“திருமதி லிண்டேவிடம் மன்னிப்பு கேட்காத வரை, உன் அறையிலேயே தான் நீ இருக்க வேண்டும்” என்று ஆனிக்குத் தான் கொடுத்து இருக்கும் தண்டனை பற்றி, மரிலா மாத்யூவிடம் எதுவும் கூறவில்லை. மறுநாள் காலை உணவுக்கு அவள் கீழே வராததால், ஆனி மோசமாக நடந்து கொண்ட அந்தச் சம்பவம் குறித்து, மரிலா அவரிடம் விவரித்தார்.
“எப்ப பார்த்தாலும் வீண் வம்பு பேசும் திருமதி லிண்டேவுக்கு நல்லா வேணும் தான்” என்றார் மாத்யூ.
“மாத்யூ! நீங்க சொன்னதைக் கேட்டால் ஆச்சரியமா இருக்கு. ஆனி ரொம்ப மோசமா நடந்து கொண்டாள்னு சொன்ன பிறகும், நீங்க அவ பக்கம் பேசறீங்க. அடுத்ததா அவளைத் தண்டிக்கவே கூடாதுன்னு, நீங்க சொன்னாலும் சொல்வீங்க போலருக்கு!”
“அப்படி இல்லை. அவளுக்குச் சின்னத் தண்டனை கொடுக்கலாம். ரொம்ப கடுமையான தண்டனை வேணாம் மரிலா. அவளுக்கு யாருமே எது சரின்னு இது வரைக்கும் சொல்லிக் கொடுக்கலே. அவளுக்குச் சாப்பிட ஏதாவது கொடுப்பே தானே?” என்றார் சங்கடத்துடன் மாத்யூ.
“நல்லவிதமா நடந்துக்கலேன்னு இதுவரைக்கும் நான் யாரையாவது பட்டினி போட்டு இருக்கேனா? எப்பவாவது அப்படி நீங்க கேள்விப்பட்டு இருக்கீங்களா?” கோபத்துடன் கேட்டார் மரிலா. “அவளுக்கு எல்லா வேளையும் சாப்பாடு நானே எடுத்துட்டுப் போய்க் கொடுப்பேன். அவள் லிண்டே கிட்ட மன்னிப்பு கேட்கிறேன்னு சொல்ற வரைக்கும், மாடியிலேயே தான் இருக்கணும். அது தான் என் இறுதி முடிவு” என்றார் மரிலா.
ஒவ்வொரு வேளையும் மரிலா தட்டு நிறைய உணவை மாடிக்கு எடுத்துப் போவதும், உணவு அப்படியே திரும்பிக் கீழே வருவதுமாய் இருந்தது. ‘ஆனி எதையாவது சாப்பிடுகிறாளா?’ என்று நினைத்துக் கவலைப்பட்டார் மாத்யூ.
அன்று மாலை மரிலா மேய்ச்சல் நிலத்தில் இருந்து பசுக்களைக் கொண்டு வர வெளியே சென்றார். அது தான் சமயம் என்று மாத்யூ திருடன் போல் வீட்டுக்குள் நுழைந்தார். சத்தம் ஏற்படாத வண்ணம், குதிகாலால் நடந்து மாடிக்குச் சென்றார். ஆனி இருந்த அறைக் கதவை விரல்களால் தட்டி விட்டுக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார்.
ஆனி சோகமான முகத்துடன் சன்னல் பக்கத்தில் இருந்த மஞ்சள் நாற்காலியில் தோட்டத்தைப் பார்த்தபடி அமர்ந்து இருந்தாள்.
“ஆனி! எப்படி இருக்கே?” சத்தம் கேட்காதவாறு மெல்லிய குரலில் கிசுகிசுத்தார் மாத்யூ. ஆனி பலவீனமாகப் புன்னகை செய்தாள்.
“நல்லா இருக்கேன். ரொம்ப நேரம் கற்பனையில் மூழ்கிடறேன். நேரத்தைப் போக்க அது உதவுது. தனிமை இருக்கத் தான் செய்யுது. ஆனா அதுக்கும் நான் பழகிக் கொள்வேன்” என்றாள் ஆனி.
“மரிலா தான் எடுக்கிற முடிவுல, ரொம்ப உறுதியா இருக்கிற பெண்மணி. இந்தப் பிரச்சினையைச் சுமுகமா முடிவுக்குக் கொண்டு வர என்ன செய்யணுமோ, அதை உடனே செய்” என்றார் மாத்யூ.
“நீங்க திருமதி லிண்டே கிட்ட மன்னிப்பு கேளுன்னு, சொல்ல வரீங்களா?”
“ஆமாம். அது தான் நான் சொல்ல வந்தது. அப்போ தான் இந்தப் பிரச்சினை தீரும்.”
“நீங்க சொன்னதுக்காக நான் மன்னிப்பு கேட்பேன். நேற்று இரவு முழுக்க நான் ரொம்ப கோபமா இருந்தேன். நான் நடந்துக்கிட்ட முறைக்காக கொஞ்சங்கூட வருத்தமே படல. ஆனா காலையில என் கோபம் போயிடுச்சி. என்னை நினைச்சி நானே வெட்கப்படறேன். ஆனா திருமதி லிண்டே கிட்ட போயி மன்னிப்பு கேட்கறதை விட, இங்கேயே இருந்துடலாம்னு நினைச்சேன். ஆனா உங்களுக்காக நான் எதையும் செய்வேன். உண்மையிலேயே நான் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால்……….”
“நிச்சயமா நான் அதைத் தான் விரும்புறேன். நீ இல்லாத கீழ் வீடு சத்தமே இல்லாம, வெறிச்சோடிக் கிடக்கு. நல்ல பொண்ணா இந்தப் பிரச்சினைக்குச் சுமுகமா முடிவு கட்டி வெளியே வா.”
“சரி. மரிலா வந்தவுடனே, நான் வருத்தப்படறேன்னு சொல்லிடறேன்.”
“நல்லது ஆனி. ஆனால் நான் சொன்னதா மரிலா கிட்ட சொல்லிடாதே. உன் விஷயத்துல தேவையில்லாம மூக்கை நுழைக்க மாட்டேன்னு ஏற்கெனவே மரிலா கிட்ட நான் வாக்குறுதி கொடுத்து இருக்கேன்.”
“கண்டிப்பா அந்த இரகசியத்தை வெளியிட மாட்டேன்” என்று உறுதியாகச் சொன்னாள் ஆனி.
மரிலாவுக்குத் தன் மேல் சந்தேகம் வராமல் இருக்க, மாடியில் இருந்து இறங்கிய மாத்யூ, குதிரை மேய்ச்சல் நிலம் பக்கம் சென்றார். வீடு திரும்பிய மரிலாவுக்கு, வருத்தம் தோய்ந்த குரலில், தன் பெயர் சொல்லி ஆனி கூப்பிடுவது கேட்டது.
“ம்.சொல்லு.”
“நான் கோபத்துல மோசமா பேசினதுக்காக வருந்துறேன். திருமதி லிண்டே கிட்ட மன்னிப்பு கேட்க விரும்புறேன்.”
“நல்லது; பால் கறந்து முடிச்ச பிறகு, அழைச்சிட்டுப் போறேன்” என்றார் மரிலா.
பால் கறந்து முடித்த பிறகு ஆனியை அழைத்துக் கொண்டு, திருமதி லிண்டே வீடு நோக்கி நடந்தார் மரிலா.
“என்ன யோசனை ஆனி?” போகும் வழியில் மரிலா கேட்டார்.
“திருமதி லிண்டே கிட்ட என்ன சொல்லணும்னு, யோசிக்கிறேன்” என்றாள் ஆனி.
திருமதி லிண்டே வீட்டுக்குச் சென்ற போது அவர் அடுப்பங்கரை சன்னல் பக்கம் அமர்ந்து, தைத்துக் கொண்டு இருந்தார். ஆனி உடனே அவருக்கு முன்னால் முட்டி போட்டு அமர்ந்து, கெஞ்சுவது போல் அவர் கைகளைப் பிடித்துக் கொண்டாள். “திருமதி லிண்டே! நான் ரொம்ப வருத்தப்படறேன்” என்று சொன்ன ஆனியைப் பார்த்த லிண்டேவுக்கு வியப்பு.
“நான் ஒரு பையனா இல்லாவிட்டாலும், அவர்கள் வீட்டில் என்னைத் தங்க அனுமதித்த உங்கள் நண்பர்கள் மரிலா, மாத்யூ இருவருக்கும் பெருத்த அவமானம் தேடித் தந்துவிட்டேன். நான் நன்றியே இல்லாத கெட்ட பெண். நான் கண்டிப்பாகத் தண்டிக்கப்பட வேண்டியவள். என்னைப் பற்றி நீங்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உண்மை தான். என் முடி சிவப்பு; நான் ஒல்லியாக அசிங்கமாகத் தான் இருக்கிறேன். உங்களைப் பற்றி நான் சொன்னதும் உண்மை தான். ஆனால் நான் அதைச் சொல்லி இருக்கக் கூடாது. தயவு செய்து என்னை மன்னியுங்கள். நீங்கள் மன்னிக்க மறுத்தால், ஒரு பாவப்பட்ட அனாதை சிறுமிக்கு, அது வாழ்நாள் துயரமாக இருக்கும். தயவு செய்து என்னை மன்னித்து விட்டேன் என்று சொல்லுங்கள், திருமதி லிண்டே!” ஆனி சொல்லிவிட்டுத் தலை குனிந்து, மன்னிப்பு கேட்பது போல், கைகளைக் குவித்தபடி இருந்தாள்.
முட்டி போட்டபடி தலை குனிந்து ஆனி மன்னிப்பு கேட்டதால், திருமதி லிண்டேவின் வருத்தம் மறைந்தது.

“எழுந்திரு குழந்தாய்!” என்றார் திருமதி லிண்டே.
“நிச்சயமாக நான் உன்னை மன்னித்துவிட்டேன். நானும் உன்னிடம் கொஞ்சம் கடுமையாக நடந்து கொண்டதாகத் தான் நினைக்கிறேன். நான் வெளிப்படையாக பேசக் கூடிய பெண்மணி. எனவே நான் பேசுவதை நீ பொருட்படுத்தக் கூடாது. உன் முடி ரொம்ப சிவப்பாக இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் எனக்குத் தெரிந்த ஒரு பெண்ணுக்குச் சின்ன வயதில் உன் முடி போலவே சிவப்பாக இருந்தது. ஆனால் அவள் வளர்ந்து பெரியவள் ஆனபிறகு முடி கருப்பாகி விட்டது. உன்னுடைய முடியும் அப்படி மாறினால், நான் ஆச்சரியப்பட மாட்டேன்” என்றார் லிண்டே.
“அப்படியா திருமதி லிண்டே? நீங்க எனக்கு நம்பிக்கை கொடுத்து இருக்கிறீர்கள்” என்று சொன்னபடி எழுந்து நின்றாள் ஆனி.
“நான் வளர்ந்த பிறகு என் முடி கறுப்பாக, அழகாக மாறும் என்றால், அதற்காக நான் எதை வேண்டுமானாலும் தாங்கிக் கொள்வேன். நீங்களும் மரிலாவும் பேசிக் கொண்டு இருக்கும் போது, நான் உங்கள் தோட்டத்துக்குச் சென்று ஆப்பிள் மரத்துக்குக் கீழே இருக்கும் பெஞ்சில் உட்கார்ந்து இருக்கலாமா? அங்கே கற்பனை செய்ய நல்ல வாய்ப்பு கிடைக்கும்” என்றாள் ஆனி
“சரி ஓடு. ஓரத்தில் பூத்து இருக்கும் வெள்ளை அல்லிப் பூக்கள் வேண்டும் என்றாலும் பறித்துக் கொள்.”
ஆனி போன பிறகு, லிண்டே எழுந்து விளக்கைப் போட்டார்.
“இந்த நாற்காலியில் உட்காருங்க மரிலா. உண்மையாலுமே இவள் விசித்திரமான குட்டிப் பெண் தான். இவளை நீங்களும், மாத்யூவும் வீட்டுல தங்க வைச்சுக்கிட்டதுல எனக்கு ஆச்சரியமோ, வருத்தமோ இல்லை. இவளுக்குச் சட்டுன்னு கோபம் வருது. படபடன்னு வெடிச்ச உடனே கோபம் மறைஞ்சி போயிடுது. இந்த மாதிரியான குழந்தை எப்பவும் யாரையும் ஏமாத்தாது. மொத்தத்துல இவளை எனக்குப் பிடிச்சி இருக்கு” என்றார் லிண்டே.
மரிலாவும், ஆனியும் நடந்து வீட்டுக்குத் திரும்பும் வழியில், “நான் நல்லா மன்னிப்பு கேட்டேன் அல்லவா?” என்று ஆனி கேட்டாள்.
“ஆமாம். நீ மன்னிப்பு கேட்ட விதம் சரி தான். இந்த மாதிரி மன்னிப்பு கேட்க வேண்டிய சந்தர்ப்பம், இனி வராதுன்னு நம்பறேன். இனிமேல் உன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வாய் என்று நம்பறேன்” என்றார் மரிலா.
இருவரும் அவர்கள் வீடு இருந்த சந்தில் நுழைந்து நடக்கத் துவங்கினர். தூரத்தில் தெரிந்த நிழலில் கிரீன் கேபிள்ஸ் அடுப்பங்கரை விளக்கின் வெளிச்சம் மரங்களுக்கு இடையே புகுந்து பளிச்சென்று மின்னியது. ஆனி திடீரென்று மரிலாவுக்கு அருகில் வந்து, அவள் உள்ளங்கையில் தன் கையை வைத்துக் கொண்டாள்.
“நம் வீட்டுக்குப் போறதும், அது நம் வீடுன்னு நினைக்கிறதும் மகிழ்ச்சி தரும் இனிமையான உணர்வு. இதுக்கு முன்னாடி எதுவுமே எனக்கு வீடாத் தெரியல. ஏற்கெனவே கிரீன் கேபிள்ஸ் எனக்குப் பிடிக்கும். நான் அதை நேசிக்கிறேன். ஓ! மரிலா! நான் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன்” என்றாள் ஆனி.
ஆனியின் மெலிந்த சின்னக் கையைத் தம் கையால் தொட்ட போது, மரிலாவின் உள்ளம், இனந்தெரியாத இனிமையான உணர்வால் நிரம்பியது.
“நீ நல்ல பெண்ணாக இருந்தால், எப்போதுமே மகிழ்ச்சியாய் இருப்பாய் ஆனி!” என்றார் மரிலா.