ஒரு நாள் மாலை ஆற்றங்கரையோரமாக ஒரு தமிழாசிரியர் தன் மாணவனுடன் நடந்து வந்து கொண்டிருந்தார். 

அந்த மாணவன் தன் ஆசிரியரிடம் கேள்வி கேட்டபடி இருந்தான். 

“சார்! எண்ணமும் செயலும் நல்லதா இருந்து முழுதா முயற்சி செய்தா எதையும் சாதிக்க முடியும்னு சொல்லி குடுத்தீங்களே.. எப்டி சார்? ” என்று கேட்டான். 

“ஆமாம்ப்பா! நன்மை கருதி நாம ஒரு விஷயத்தில முழுமையா இறங்கி விடா முயற்சியோட அதை செய்தா முடியவே முடியாதுன்னு சொல்றதக் கூட முடிச்சிக் காட்ட முடியும்.” என்றார் ஆசிரியர். 

“எப்டி சார்?” என்று நம்பாமல் கேட்டான் மாணவன். அவர் அதை விளக்க ஆரம்பிக்கும் போது, ஒரு காட்சி அவர்களின் கவனத்தை ஈர்த்தது. 

ஒரு சிட்டுக் குருவி தன்னுடைய முட்டையை கவ்விக் கொண்டு ஆற்றின் மேலாகப் பறந்தது.மிகவும் கவனமாக பறந்த போதிலும் முட்டை தவறி நீரில் விழுந்துவிட்டது. சிட்டுக் குருவி தவியாய் தவித்தது. அங்கும் இங்கும் தேடியது. எங்கும் கிடைக்கவில்லை.

sparrow egg

முட்டை கிடைக்கவில்லை. அதனால் அது தன் சிறகுகளைக் கொண்டு தண்ணீரை தள்ளி விட்டுத் தள்ளி விட்டுத் தேடிக் கொண்டே இருந்தது.

அலுக்காமல் கண்ணும் கருத்துமாய் தன் தேடலைத் தொடர்ந்தது.

இதைப் பார்த்த இருவரும் மிகவும் வருந்தினர். 

“ஐயோ பாவம்! அந்தக் குருவியோட முட்டை தண்ணில விழுந்திடுச்சு..” என்று மாணவன் வருந்தினான். 

குருவியின் செயலைக் கூர்ந்து பார்த்த ஆசிரியர், 

“அது என்ன பண்ணுதுன்னு புரியுதா?” என்று கேட்டார். 

“அது தன் முட்டை தண்ணியில விழுந்துடுச்சுன்னு தவிக்கிது சார்.” என்று  கூறினான் மாணவன். 

“அது தவிக்கல.. தன் முட்டைய தண்ணிக்குள்ளயிருந்து எடுக்க தன்னால முடிஞ்ச வரை தண்ணிய தன் இறகுகளால தள்ளி விடுது..” என்றார் ஆசிரியர். 

“சார்! என்னதான் அது இறகுகளால தண்ணிய தள்ளி விட்டாலும் அதால எப்டி சார் தண்ணிக்கு அடியில போயிட்ட முட்டைய எடுக்க முடியும்? சரியான முட்டாள் குருவியா இருக்கே?!” என்றான் மாணவன். 

அப்போது எங்கிருந்தோ பறந்து வந்த சில கழுகுகள் தண்ணீரின் மிக அருகில் வேகமாகப் பறந்தன. அத்தனை கழுகுகள்  வேகமாகப் பறந்ததால் தண்ணீர் விலகி, அங்கிருந்த சிறு மணல் திட்டு தண்ணீருக்கு வெளியே தெரிந்தது. திட்டின் மேல் இருந்த குருவியின் முட்டையும் வெளியில் தெரிந்தது. குருவியும் பறந்து சென்று தன் முட்டையை எடுத்துக் கொண்டு மிக மகிழ்ச்சியுடன் அங்கிருந்து பறந்து சென்றது. 

இதைப் பார்த்த மாணவன் வியப்படைந்தான். 

ஆசிரியர் அவனுக்கு இப்போது விளக்கினார். 

“இப்ப உனக்குப் புரியுதாப்பா.. அந்த குருவியோட எண்ணமும் செயலும் தன் முட்டையைக் காப்பாத்தணும்ங்கறதுதான்.. அதுக்காக அது விடா முயற்சியோட தண்ணிய தள்ளிவிட்டுது.. இதுல ஜெயிப்போமா தோற்போமான்னு எல்லாம் அது யோசிக்கல.. தன் செயல்ல மட்டும் குறியா இருந்தது. அதோட விடாமுயற்சிக்குப் பலன் அந்த கழுகுகள் மூலமா  கிடைச்சது பாத்தியா?” என்று கூறினார். 

“ஆமாம் சார். எண்ணமும் செயலும் நன்மையா இருந்து விடாமுயற்சியோட போராடினா அதற்கு தக்க பலன் கிடைச்சே தீரும்ன்னு நல்லா புரிஞ்சிகிட்டேன் சார்.” என்றான் மாணவன். 

அவனுடைய தோளில் ஆதரவாகத் தட்டிக் கொடுத்து தன்னுடன் அழைத்துச் சென்றார் ஆசிரியர். 

What’s your Reaction?
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments