முகிலனின் தந்தை அன்று கடையில் இருந்து சீக்கிரம் வந்துவிட்டார். அவர்கள் ஊரில் இருக்கும் ஜவுளிக்கடையில் கணக்கு எழுதும் வேலை பார்க்கிறார் அவர். முகிலன், அப்பா, அம்மா மூன்று பேர்தான் அவர்களுடைய வீட்டில். ஏழ்மையான வாழ்க்கை. இருந்தாலும் ஒரே மகனான முகிலனை நன்றாகப் படிக்க வைக்க விரும்பினார்கள் அவனுடைய பெற்றோர்.
அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு கோயிலுக்குக் கிளம்பினான் முகிலன். அம்மா, அப்பா, மூன்று பேருமாகக் கோயிலை வலம் வங்தபோது அங்கிருந்த சிற்பங்களைப் பற்றித் தனக்குத் தெரிந்தவற்றை எடுத்துச் சொன்னார் முகிலனின் அப்பா.
“ இது என்ன விலங்குப்பா? பாக்கவே வித்தியாசமா இருக்கு? உடம்பைப் பாத்தா சிங்கம் மாதிரி இருக்கு. முகத்தைப் பாத்தா யானை மாதிரி தந்தம்லாம் இருக்கு? ” என்று ஆர்வத்துடன் கேட்டான் முகிலன்.
“ இதுக்கு யாளின்னு பேரு. அந்தக் காலத்துல இருந்திருக்கு. இப்போ இல்லை. அழிஞ்சு போச்சாம். கோயில் சிற்பங்களில் மட்டும் பாக்கலாம். சிங்கம் ரொம்ப வலிமையான விலங்கு. அதே சிங்கம், யானை மாதிரி, கொம்புகளுடன் இருக்கற விலங்குதான் யாளி. இதிலயே மகரயாளி, சிம்மயாளி, ஞமலி யாளி ( நாய் யாளி), கஜ யாளி ( யானை யாளி), அஸ்வ யாளி( குதிரை யாளி), அப்புறம் மூஷிக யாளி ( எலி யாளி) போன்ற விதவிதமான யாளிகள் இருந்ததாச் சொல்றாங்க.
இந்த யாளிகளைப் பத்தி எல்லாத் தகவல்களும் நமக்குக் கோயில் சிற்பங்களில் இருந்துதான் தெரிய வருது.
சில பேர் இந்த விலங்கு சிற்பிகளின் கற்பனையில் உருவானதுன்னு சொல்லறாங்க. சிலர் உண்மையிலேயே நம்ம நாட்டுல முன்னால இருந்துச்சுன்னு சொல்றாங்க” என்றார் முகிலனின் தந்தை.
“ இருந்துச்சுன்னு சொல்லறீங்க. இப்போ ஏன் இல்லை பின்னே? ” என்று கேட்டான்.
“ அழிஞ்சு போச்சுன்னு சொல்லறாங்க. டைனோசர் ஒருகாலத்துல வகை வகையா இருந்துருக்கு. இப்ப ஒண்ணு கூட இல்லையே? நீ டைனோசர் பத்தின சினிமா பாத்தே இல்லையா? புக்கும் படிச்சிருக்கே? அது மாதிரியே யாளியும் இருந்திருக்கலாம்.
இன்னும் கொஞ்ச நாட்கள் கழிச்சுக் கூட அதுக்கான நிறைய ஆதாரங்கள் கெடைக்கலாம். ஆனால் நம்ம பழைய கால இலக்கியங்களில் சான்றுகள் இருக்குன்னு சொல்லறாங்க. நீ கூடப் பெரியவனாப் போனதும் இதைப்பத்தி ஆர்வம் இருந்தா ஆராய்ச்சி பண்ணலாம் “ என்றார் முகிலனின் அப்பா.
“ ஆமாம்பா, இந்த ஐடியா நல்லாருக்கு. நான் பெரியவனானதும் இதைப் பத்திக் கண்டிப்பா ஆராய்ச்சி பண்ணுவேன்” என்று நம்பிக்கையுடன் பதில் கூறினான் முகிலன்.
அன்றைய தினம் நன்றாகக் கழிந்த திருப்தியில் இரவு தூங்கப் போனான் முகிலன். மனமெங்கிலும் யாளி பற்றிய சிந்தனைகள் குறுக்கும் தெடுக்குமாக அலைபாய்ந்து
கொண்டிருந்தன.
நள்ளிரவு நேரம். திடீரென்று முகிலனின் காதுக்கு அருகில் ஏதோ குரல் கேட்க, சடக்கென்று தூக்கம் கலைந்து எழுந்தான் முகிலன். அருகில் அவனுடைய அம்மாவும், அப்பாவும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
“ முகிலா, முகிலா, வாசலுக்கு வரயா? ” என்று சன்னமான குரல் கேட்டது. அம்மா, அப்பா எழுந்துவிடக் கூடாது என்று மெதுவாக நடந்து வாசலருகில் வந்தான்.கதவை யாரோ இலேசாகத் தட்டிக் கொண்டிருந்தார்கள். கதவைத் திறந்தான். சின்னதாக ஒரு யாளி நின்று கொண்டிருந்தது.
யானையின் முகத்தையும், சிங்கத்தின் உடலையும் கொண்டிருந்தது. ஆனால் கூடவே இறக்கைகளும் இருந்தன.
“ அட, உன்னால பறக்க முடியுமா? “ என்று ஆச்சரியத்துடன் கேட்டான் முகிலன்.
“ ஆமாம், பறக்கமுடியுமே? “ என்று சொன்ன யாளி, சுற்றுமுற்றும் பார்த்தது.
“ முகிலா, நான் உன்னை மட்டும் தான் பாக்கவந்தேன். நீ எதிரில் இருக்கற அந்த மரத்தடிக்கு வா. அங்கே உக்காந்து உன்கூடப் பேசிட்டு நான் கிளம்பிப் போகணும்” என்றது அந்தக் குட்டி யாளி.
முகிலன் அவர்களுடைய வீட்டுக் கதவைச் சாத்திவிட்டு, எதிரிலிருந்த மரத்தடிக்குச் சென்றான். அங்கே உட்கார்ந்து முகிலனும், யாளியும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். முகிலனின் சந்தேகங்களைப் பொறுமையாகத் தீர்த்து வைத்தது அந்தக் குட்டி யாளி.
“ நாங்களும் முன்னாடி இங்கே இந்த உலகத்தில் தான் வசித்தோம். இங்கே இருக்கற ஜனங்க, காடுகளை அழிச்சாங்க. மழை கொறைஞ்சு வெப்பம் அதிகமாக ஆரம்பிச்சது. மரங்களையெல்லாம் வெட்டி எடுத்துட்டுப் போய் வீட்டுக்குத் தேவையான சாமான்களைச் செய்ய ஆரம்பிச்சாங்க. குளம், ஏரியெல்லாமே காணாமப் போச்சு. எல்லா இடங்களையும் ஆக்கிரமிச்சு வீடு கட்டிக்கிட்டாங்க. விலங்குகளும், பறவைகளும் வசிக்க இடம் குறைஞ்சு போச்சு. குடிக்கற தண்ணீர் கெடைக்கலை. பூமியில் இருந்து நிறைய விலங்குகளும், பறவைகளும் இங்கிருந்து கெளம்பி வேற உலகத்துக்குப் போகலாம்னு முடிவு பண்ணினோம். எங்களோட வனதேவதை கிட்ட வரம் கேட்டோம்” என்று சொல்லி நிறுத்தியது யாளி. ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்த முகிலன்,
“ அப்புறம் என்ன ஆச்சு? ” என்று கேட்டான் பொறுமையில்லாமல்.
“ அப்புறம் என்ன அவங்க வழி காட்டினாங்க. யாருக்கெல்லாம் பூமியில் இருந்து வெளியே போகத் தோணுச்சோ, அவங்க எல்லோரும் தேவதை காமிச்ச புது உலகத்துக்குப் போனோம். எங்க கூட டைனோசர்கள் கூட்டமும் வந்துருச்சு. சிங்கம், புலியெல்லாம் இங்கயே பூமியிலயே இருக்கோம்னு இங்கயே தங்கிட்டாங்க. ஒரு காலத்துல பூமியில் இருந்த வினோதமான விலங்குகளும், அபூர்வமான பறவைகளும் இப்போ அந்த உலகத்துல இருக்காங்க. ஒவ்வொரு வருஷமும் யாராவது புதுசா இங்கிருந்து எங்க உலகத்துக்கு வராங்க தெரியுமா? சமீபத்துல சிட்டுக்குருவிகள் கூட வந்துருக்கு. புலிகள், சிங்கங்கள் கூட யோசிச்சுட்டு இருக்காங்க. அவங்களோட எண்ணிக்கை பூமியில் குறைஞ்சுட்டே வருதுன்னு உனக்கும் தெரிஞ்சிருக்கும். இல்லையா? ” என்று கேட்டது யாளி.
“ ஆமாம் “என்று தலையசைத்தான் முகிலன்.
“ இப்போ இதையெல்லாம் விடக் கொடுமையான விஷயம், மனுஷங்க எல்லாரும் நதிகள், சமுத்திரங்களில் பிளாஸ்டிக் சாமான்களை எரியறாங்க. அது மட்டுமில்லாமல் குப்பைகளையும் கொண்டு வந்து கொட்டறாங்க. தண்ணியெல்லாம் சுத்தமாவே இல்லை. நீர்வாழ் உயிரினங்கள் எல்லாமே ரொம்பக் கவலைப்படறாங்க. அவங்களும் சீக்கிரம் எங்க உலகத்துக்கு வந்துருவாங்க. பூமியில் எதிர் காலத்தில் விலங்குகள், பறவைகள் எதுவும் இல்லாமல் மனுஷங்க மட்டும் இருக்கற இடமா மாறிடும். அப்படி ஆனா பூமியோட சுற்றுச்சூழல் சமநிலை ( ecological balance) பாதிக்கப்படும். உலகமே அழிஞ்சு போயிடும்” என்று யாளி சொன்னதைக் கேட்டு முகிலனுக்குத் தூக்கிவாரிப் போட்டது.
“ நிஜமாவா சொல்லறே நீ? ” என்று பயந்துபோய்க் கேட்டான் முகிலன்.
“ ஆமாம். இயற்கையோட சமன்பாடு அழிஞ்சதுனா இயற்கை எப்படி பூமிவாழ் மக்களுக்கு உதவி செய்யும்? ” என்று கேட்டது யாளி.
“ ஆமாம். எனக்கு ஒரு சந்தேகம். நீ எப்படி பூமிக்கு வந்தே? நீங்க எல்லாரும் பூமிக்குத் திரும்பி வர வாய்ப்பு இருக்கா? ” என்று கேட்டான் முகிலன்.
“ நல்ல கேள்வி. நாங்க வேற உலகத்துல இருந்தாலும் நீங்க பேசறது, செய்யறது எல்லாத்தையும் பாக்கற சக்தியை எங்களுக்கு வன தேவதை கொடுத்திருக்காங்க. நீ நேத்து எங்களோட சிற்பங்களைப் பாத்துக் கேட்ட கேள்விகளை நாங்களும் கேட்டோம். எங்களோட தலைவர் உன்னோட சந்தேகங்களைத் தீர்த்து வைக்கறதுக்காக என்னை அனுப்பி வச்சாரு. நான் பொழுது விடியறதுக்குள்ள கெளம்பணும். உன்னைத் தவிர வேற யார் கண்ணிலயும் படக்கூடாது” என்று சொல்லிவிட்டுத் தன்னைச் சுற்றிப் பார்த்தது யாளி.
“ முகிலா, முகிலா, நீ எங்கே போனே? “ என்று முகிலனின் அம்மா அவனைக் கூப்பிடும் குரல் கேட்டு, யாளி அங்கிருந்து கிளம்பத் தயாரானது.
“ அப்புறம் முகிலா, இந்த உலகம் பழையபடி நாங்க வசிக்க ஏத்த இடமா மாறினா நாங்க எல்லாருமே இங்கே திரும்பி வந்துருவோம்” என்று சொல்லிவிட்டு பறந்துபோனது யாளி. முகிலன் வருத்தத்துடன் வீட்டுக்குள் சென்றான். படுத்துத் தூங்கினான்.
“ அம்மா, நான் பெரியவனாகி நம்ம சுற்றுச்சூழலையும், இயற்கையையும் மாசுபடுத்தாமல் எப்படிப் பாதுகாக்கணும்னு எல்லாருக்கும் சொல்லித் தரப்போறேன்” என்று முகிலன் அடுத்த நாள் காலையில் சொன்னபோது, அவனுடைய அம்மா அவனைப் பெருமையுடன் பார்த்தாள்.
வங்கி வேலை, கணித ஆசிரியை அவதாரங்களுக்குப் பிறகு இப்போது எழுத்தாளர். அதுவும் சிறுவர் கதைகள் எழுத மனதிற்குப் பிடிக்கிறது. மாயாஜாலங்கள், மந்திரவாதி கதைகள் எழுத ஆசை. பூஞ்சிட்டு இதழ் மூலமாக உங்களுடன் உரையாடத் தொடர்ந்து வரப் போகிறேன். மகிழ்ச்சியுடன் நன்றி.