உலகத்தின் ஒரு கோடியில் இருந்தது அந்தப் பனிப்பிரதேசம். எப்போதும் பனி பொழிந்து கொண்டிருப்பதால் பயங்கரக் குளிர் இருக்கும் இடம்.
அங்கே ஒரு வீட்டில் வேட்டைக்காரன் ஜான் மற்றும் அவனுடைய மகன் மேத்யூவும் வசித்து வந்தார்கள். ஜான் தினமும் வேட்டைக்குப் போய் விலங்குகளை வேட்டையாடிக் கொண்டு வருவான். மேத்யூ அந்த சமயத்தில் வீட்டில் தனியாக இருப்பான். அவர்களுடைய வீட்டில் ஒரு மூலையில் தீ எரிந்துகொட்டே இருக்கும். குளிரைத் தாங்குவதற்கு அந்தத் தீயின் வெம்மை மிகவும் அவசியமாக இருந்தது.
ஒருநாள் காலையில் ஜான் வேட்டைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தான்.
“ மேத்யூ, நான் திரும்பி வரும் வரைக்கும் அந்தத் தீயை மாத்திரம் அணையவிடாம ஜாக்கிரதையாப் பாத்துக்கோ. வெளியே போய்ச் சின்னச் சின்ன குச்சி பொறுக்கிக் கொண்டு வந்து நெருப்பில போட்டுட்டே இரு. தீ அணைஞ்சு போச்சுன்னாத் திரும்பப் பத்த வைக்கறது ரொம்பவே கஷ்டம். தீ இல்லைன்னா ராத்திரி ரொம்பக் குளிராயிடும். ஜாக்கிரதை” என்று சொல்லிவிட்டுக் கிளம்பிப் போனான். மேத்யூவும் அதிக கவனத்துடன் கண்ணும் கருத்துமாக அந்தத் தீ அணைந்து போகாமல் பாதுகாத்தான்.
அடுத்த நாள் காலையில் ஜானுக்கு உடம்பு சரியில்லாமல் போனது. வேட்டைக்குப் போக முடியவில்லை. குளிர் காய்ச்சல் வந்திருந்தது. மேத்யூவுக்கு வேலை அதிகமாகிப் போனது. அப்பாவையும் கவனித்துக் கொண்டு, ஃபயர் பிளேஸில் இருந்த தீயையும் அணையாமல் பார்த்துக் கொண்டு ஓடியாடி வேலை செய்தான். இரவிலும் அப்பாவுக்குக் குளிரப் போகிறது என்று தீயை அணையவிடாமல் பார்த்துக் கொள்வதிலேயே அவனுடைய பொழுது கழிந்தது.

அடுத்த நாள் காலையிலும் ஜானுக்கு உடம்பு சரியாகவில்லை. மேத்யூவும் முதல் நாள் அதிக வேலை செய்ததில் களைத்துப் போயிருந்தான். ஜான், முதல் நாள் வேட்டைக்குப் போகாததால் சமைக்கவோ, சாப்பிடவோ வீட்டில் ஒன்றுமே இல்லை. அவனால் தீயைக் கூட சரியாகப் பார்த்துக் கொள்ள முடியவில்லை. பசியும், களைப்புமாகச் சேர்ந்து அவனைத் தாக்கியதில் சுருண்டு மயங்கி விழுந்து விட்டான்.
அவர்கள் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு பனிக்கரடி வசித்துவந்தது. ஜான் வேட்டைக்குப்
போகும்போதெல்லாம் அவனிடமிருந்து எப்படியோ தப்பித்து வந்தது. அதனால் அந்தப் பனிக்கரடி, ஜான் மீது பயங்கரக் கோபத்தில் இருந்தது. அவனுக்கு எதிரே நின்று அவனை ஜெயிக்க முடியாது என்று நினைத்த பனிக்கரடி, அவன் வீட்டில் எரியும் நெருப்பை எப்படியாவது அணைத்துவிட்டால் ஜானும் மேத்யூவும் குளிரில் விறைத்து இறந்துபோவார்கள் என்று நினைத்து அதற்கான சந்தர்ப்பத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தது.
ஜானுக்கு உடம்பு சரியில்லாமல் போனதும் அதற்கு பயங்கர சந்தோஷம். முதல் நாள் மேத்யூ, நெருப்பை அணையவிடாமல் பார்த்துக் கொண்டதால் பனிக்கரடியால் எதுவும் செய்ய முடியவில்லை. இரண்டாம் நாள், மேத்யூவும் களைத்துப் போனதும் பனிக்கரடி வீட்டிற்குள் புகுந்து நெருப்பை அணைப்பதற்காக, அதில் கிடந்த விறகை இழுத்து வெளியே போட்டுவிட்டுப் போனது.
மேத்யூவுக்குப் பிரியமான ராபின் பறவை ஒன்று இருந்தது. பகல் நேரத்தில் மேத்யூ தனியாக இருக்கும் போது அவனோடு வந்து அவனுடைய வீட்டிலேயே அவனைச் சுற்றிச் சுற்றி வரும். மேத்யூ, அதற்குச் சாப்பிட வீட்டில் இருக்கும் ஏதாவது தானியத்தைத் தருவான். தண்ணீரும் வைப்பான். தன்னுடைய நண்பனாகக் கருதி அதனுடன் நட்புடன் பேசிக்கொண்டே இருப்பான்.
அந்த ராபின் பறவை மேத்யூவைப் பார்த்துப் பரிதாபப்பட்டது. அவனுக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்று தீர்மானித்தது. அணைந்து போன நெருப்பில் இலேசாகப் புகை வந்துகொண்டிருந்தது. உடனே வெளியே போய்த் தேடித் திரிந்து தன்னால் முடிந்த அளவு குச்சிகளைச் சேகரித்து வந்த பறவை, நெருப்பின் அருகே உட்கார்ந்து கஷ்டப்பட்டு ஊதி ஊதி அதை எரிய வைத்தது. தீக்கு மிகவும் அருகில் இருந்ததால் அதனுடைய உடம்பு சிவந்து போய் எரிச்சலாக இருந்தது அதற்கு. அப்படியும் விடாமல் முயற்சி செய்தது ராபின் பறவை.
அடுத்த நாள் காலையில் மேத்யூ தூங்கி எழுந்ததும் முதலில் நெருப்பைப் பார்த்தான். இலேசாக எரிந்து கொண்டிருந்த நெருப்பையும், அருகில் சோர்ந்து கிடந்த ராபின் பறவையையும் பார்த்துப் புரிந்து கொண்டான். கஷ்டப்பட்டுத் தீயை மீண்டும் எரிய வைத்தான். ஜானுக்கு அன்று உடம்பு சரியாகிவிட்டது. அவனும் வேட்டைக்குக் கிளம்பிப் போனான். ராபின் பறவையும் மகிழ்ச்சியாக வெளியே பறந்து சென்றது.
பனிக்கரடி தன்னுடைய முயற்சி தோல்வி அடைந்ததால் வருத்தமடைந்து அந்த இடத்தை விட்டு ஓடியது. பகல் நேரத்தில் ராபின் பறவை, மேத்யூவைப் பார்க்க வழக்கம் போல வந்தது.
அன்று எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியிருந்தார்கள்.
“ ராபின் பறவையே! உன்னோட நெஞ்சுப் பகுதி மட்டும் ஏன் இப்படி செவப்பா மாறியிருக்கு? ” என்று கேட்டான் மேத்யூ.
“ தெரியலையே” என்று சொல்லிச் சிரித்தது அந்தப் பறவை.
அன்றிலிருந்து ராபின் பறவையின் உடல் பகுதியில் கழுத்துக்குக் கீழே இருக்கும் பகுதி நிரந்தரமாகச் சிவப்பு நிறமாக மாறி விட்டது.