர்களும் ஒருவர் பின் ஒருவராக தங்களது நோட்டுகளை கொண்டு போய் டீச்சரின் மேஜையில் வைத்துவிட்டு வந்தார்கள். ரேவதி தனது நோட்டை அகிலாவிடம் இருந்து வாங்கிக்கொண்டு சென்று மேஜையில் வைத்தாள். அகிலா அழுதுக்கொண்டே டீச்சரின் மேஜைக்கு அருகே சென்று நின்றாள்.

அவளை தவிர அனைத்து மாணவர்களும் ஹோம் ஒர்க் நோட்டை மேஜையில் வைத்துவிட்டார்கள். அகிலா இரண்டு கண்களிலிருந்து வடியும் கண்ணீரை துடைத்தப்படி தலைகுனிந்து நின்று கொண்டிருந்தாள்.

“அகிலா… நீ மட்டும் தான் ஹோம் ஒர்க் எழுதலையா… ஏன் எழுதல…?”என்றார் டீச்சர்.

“இல்ல டீச்சர்… ம்உம்… ம்உம்… ம்ஊம்…” என்று ஏங்கியப்படி அழுதுகொண்டே இருந்தாள் அகிலா.

“முதல்ல அழுகைய நிறுத்து… ஏன் ஹோம்ஒர்க் எழுதலன்னு சொல்லு… ரேவதி… அகிலாவோட தண்ணி பாட்டில எடுத்துட்டு வா…”

ரேவதி தண்ணீர் பாட்டிலை திறந்து அகிலாவிடம் கொடுத்துவிட்டு “டீச்சர்… அவ எழுதிட்டா டீச்சர்… ரெண்டே ரெண்டு கணக்கு மட்டும் தான் முடிக்கல டீச்சர்…” என்றாள்.

“ம்ம்ம்… அப்படியா… அதுக்கு ஏன் இப்படி அழுவுற… இங்க உட்கார்ந்து அந்த ரெண்டு கணக்கையும் எழுதிட்டு உன் இடத்துக்கு போ…” என்றார் ரமணி டீச்சர். அகிலா தனது அழுகையை நிறுத்திவிட்டு தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டாள்.

“டீச்சர்… நேத்து என் சித்தப்பா பசங்க வீட்டுக்கு வந்திருந்தாங்க… அவங்க கூட விளையாடிட்டு இருந்தேன்… அதனால் மேக்ஸ் ஹோம்ஓர்க் எழுத மறந்துட்டேன்… நீங்க திட்டுவீங்கன்னு பயந்து இங்க வந்து தான் அவசர அவசரமா ரேவதி நோட்டை பார்த்து கணக்குகளை எழுதினேன் டீச்சர்…. இனி இந்த மாதிரி செய்ய மாட்டேன்… சாரி டீச்சர்…” என்றாள் அகிலா.

ரமணி டீச்சர் ஒரு நிமிடம் அகிலாவை முறைத்து பார்த்துக்கொண்டே இருந்தார். அகிலாவின் கண்கள் மீண்டும் பொங்கி வடிய தொடங்கின.

“நிறுத்து அழுகைய…” என்று கனத்த குரலில் கத்தினார் ரமணி டீச்சர். ஒரு நொடி படபடத்து பயந்தவாறே டீச்சரை பார்த்தாள் அகிலா.

“முதலிலேயே உண்மையை நீ சொல்லியிருக்கலாம். பொய் சொல்லதான் பயம் வேணும். சரி…சரி. இனிமே பொறுப்பா நடந்துக்கோ. இங்கே உட்கார்ந்து முதலில் இருந்து நீயே போடு. சந்தேகம் வந்தால் என்னை கேளு. அதுக்குதான் நான் இருக்கேன்” என்றார் ரமணி டீச்சர்.

அகிலாவுக்கும் பயம் தெளிந்து தெளிவு வந்தது. அழுகையை நிறுத்திவிட்டு தன் கணக்கு நோட்டை எடுத்துவந்து டீச்சரின் மேஜைக்கு அருகில் அமர்ந்து ஹோம்ஒர்க் கணக்குகளை முதலில் இருந்து சொந்தமாக எழுத தொடங்கினாள். மற்ற மாணவர்களை அடுத்த வாரம் நடைபெற இருக்கும் தேர்வுக்கு ஆயத்தமாக கணக்குகளை பார்க்க சொல்லிவிட்டு ஹோம்ஒர்க் நோட்டுகளை திருத்த ஆரம்பித்தார் ரமணி டீச்சர்.

– அன்புடையார்

What’s your Reaction?
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments