டால்பின் தேசம்

நிலம் மாதிரியே கடல்லயும் தனித்தனி நாடுகள் இருந்தது. அதுல ஒரு நாட்டை டால்பின் ஆட்சி செய்தது.

அது ஒரு மீனாட்சி நாடு. ஆமா அந்த கடல் பகுதியில இருக்கிற கடல் வாழ் உயிரினங்கள் எல்லாம் சேர்ந்து அவங்க தலைவரை தேர்ந்தெடுப்பார்கள். அப்படித்தான் டால்பின அவங்க தலைவரா தேர்ந்தெடுத்து இருந்தாங்க.

டால்ஃபின் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்ற மாதிரி சட்ட திட்டங்கள் போட்டு நல்ல விதமா ஆட்சி செய்தது.

இனப்பெருக்க காலத்துல இருக்கிற மீன்களை தொல்லை செய்யக்கூடாது. மீன் முட்டைகளை யாரும் உடைக்கக்கூடாது. சுறாக்கள் தங்களுக்கு தேவையான அளவு மீன்களை மட்டும் தான் சாப்பிடணும். அதே மாதிரி திமிங்கலமும் அவங்களுக்கு வேண்டிய அளவு மட்டும் தான் சாப்பிடணும். மற்ற உயிர்களை தொந்தரவு செய்யக்கூடாது. பளபளன்னு மின்னுற உயிரினங்கள் இரவு நேரத்துல உறங்குற பிற உயிரினங்களை தொல்லை செய்யாமல் இருக்கணும்.

இப்படி எல்லாம் சட்டம் போட்டு எந்த சண்டையும் இல்லாம ஆட்சி செய்தது.

படம் : அப்பு சிவா

அப்போ ஒரு ஆக்டோபஸ்க்கு தான் தான் இந்த நாட்ட ஆளனும்னு ஆசை வந்துச்சு. அதனால அது தினமும் ஒரு பாறை கிட்ட போய் நின்னு புரியாத மொழியில் ஏதோ பேச ஆரம்பிச்சது.

அதை முதல்ல யாருமே கண்டுக்கல.

ஆனா ஆக்டோபஸ் தொடர்ந்து அதே வேலையை செஞ்சுகிட்டு இருந்துச்சு. அதனால கடல் வாழ் உயிரினங்களோட பார்வை கொஞ்சம் கொஞ்சமா ஆக்டோபஸ் பக்கம் திரும்புச்சு. இது ஏன் இப்படி செய்து அப்படின்னு அந்த நாடு முழுக்க அதே பேச்சா இருந்துச்சு.

அப்போ ஒரு நாள் ஒரு அப்பாவியான நட்சத்திர மீன், ஆக்டோபஸ்கிட்ட போயி நீ ஏன் புரியாத மாதிரி ஏதோ பேசிக்கிட்டு இருக்கேன்னு கேட்டுச்சு.

அதுக்கு ஆக்டோபஸ், “நான்தான் கடல் தேவதை அனுப்பின தூதுவன். தினமும் கடல் தேவதைகிட்ட பேசிட்டு இருக்கேன். தேவதையோட மொழி உங்களுக்கு புரியாது” அப்படின்னு சொல்லுச்சு.

“அப்படியா! தேவதை என்ன சொல்லுறாங்க?” என கேட்டது நட்சத்திர மீன்.

“உங்களையெல்லாம் நான் ஆட்சி செய்ய வந்திருக்கேன். நீங்க எல்லாம் கடவுள் தேவதைக்கு நன்றி சொல்லணும். இல்லனா பேரழிவு ஏற்படும். இனிமே நீங்க எல்லாம் நான் சொல்றததான் கேட்கணும். அதுதான் கடல் தேவதையோட விருப்பம்” அப்படின்னு சொல்லுச்சு ஆக்டோபஸ்.

அந்த அப்பாவி நட்சத்திர மீன், அது உண்மைன்னு நம்பி, நிறைய பேருகிட்ட போய் சொல்லுச்சு.

நட்சத்திர மீன், முதல்ல போய் ஒரு கடல் ஆமை கிட்ட சொல்லுச்சு. அந்த கடல் ஆமை அதை ஒரு ஜெல்லி மீன் கிட்ட சொல்லுச்சு.

அப்படி சொல்லும்போது, “அந்த ஆக்டோபஸோட சக்தியால நடக்க முடியாம இருந்த நட்சத்திர மீன் நடக்க ஆரம்பிச்சிருச்சாம்” அப்படின்னு ஒரு வார்த்தை சேர்த்து சொல்லுச்சு.

அதை ஜெல்லி மீன், கடல் குதிரைகிட்ட சொல்லும்போது, “நடக்க முடியாத ஸ்டார் பிஷ் நடந்துச்சாம், ஆமைக்கு ரெக்க முளைச்சுச்சாம்..” அப்படின்னு ஒரு வரி சேர்த்து சொல்லுச்சு.

இப்படி ஒருத்தர்கிட்ட இருந்து அடுத்தவர்கிட்ட தகவல் போகும்போது கட்டுக்கதைகளும் கூடிக்கிட்டே போச்சு.

அந்த கடல் தேசத்துல நிறைய பேரு, ஆக்டோபஸ், கடல் தேவதை அனுப்பின தூதுவன்னு நம்ப ஆரம்பிச்சுட்டாங்க.

எல்லாரும் தினமும் வந்து ஆக்டோபஸ வணங்கி வாழ்த்து பெற்று விட்டு போனாங்க.

இதையெல்லாம் டால்ஃபின் ரொம்ப கவலையோட பார்த்துகிட்டு இருந்தது.

இந்த மாதிரி பிரச்சனைக்கு என்ன தீர்வு கண்டுபிடிக்கலாம்னு அது அவங்க நூலகத்துல போய் தேடினது.

தேசத்து மக்களோட அறிவை வளர்க்கறது தான் தீர்வுன்னு அதுக்கு புரிஞ்சது. அதனால அது நூலகத்தில் இருக்கிற நூல்கள்ள அவங்க முன்னோர் சொன்ன அறிவுரைகளை எல்லாம் கடல் நண்டுகளோட கடினமான ஓட்டுல எழுதி அவங்கள நாட்டை சுத்தி வர சொல்லுச்சு.

கடல் நண்டுகள் அந்த கடல் தேசம் முழுக்க சுத்தி சுத்தி வந்தாங்க. கடல் நண்டுகள் ஓட்டுல ஏதோ எழுதி இருப்பதை மற்ற கடல்வாழ் உயிரினங்கள் கவனிக்க ஆரம்பிச்சாங்க.

ஒரு நண்டு மேல, “பார்க்கிறத, கேட்கிறத நம்பாத! விசாரிச்சு தெரிஞ்சுக்கோ” அப்படின்னு எழுதி இருந்தது.

ஒரு நண்டு மேல, “இயற்கையில எல்லா உயிரினங்களும் சமம்.” னு எழுதி இருந்தது.

ஒரு நண்டு மேல, “கடமையை செய்!” அப்படின்னு எழுதி இருந்தது.

ஒரு நண்டு மேல, “உழைப்பே உன்னை உயர்த்தும். அதிர்ஷ்டத்தை நம்பாதே!” என்று எழுதியிருந்தது.

இப்படி ஒவ்வொரு நண்டு மேலயும் ஒவ்வொரு வாசகம் எழுதி இருந்தது.

அதையெல்லாம் வாசிச்ச கடல்வாழ் உயிரினங்களும் யோசிக்க ஆரம்பிச்சாங்க.

அவங்க உண்மையைத் தேடி விசாரிக்க ஆரம்பிச்சாங்க. அப்பதான் அவங்களுக்கு அந்த ஆக்டோபஸ்க்கு எந்த சக்தியும் இல்லைன்னு புரிய வந்தது.

அதன் பிறகு அந்த ஆக்டோபஸ யாருமே கண்டுக்கல. கடல் வாழ் உயிரினங்கள் அவங்க அவங்க வேலையை செய்ய ஆரம்பிச்சாங்க.

கடல் தேசம் திரும்பவும் இயல்பு நிலைக்குத் திரும்பினது.

தலைவர் டால்ஃபின் ஒரு பெரிய பிரச்சனையை தீர்த்த மகிழ்ச்சியோட கடல் நண்டுகளுக்கு நன்றி சொன்னார்.

ராஜலட்சுமி நாராயணசாமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *