வணக்கம் பூஞ்சிட்டுக்களே!
உங்களுடைய இந்த ஆண்டின் இலக்கு என்ன ? அதன் நோக்கம் என்ன?
புது ஆண்டின் முதல் மாதம் என்பதால் இந்த ஆண்டின் இலக்கு என்ன ? என்ற கேள்வி பொதுவாக கேட்க நேரிடும்.
உங்களுடைய இலக்கு என்னவெல்லாம் என்று இப்பொழுது ஒரு முறை நினைவு படுத்தி கொள்ளுங்கள்.
இப்போ உங்க இலக்கு சமூகத்தோடு தொடர்புடைய பரந்து பட்ட சிந்தனையோட இருக்கா என்று யோசித்து பாருங்கள்.
உதாரணமாக என்னுடைய ஒரு குறிக்கோளை எடுத்து கொள்வோம். இந்த வருடம் வாரம் ஒரு புத்தகம் வீதம் 50 புத்தகம் வாசிக்க வேண்டும் என்பது எனது இலக்கு.
இந்த வாரம் ஒரு புத்தகம் வாசிக்க வேண்டும் என்ற இலக்கை மட்டுமே கொண்டிருந்தால் எனக்கு கிடைக்கும் உற்சாகத்தை விட , என்னுடைய வாசிப்பின் நோக்கம் என்ன? அதன் மூலம் எனக்கும் என் சமூகத்துக்கும் கிடைக்க போகும் நன்மை என்ன ? என்று சிந்திக்கும் போது அந்த வாசிப்பு இன்னும் வலுவானதாகிறது.

நான் வாசித்ததை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும், பள்ளி குழந்தைகளோடு பயனுள்ள தலைப்புகளில் உரையாட வேண்டும், சின்னஞ்சிறு குழந்தைகளோடு நான் வாசித்த கதைகளை பேச வேண்டும், பெரியவர்களோடு புத்தகத்திலுள்ள அத்தியாயங்களை ஆராய்ந்து பல்வேறு கோணங்களை பேச வேண்டும், பிற மொழி நூல் கருத்துக்களை நம் மொழியில் எழுத வேண்டும், பெரிய கருத்துக்களை கதை வடிவமாக மாற்றி எழுத வேண்டும் இப்படி என்னுடைய வாசிக்கும் இலக்கை சமூகத்தோடு இணைத்து பரந்த நோக்கத்தோடு பார்க்கும் பொழுது அதன் உற்சாகம் அதிகமாகிறது.
தினமும் நடப்பது நம் இலக்கு என்றால் அந்த நடை பழக்கத்தின் மூலம் நமக்கு கிடைக்கும் ஆரோக்கியம் நம் நோக்கம். நம்மை பார்த்து நமது குடும்பமும் , நம் நண்பர்களும் ஆரோக்கியத்தை பற்றி நினைக்க நாம் ஒரு தூண்டுகோள் என்பதை நாம் உணர்ந்து நடக்க வேண்டும். நல்ல மாற்றங்கள் நம் வார்த்தைகளை விட நம் செயல் மூலம் தொடங்கட்டும்.
தினமும் ஏதேனும் ஒன்றை வரைவது நம் இலக்கு என்றால், அந்த வரைபடம் பார்ப்பவர்கள் நெஞ்சில் ஏற்படுத்தும் தாக்கம் நல்ல நோக்கமாக இருக்க வேண்டும்.
நாம் முதல் மதிப்பெண் வாங்குவது நம் இலக்கு என்றால், அந்த அறிவை பயன்படுத்தி சமூகத்துக்கு பயனுள்ள பல கண்டு பிடிப்புகளை நாம் உருவாக்க போவது நம் நோக்கமாக இருந்தால் எவ்வளவு பெரிய உயரங்களையு ம் அடையும் உற்சாகம் நம்மை தொற்றிக்கொள்ளும்.
உங்கள் இலக்குகளுக்கான நோக்கங்களை கண்டுபிடியுங்கள்!
உங்கள் நோக்கத்திற்காக இலக்குகளை ஒவ்வொரு வருடமும் அடையுங்கள்!
உற்சாகத்தோடு !
இசை சுரேஷ் அவர்களின் இலக்கு குறித்த கண்ணோட்டம் நிச்சயம் சிறார்கள் மத்தியில் நூல்கள் படிப்பதற்கு ஒரு தாக்கத்தையும் உத்வேகத்தையும் தரும்.