செந்தில் படிக்கும் பள்ளியில் சிறுவர் தினக் கொண்டாட்டம் நடக்க இருந்தது. மாணவர்களுக்காகப் பல்வேறு போட்டிகளை அறிவித்திருந்தது பள்ளி நிர்வாகம். சிறப்புரை தந்து பரிசுகளை வழங்குவதற்காக மாவட்ட ஆய்வாளரைச் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள்.
நிகழ்ச்சிக்கு ஒரு வாரத்திற்கு முன்னால் செந்திலின் வகுப்பு ஆசிரியர், நடக்கப்போகும் பல்வேறு போட்டிகளைப் பற்றி அறிவித்தார்.
“இந்த வகுப்பில் இருக்கும் எல்லா மாணவர்களும் ஏதாவது ஒரு போட்டியிலாவது பங்கெடுத்துக்கணும். யாரால எதுல கலந்துக்க முடியும்னு யோசிச்சு நாளைக்குப் பேர் கொடுங்க. அருண், நீ ஒரு லிஸ்ட் ரெடி பண்ணி, நாளைக்கு சாயந்திரத்துக்குள்ள குடுத்துரு. சரியா? “ என்று வகுப்புத் தலைவனான அருணிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.
அருணும் மாணவர்களின் விருப்பத்தைக் கேட்டு ஒரு காகிதத்தில் குறித்து வைத்துக் கொண்டான்.
செந்தில் படிப்பில் கெட்டிக்காரன். விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டுகின்றவன். அவனுக்குக் குழந்தையில் இருந்து திக்குவாய்ப் பிரச்சினை இருந்து வந்தது. அதுவும் எப்போதெல்லாம் அதிக உணர்ச்சிவசப்படுகிறானோ, அப்போது அதிகமாகத் திக்க ஆரம்பித்து விடுகிறது. அவனுக்குப் பேச்சுப் போட்டியில் மற்றும் பாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களைப் பார்த்து ஏக்கமாக இருக்கும். தன்னுடைய நிலையை எண்ணிப் பார்த்து வருத்தத்துடன் நகர்ந்து விடுவான்.
செந்திலின் வகுப்பில் அவன் மீது பொறாமை கொண்டு தேவையில்லாமல் மட்டம் தட்டும் ஒரு சில மாணவர்கள் இருந்தார்கள். படிப்பிலோ, விளையாட்டிலோ அவனை வெல்ல முடியாததால், அவனைக் கேலி செய்து வருத்தப்பட வைத்து மகிழ்ச்சி அடைந்தார்கள். செந்தில் பாவம், அதைக் கூட அதிகம் பொருட்படுத்தாமல் நகர்ந்து விடுவான். செந்திலின் நண்பன் ஜான் மட்டும் பொறுக்க முடியாமல் அவர்களுடன் சண்டைக்குப் போவான்.
“போயிட்டுப் போறாங்க ஜான். அவங்களுக்கே அவங்க என்ன செய்யறாங்கன்னு புரியலை. இதுல ஏதோ சந்தோஷம் கெடைக்குது போல இருக்கு. கெடைச்சுட்டுப் போகட்டும். நீ ஒண்ணும் கண்டுக்காதே” என்று சொல்லி ஜானையும் தடுத்து விடுவான்.
அந்த மாணவர்களில் ஒருவன் வேண்டுமென்றே பேச்சுப் போட்டிக்காக, செந்திலின் பெயரை அருணிடம் கொடுத்துவிட்டான். அருணும் கவனிக்காமல் ஆசிரியரிடம் கொடுத்துவிட, செந்திலின் பெயர் நிகழ்ச்சி நிரலில் இடம் பிடித்து விட்டது.
நிகழ்ச்சிக்கு இரண்டு நாட்கள் முன்பு, ஆசிரியர் பேச்சுப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்களின் பெயரை வகுப்பில் படித்துக் காண்பித்தார். செந்திலுக்கோ பயங்கர அதிர்ச்சி.
“ஸார், நான் பேர் கொடுக்கலை. ஏதோ தவறு நடந்திருக்கு. என் பேரை அடிச்சிருங்க” என்று சிக்கித் திணறிச் சொல்லி முடித்தான்.
“அடடா, இனிமேல் மாத்த முடியாது செந்தில். தலைமை ஆசிரியர் கிட்டப் போயிருச்சு இந்த நிகழ்ச்சி நிரல். பரவாயில்லை. பரிசு கெடைக்காதுன்னு பயப்படாதே. சும்மா தைரியமாக் கலந்துக்கோ” என்று சொல்லிவிட்டார் அவர்.
ஜான் அவனுக்கு ஆறுதல் சொன்னான்.
“தைரியமாத் தயார் பண்ணு செந்தில். இந்தச் சாக்குல இந்தப் போட்டில நீயும் கலந்துக்கோ. உன்னோட மனசுல இருக்கற பயத்தை தைரியமா எதிர்கொள்வதற்காகவே உனக்குக் கெடைக்கற வாய்ப்பு இதுன்னு நினைச்சுக்கோ” என்று கூறி அவனுக்குத் துணிச்சலை ஊட்டினான்.
முக்கியமான அந்த நாளும் வந்தது. நிகழ்ச்சி ஆரம்பித்தது. பேச்சுப் போட்டியும் தொடங்கியது.
செந்தில் மேடையேறிப் பேச ஆரம்பித்தான்.

நன்றாகவே ஆரம்பித்தான். தன்னுடைய கருத்துகளை ஒவ்வொன்றாகக் கூற ஆரம்பித்தான். எல்லோரும் ஆர்வத்துடன் கவனித்தார்கள். திடீரென்று ஓரிடத்தில் தடுமாறினான். உடனே இதுதான் சாக்கென்று அரங்கில் அமர்ந்திருந்த சில மாணவர்கள், ஓவென்று சத்தம் போட்டுக் கத்தினார்கள். மனமுடைந்து போன செந்திலால் அதற்கு மேல் தொடர முடியவில்லை. வாய் திக்க ஆரம்பித்துவிட்டது. அதற்கு மேல் அதிகம் பேசாமல், கண்ணீருடன் மேடையில் இருந்து இறங்கி விட்டான். நண்பனின் வாடிய முகத்தைக் கண்டு ஜானும் வருந்தினான்.
சிறிது நேரத்தில் பேச்சுப் போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுப் பரிசுகள் வழங்கப்பட்டன. செந்திலுக்குப் பரிசு கிடைக்கவில்லை என்கிற வருத்தத்தை விட, நினைத்தபடி பேச முடியவில்லை என்கிற வருத்தமே அதிகமாக இருந்தது.
மாவட்ட ஆட்சியாளர் சிறப்புரை வழங்கத் தொடங்கினார். பேச ஆரம்பிக்கும் போது சபையோரைப் பார்த்து,
“வ வ வணக்கம் அ அ அனைவருக்கும் ” என்று அவர் ஆரம்பித்ததைப் பார்த்து அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.
“என்ன! ஆச்சர்யமாக இருக்கிறதா? நானும் சிறு குழந்தையாக இருந்தபோது இப்படித்தான் சிக்கித் தடுமாறிப் பேசிக் கொண்டிருந்தேன். ஆனால் வளர வளர, என்னுடைய இந்தக் குறையை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்று மனதில் வெறி வந்தது. விடாமுயற்சி செய்து சில பயிற்சிகள் செய்தேன். ஓயாமல் உழைத்ததற்கு ஒருநாள் பலன் கிடைத்தது. இன்று நான் ஒரு மேடைப் பேச்சாளராக வெற்றி அடைந்திருக்கிறேன். இதற்குக் காரணம் யார் தெரியுமா? என்னுடைய நண்பர்கள். எனக்கு உறுதுணையாக நின்று என்னை ஜெயிக்க வைத்தவர்கள் என்னுடைய நண்பர்கள்தான். இன்று இந்த மேடையில் ஒரு மாணவன் தடுமாறிய போது என்னுடைய இளம் பருவ அனுபவம் என் நினைவில் எட்டிப் பார்த்தது. ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால் நீங்கள் அவனை ஊக்குவிக்காமல் ஏளனம் செய்துவிட்டீர்கள். உங்களுடைய ஆதரவு அவனுக்குக் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் நீங்கள் தரவில்லை. அடுத்த வருடம் இந்த மாணவனை முதல் பரிசு வாங்க வைக்கவேண்டிய பொறுப்பை உங்களிடம் ஒப்படைக்கிறேன்” என்று கூறித் தன் உரையை முடித்தார்.
செந்திலை ஏளனம் செய்த மாணவர்கள் தங்களுடைய தவறை உணர்ந்து தலைகுனிந்து நின்றார்கள். ஆனால் மாவட்ட ஆட்சியாளரின் கருத்து அவர்களுடைய உள்ளங்களில் பசுமரத்தாணியாகப் பதிந்து போனது. செந்திலிடம் சென்று மன்னிப்பு வேண்டினார்கள்.
செந்திலும் தினமும் கடற்கரைக்குச் சென்று வாயில் கூழாங்கல்லை அடக்கிக் கொண்டு பேச்சுப் பயிற்சி செய்தான். மருத்துவருடைய அறிவுரைகளைக் கேட்டு அவற்றின்படி நடந்தான். இப்போது ஜானைப் போலப் பல நண்பர்கள் அவனுக்குக் கிடைத்து விட்டார்கள். எல்லோரும் அவனுக்கு உதவி செய்தார்கள்.
அடுத்த வருடம் பேச்சுப் போட்டியில் முதல் பரிசை வென்றான் செந்தில். ஆண்டுகள் உருண்டோடின. இப்போது செந்தில் படித்து முடித்துக் கல்லூரியில் வேலை பார்க்கிறான். வெற்றிகரமான மேடைப் பேச்சாளராகப் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு உரையாற்றும் செந்தில் சமீபத்தில், “சொல்லின் செல்வன்” என்ற பட்டத்தை வென்றிருக்கிறான்.
புவனா சந்திரசேகரன்.