சிங்கமாய் மாறிய சின்னி

ரத்னாபுரி என்னும் ஊரில் சின்னன் என்ற குடியானவன் வாழ்ந்து வந்தான். அவன் மனைவி சின்னி மிகவும் பேராசை பிடித்தவள். ரத்னாபுரி ஊரின் எல்லையில் இருந்த காட்டில் விறகு வெட்டி, அதை விற்று பிழைப்பு நடத்தி வந்தான் சின்னன்.

“நிறைய மரம் வெட்டி வா. நிறைய காசு சேர்க்க வேண்டும்” என்று சின்னனை எப்போதும் திட்டிக் கொண்டே இருப்பாள் சின்னி.

ஒரு நாள் வழக்கம் போல காட்டிற்கு விறகு வெட்டச் சென்றான் சின்னன். முன் தினம் பெய்த மழையினால் நிறைய சிறிய செடிகள் மண்ணில் சாய்ந்திருந்தன. அவற்றைப் பார்த்து பரிதாபப்பட்ட சின்னன், “அடடா, இத்தனை செடிகள் சாய்ந்து விட்டதே! இவற்றை மீண்டும் மண்ணில் ஊன்றினால் நாளை பெரிய மரமாகுமே!” என நினைத்து, தன் விறகு வெட்டும் வேலையை விட்டுவிட்டு செடிகளை மீண்டும் நடத்துவங்கினான்.

இதற்குள் மாலை ஆகிவிட்டிருந்ததை அப்போது தான் கவனித்தான் சின்னன். “ஐயோ! இன்று விறகு வெட்டவில்லையே! விறகை விற்று காசு கொண்டு போகவில்லை என்றால் சின்னி கோபித்துக் கொள்வாளே!” என பயந்து போனான் சின்னன்.

வீட்டிற்குப் போக பயந்து ஒரு பெரிய மரத்தின் கீழே அமர்ந்து விட்டான். வீசிய காற்றில் அப்படியே தூங்கியும் போனான். அவன் அமர்ந்த மரம் மந்திர தன்மை வாய்ந்தது. சின்னன் காலையில் இருந்து காட்டில் செடிகளைப் பாதுகாத்து நட்டு வைத்தது மரத்திற்குத் தெரிந்திருந்தது.

சின்னனின் கனவில் மரம் தோன்றியது. “சின்னா! பயப்படாதே! உனக்கு விற்க விறகுகளை நான் தருகிறேன்” என்று சொன்னது. இதைக் கேட்டதும் சின்னன் உறக்கத்தில் இருந்து விழித்தான். அவன் கனவில் கண்டது போலவே மரத்தின் அடியில் ஒரு மூட்டை நல்ல விறகுகள் இருந்தன.

சின்னன் மரத்திற்கு நன்றி சொல்லிவிட்டு, விறகுகளை விற்று காசாக்கிக் கொண்டு மகிழ்ச்சியுடன் வீட்டிற்குச் சென்றான்.

“என்ன இன்று வழக்கமாக கொடுக்கும் காசுக்கு இரண்டு மடங்கு காசு உள்ளது? எப்படி?” என்று சின்னி வினவினாள்.

சின்னன் மரத்தைப் பற்றி சொன்னால், தான் காலையில் இருந்து வேலை செய்யாமல் இருந்தது தெரிந்து போகும் என்று பயந்து, “அதுவா சின்னி! இன்று வெட்ட நல்ல மரம் கிடைத்தது. அதனால் நல்ல விறகுகள் கிடைத்தன. நிறைய பணமும் கிடைத்தது!” என்று கூறினான்.

சின்னி மகிழ்ச்சி அடைவாள் என்று சின்னன் எண்ணினான். ஆனால், “அப்போ தினமும் அதே போல நிறைய நல்ல மரங்களை வெட்டி, நிறைய காசு கொண்டு வா” என்று சின்னி கூறிவிட்டாள்.

சின்னன் கவலையுடன் படுத்து உறங்கினான். அடுத்த தினம் விறகு வெட்டச் சென்ற போது, வழியில் ஒரு பறவையின் கூடு கீழே விழுந்து கிடந்தது. தாய் பறவை இல்லாமல் குஞ்சுகள் அழுது கொண்டிருந்தன. அதைக் கண்டு பரிதாபம் கொண்ட சின்னன்,”அடடா, மரத்தில் இருந்து கூடு கீழே விழுந்துவிட்டதே!” என்று பறவையின் கூட்டை நல்ல உயரமான மரத்தில் ஏறி, பத்திரமாக கிளைகளின் இடையே வைத்தான். தாய் பறவை கூடு திரும்பும் வரையிலும் அந்த குஞ்சுகளைக் காவல் காத்து தாயிடம் பத்திரமாக ஒப்படைத்தான்.

அன்றும் சின்னனால் விறகு வெட்ட முடியவில்லை. வெறும் கையுடன் அதே மரத்தின் கீழே சென்று அமர்ந்தான். மரம் இன்றும் அவனுக்கு இரண்டு மூட்டை விறகுகள் கொடுத்தது. அதை விற்று பணமாக்கிக் கொண்டு வீட்டிற்குச் சென்றான்.

“இனி தினமும் இதே போல நிறைய பணம் கொண்டு வா” என்று மகிழ்ச்சியாகக் கூறினாள் சின்னி.

அடுத்த தினம் சின்னன், நேராக மரத்திடம் சென்றான். “என் மனைவி சின்னி நிறைய பணம் கேட்கிறாள். என்ன செய்வது?” என்று மரத்திடமே கேட்டான். மரம் அவனுக்கு பதில் சொல்லியது.

“சின்னா, நீ காட்டில் செடிகளுக்கும் பறவைகளுக்கும் செய்த உதவிகளுக்காகத் தான் உனக்கு விறகுகள் பரிசு அளித்தேன். வேண்டுமானால் உன் மனைவி சின்னியையும் வந்து காட்டில் உதவி செய்ய சொல். அவளுக்கும் பரிசு தருகிறேன்” என்றது.

சின்னன் மகிழ்ச்சியாக மரம் சொன்ன விஷயத்தை சின்னியிடம் சென்று கூறினான். சின்னியும் அடுத்த தினம் காட்டிற்கு வந்தாள். சின்னன் காலையில் இருந்தே காட்டில் மரங்களுக்கும் பறவை மற்றும் விலங்குகளுக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்தான்.

சின்னி எந்த வேலையும் செய்யாமல், சின்னன் வேலை செய்வதை பார்த்துக் கொண்டு, “அதை செய், இங்கே இதை செய்” என்று அவனை ஏவிக் கொண்டிருந்தாள். மாலையானதும், சின்னனுக்கு மரம் வழக்கம் போல விறகுகள் கொடுத்தது. இதைப் பார்க்கவும் சின்னி கோபம் கொண்டாள்.

“ஏ! மரமே! விறகுகள் கொடுத்து ஏமாற்றுகிறாயா? செய்த வேலைக்கு தங்க காசுகள் கொடு” என்று கத்தினாள். மரம் சின்னியின் பேராசைக்கு பாடம் புகட்ட நினைத்தது.

“சின்னி, இன்று நீ எந்த வேலையும் செய்யவில்லையே! நாளை நீயும் சின்னனுடன் சேர்ந்து வேலை செய்தால், உனக்கு இரண்டு மடங்காக தங்க காசுகள் தருகிறேன்” என்று சொன்னது. சின்னி சந்தோஷப்பட்டாள்.

அடுத்த தினம், சின்னன் காட்டில் வழக்கமான வேலைகள் செய்த போது, சின்னியும் அவனுடன் சேர்ந்து வேலை செய்தாள். நிறைய காசு வேண்டும் என்ற எண்ணத்துடன் ஓய்வு எடுக்காமல் வேலை செய்தாள்.

மாலையில் அவள் கேட்டது போலவே மரம் இரண்டு மடங்கு தங்க காசுகள் அளித்தது. அதே போல, நிறைய நாட்கள் உழைத்து, நிறைய காசுகள் சேர்த்து வைத்துக் கொண்டாள் சின்னி.

இப்படியே பல நாட்கள் சென்றன. சின்னிக்கு நிறைய காசுகள் சேர்ந்துவிட்ட போதிலும், ஆசை குறையவில்லை. “வா, வேலைக்குப் போகலாம்” என்று சின்னனை தினமும் இழுத்துக் கொண்டு காட்டிற்குச் சென்றுவிடுவாள்.

“நம்மிடம் தான் போதுமான காசு வந்துவிட்டதே சின்னி. நாம இவற்றைக் கொண்டு விவசாயம் செய்து நிம்மதியாக வாழலாமே” என்று சின்னன் கூறினால் கேட்கமாட்டாள். அவர்கள் வாழ்ந்த ஊரில் சில மாதங்களாக மழை பொழியாமல் போக, மக்கள் பட்டினியால் துன்பப்பட்டனர்.

ஒரு சிலர், “சின்னியிடம் சென்று உதவி கேட்கலாம். அவள் நிறைய காசு சேமித்து வைத்துள்ளாள்” என்று இவளிடம் வந்தனர். சின்னன் சிலருக்குத் தன் காசுகளை எடுத்துக் கொடுத்து உதவி செய்தான்.

“யாருக்கும் காசு கொடுக்காதே” என்று சின்னனைத் திட்டிய சின்னி, அவனை வீட்டில் இருந்து துரத்தி விட்டாள். உதவி கேட்டு வந்த மக்களை எல்லாம் சின்னி பயங்கரமாக திட்டி அனுப்பிவிட்டாள். மக்கள் அழுது கொண்டே சின்னியை திட்டு விட்டு சென்றுவிட்டனர்.

அவர்கள் சென்றதும் சின்னிக்கு பயம் வந்துவிட்டது. “இந்த மக்கள் எங்கே தன் தங்க காசுகளை கொள்ளை அடித்துவிடுவார்களோ! காவல் காக்க சின்னனும் இல்லையே” என்று அஞ்சிய சின்னி, அடுத்த நாள் மரத்திடம் சென்றாள்.

“மரமே! என் காசுகளை காவல் காக்க வேண்டும். என்னை பலசாலியாக, எல்லாரும் பார்த்து பயப்படும்படிக்கு மாற்றிவிடு.” என்று கேட்டுக் கொண்டாள்.

சின்னியின் பேராசைக்கும் துஷ்ட குணத்திற்கும் நல்லதொரு பாடம் புகட்ட நினைத்த மரம், “அப்படியே ஆகட்டும் சின்னி, உன்னைப் பார்த்தல் மக்கள் எல்லாரும் பயந்து அலறிக் கொண்டு ஓடும் படி உன்னை மாற்றிவிடுகிறேன்” என்று சொல்லியது. மகிழ்ச்சியாக வீட்டிற்கு வந்து உறங்கிய சின்னி, மறுதினம் காலையில் சிங்கமாக மாறியிருந்தாள்.

அவள் வீட்டைக் கடந்து சென்ற மக்கள் அனைவரும் சின்னியைப் பார்த்து அலறிக் கொண்டு ஓடினர். சின்னிக்கு பசித்தது. நிறைய காசும் இருந்தது. ஆனால் முன் போல சுவையான உணவுகளைச் சாப்பிட முடியவில்லை.

வீட்டில் பானை நிறைய தங்க காசுகள் இருந்த போதும், அதைக் கொண்டு ஒரு பொருளும் வாங்க முடியவில்லை. “இப்படி ஆகிவிட்டதே!” என்று அழுது கொண்டே மீண்டும் மரத்தைத் தேடிச் சென்றாள் சின்னி.

ஆனால் அவள் கண்ணிற்கு அந்த மந்திர மரம் தென்படவில்லை. தன் பிழையை எண்ணி வருத்தம் கொண்ட சின்னி, காட்டிற்குள் மந்திர மரத்தைத் தேடிக் கொண்டே சுற்றி வந்தாள்.

சில நாட்கள் கழித்து வீட்டிற்கு வந்த சின்னன் சின்னியைத் தேடினான். ஊர் மக்கள், “சின்னி சிங்கமாக மாறி காட்டிற்குள் வாழ்கிறாள்” என்று கூறினர்.

சின்னன் தினமும் காட்டிற்குச் சென்று சின்னி சிங்கத்தைத் தேடிக் கொண்டே தன்னால் முடிந்த உதவிகளை மரங்களுக்கும் செடிகளுக்கும் செய்வான். தன் வீட்டில் இருந்த தங்கக்காசுகளை ஏழை மக்களுக்கு தானமாகக் கொடுத்துவிட்டான். சின்னனின் நல்ல மனதைப் பாராட்டிய மந்திரமரம், சின்னியைப் பழைய படி மாற்றி, சின்னனிடம் கொடுத்துவிட்டது.

“இனிமேல் பேராசை படமாட்டேன். என் செல்வங்களைப் பிறருக்குக் கொடுத்து உதவி செய்வேன்” என்று சின்னி கூறினாள். மந்திர மரமும் அவளையும் சின்னனையும் வாழ்த்தி பொற்காசுகள் கொடுத்து அனுப்பிவைத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *