கனி படிக்கும் மாயனூர் அரசுப்பள்ளி பார்ப்பதற்கு மிகவும் அழகானது. வாசல் கதவு வழியே உள்ளே நுழைந்தால், முதலில் தென்படுவது பெரிய வேப்பமரம். அதன் எதிர்புறம் பெரிய ஆலமரம். ஆங்காங்கே மாமரம், நாவல்மரம், பூவரச மரம் இருக்கின்றன. எல்லா மரத்தைச் சுற்றிலும் ஒரு மேடை அமைத்திருப்பார்கள். பிள்ளைகள் மதிய உணவு அங்கே சாப்பிடுவார்கள். நடுவில் இறை வழிபாடு நடக்கும் இடம். அதன் பின்னர் உள்ள கட்டிடத்தில் வரிசையாக வகுப்புகள் இருக்கும். பள்ளியில் குழந்தைகள் தின விழாவிற்காக மாணவ, மாணவிகளுக்குக் கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி, கலை நிகழ்ச்சி எல்லாம் அறிவித்திருந்தார்கள்.
கனி, லட்சுமி, அசோக், நிஜாம், அமலி ஆகிய ஐவரும் ஒன்றாம் வகுப்பிலிருந்து இதோ ஆறாம் வகுப்பு வரை ஒன்றாகப் படிக்கிறார்கள். ஐவரும் சேர்ந்து ஏதாவது தனித்து செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து இருந்தார்கள்.
“அசோக் நீ சொல்லு நாம என்ன செய்யலாம்?” என்றான் நிஜாம்.
“நம்ம கிராமத்தில் இப்போ என்ன விஷயத்துக்காக நாம போராடணுமோ அதையே நாடகமாகப் போடுவோம்”
“அப்படி என்னடா விஷயம் இருக்கு போராட?”
“அடப்பாவி! முன்னாடி எல்லாம் ஆத்துல வருகிற நீர் கடைமடை வரை போகும். மூணு போகம் விவசாயம் செய்வோம்னு தாத்தா சொல்லியிருக்கார். இப்போ ஒரு போகம் செய்யவே தண்ணி வர மாட்டேங்குது”
“அதுக்கு என்ன காரணம்னு அதையும் சொல்லேண்டா.” என்ற அமலியிடம், “உனக்கு டிவி பார்க்கவே நேரம் பத்தாது இதெல்லாம் எங்க தெரியப் போகுது?”
“சரிடா கோவிச்சிக்காதே. கொஞ்சம் விளக்கமாதான் சொல்லேன்.”
“நம்ம ஊருல ஆற்றில் அளவுக்கு அதிகமாக மண் அள்றாங்க. அதனால தான் நமக்குக் குடிக்கவும், விவசாயம் செய்யவும் தண்ணி வர மாட்டேங்குது. இன்னும் கொஞ்ச நாளில் நம்ம ஊரைக் காலி செஞ்சுட்டு போக வேண்டியது தான்.”
“இந்த விஷயமெல்லாம் உனக்கு யார் சொன்னா? என்றாள் லட்சுமி.
“நம்ம ஊரில் ஒரு அண்ணா படிப்பகம் நடத்துகிறாரே. அவர் சொன்னார்”
“யாரு பிரபா அண்ணாவா?”
“ஆமாம். ஆனா அந்த அண்ணனிடம் பேசக் கூடாதுன்னு எங்க அம்மாச்சி சொல்லுச்சு”
“உங்க அம்மாச்சி தான. சொல்லும், சும்மா ஊர் வம்ப விலைக்கு வாங்கும். அதுக்கு என்ன தெரியும்? ஒரு தடவ நம்ம ஊருக்காகப் போராட்டம் செய்து ஜெயிலுக்குப் போயிட்டு வந்திருக்கார் அந்த அண்ணன் தெரியுமா?”
“இன்னும் ஒரு வாரம் இருக்கு. அந்த அண்ணன்கிட்டயே ஒரு ஐடியா கேட்போம்”
“என்ன ஐவர் கூட்டணி இந்தப் பக்கம் எல்லாம் எட்டிப் பார்க்கறீங்க என்ன விஷயம்?”என்றார் பிரபு.
“குழந்தைகள் தின விழாவுக்காக நம்ம பள்ளியில் விழா நடத்துறாங்க. மாவட்ட ஆட்சியர் தான் தலைமை ஏற்று நடத்துகிறார். அதான் உங்களிடம் ஐடியா கேட்கலாம்னு வந்தோம்”
‘எத்தனையோ தடவ மனு கொடுத்தும் ஆட்சியரைப் பார்க்க முடியல. இந்தச் சந்தர்ப்பத்தை விடக்கூடாது’ என்று நினைத்தார் பிரபு.
“அண்ணா நம்ம ஊர் மணல் கொள்ளைப் பிரச்சனையை நாடகமா போடலாம்னு இருக்கோம். நீங்கதான் அதுக்கு உதவி பண்ணனும்”
“சூப்பர் டா பசங்களா! சின்ன பசங்க உங்களுக்கு இருக்கும் பொறுப்பு கூட பெரியவங்களுக்கு இருக்கிறது இல்ல. என்ன உதவி வேணும் சொல்லுங்க?”
“கதை, வசனமே நீங்கதான் எழுதித் தரணும்.”
“பரிசுக்காக இதைச் செய்யணும்னு இல்ல. ஊர் மக்களுக்காகக் கண்டிப்பா செய்றோம்.”
ஐவர் கூட்டணி அடிக்கடி படிப்பகம் வந்து வசனம் சொல்லி, நடித்துப் பார்த்தார்கள்.
விழா நாளும் வந்தது.
கனி காக்காவாக வேடம் போட்டிருந்தாள். லட்சுமி காவிரியாகவும், நிஜாம் பசு மாடாகவும், அமலி ஆறாகவும், அசோக் மணல் அள்ளி வியாபாரம் செய்பவனாகவும் வேடமிட்டு இருந்தார்கள்.
கிராம மக்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கலெக்டர் அனைவரும் இருக்கையில் அமர்ந்து நாடகம் பார்க்க ஆரம்பித்தார்கள்.
(கனி) காக்கா நிறைய நேரம் பறந்து திரிந்து தண்ணீர் இல்லாமல் வருந்தி மரத்தின் மீது சோர்வோடு அமர்ந்தாள்.
நாக்கு உலர்ந்து வறண்ட (நிஜாம்) பசுவும் சோர்ந்து போய் ஆற்றின் அருகே உட்கார்ந்தது.
மணல் அள்ளி வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்த அசோக்குக்கும் தாகமாக இருந்தது. அவன் கையோடு கொண்டு வந்திருந்த தண்ணீர் போத்தலில் இருந்து நீர் அருந்தினான்.
‘என்ன வெயிலு,வரவர வேலையே செய்ய முடியல..’ என்று நொந்து கொண்டான்.
அவன் அருகில் பறந்து வந்த காக்கா அவனிடமிருந்த தண்ணீர் போத்தலைக் கீழே தள்ளி விட்டுக் குடித்தது.
பசுவும் ஓடி வந்தது. ஆனால் நீர் அதற்குள் மண் இழுத்துக் கொண்டது. மண்ணிற்கும் தாகமாக இருந்தது.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அசோக், “மழை பெய்யவில்லை. தண்ணீர் பாடு எல்லோருக்கும் பெரும் பாடாக இருக்கு..” என்று புலம்பினான்.
சூரிய ஒளியே மங்கி விடும் அளவுக்கு அவன் எதிரே ஒரு தேவதை தோன்றினாள்.
கண்களைக் கசக்கிக் கொண்டே, “யார் நீ?” என்றான் அசோக்.
“நான்தான் காவிரி தாய்!”
அவனால் நம்பவே முடியவில்லை. “நீ மந்திரவாதியா அல்லது சூனியக்காரியா உண்மையைச் சொல்!”
“கடவுளே வந்து நின்றாலும் நம்பினால் தான் வரம் கொடுப்பார். மெய்யாகவே நான்தான் காவிரி”
“உனக்கு என்ன வேணும்?”
“எனக்கு வேண்டியதை நீ தருவாயா?”
“எனக்கு வேலை கிடக்குது மா. சீக்கிரம் சொல்லிட்டு போ”
“நானொரு கதை சொல்கிறேன். கேட்டுவிட்டுச் செல்!”
“சரிசரி சொல்லு”
“நீ சின்ன பையனா இருந்த போது உங்க அம்மா இங்க காவிரி ஆற்றில் உன்னைக் குளிக்க கூட்டிட்டு வருவாங்க. உங்க வீட்டில் உள்ள ஆடு, மாடு எல்லாம் இங்கேதான் குளிக்கும். உங்க ஊருக்கே ஆற்றில் இருந்து தான் குடிக்கத் தண்ணீர் எடுத்துப் போவீங்க”
“இதெல்லாம் தான் எனக்கே தெரியுமே!”
“குறுக்கே பேசாமல் கேள். முன்பெல்லாம் ஆற்று ஓரங்களில் கையை வைத்துத் தோண்டினாலே தண்ணீர் வரும். ஆனால், இன்று 100 அடிக்கு மேல் தோண்டினாலும் தண்ணீர் வருவது இல்லை. ஏனென்றால், நீங்கள் ஆற்று மணலை அதிகமாகச் சுரண்டி விட்டதால் நிலத்தடி நீரை சேமிக்க முடியாமல் போகிறது. மேலும், ஆறுகளில் நீர்வரத்து குறைந்து, அதன் சூழ்நிலை மண்டலம் இன்று பாலைவனமாக மாறி வருகிறது. இதனால், அங்கு வாழும் தாவரம், விலங்கினங்களும் அழிந்து வருகின்றன.”
“நீ எங்க வர என்று எனக்குத் தெரியும்? என் பொழப்பில் மண்ணள்ளிப் போட போற அதானே. இந்த வேலையெல்லாம் என்கிட்ட நடக்காது.”
“அதெல்லாம் செய்ய மாட்டேன். கவனமா கேளு! நிலத்தடி நீரைச் சேமிப்பதில் ஆற்று மணல் முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும், நீரைச் சேமிப்பதோடு வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களிலிருந்து மணல் உங்களைப் பாதுகாக்கிறது.”
“அதற்கு நானென்ன செய்ய முடியும். நீ சொல்றது எல்லாம் உண்மைதான். ஆனால் வீடு கட்ட மண்ணும் தேவைப்படுகிறதே என்ன செய்வது?”

“அதற்கு மாற்று வழி ஏதாவது யோசிக்க வேண்டியது தான். இப்படியே செய்து கொண்டிருந்தால் நீ இப்போது போத்தலில் குடிக்கிற நீரும் கிடைக்காது. இடம் பெயர்ந்து வரும் பறவைகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. 40 ஆண்டுகளுக்கு முன் 23 வகையான மீன் இனங்கள் இருந்தன. ஆனால், தற்பொழுது 5 வகையான மீன் இனங்கள் இருப்பது அரிதாக உள்ளது. நன்னீர் இறால் மீன்களும் குறைந்து விட்டன. கொசுக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டன.”
“ஆமாம் இப்போ கொசு நிறைய இருக்கிறது.” என்று முணு முணுத்துக் கொண்டான் அசோக்.
“இந்த பசு மாடும், மற்ற விலங்குகளும், பறவைகளும் நீரில்லாமல் இறக்க வேண்டுமா சொல் மானிடா? நீயும் ஒரு மனிதனா? இயற்கையை வஞ்சிக்கும் நீ அந்த இயற்கையால் தண்டிக்கப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை!” என்று சொல்லிக் காவிரி கண்ணீர் விட்டு மறைந்து விட்டாள்.
‘நாம ஏதோ தப்பு செய்கிறோமோ?’ என்று முதன் முதலில் குற்ற உணர்வு கொண்டான் அசோக்.
அவனுடைய மனம் இளக, காற்றில் நீர் சேர்ந்து மெல்ல மழையாகிக் குளிர்ந்தது. தூறல் அவன் எண்ணத்திலும் குளிர்ச்சியை உருவாக்கியது.
காகமும், மாடும், மற்ற விலங்குகளும் ஓடி வந்து தாகம் தீர்த்தன. வண்டியில் இருந்த மண்ணும் நீரோடு கலந்து சென்றது.
பார்த்திருந்த மக்கள், ஆசிரியர்கள், கலெக்டர் யாவரும் நெகிழ்ந்து போயினர்.
பின்னர் பேசிய கலெக்டர், “இந்தப் பிள்ளைகள், கிராமத்தில் நடக்கும் பிரச்சனையை மையமாக வைத்து அழகாக நடித்தார்கள். அவர்களுக்கு என் பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள். அவர்களுக்கு வசனம் எழுதிக் கொடுத்து சொல்லிக் கொடுத்த பிரபா அவர்களை அரசு சார்பாக நான் பாராட்டுகிறேன். ஆற்று மணல் அள்ளுவதற்கு நிறைய கட்டுப்பாடுகள் விதித்து இருக்கிறோம். ஆற்று மணலுக்கு மாற்றாக ‘எம் – சாண்ட்’ செயற்கை மணல் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்று அரசு முடிவு செய்துள்ளது.” என்று கூறினார்.
சின்ன பிள்ளைகளாக இருந்து போதிலும் திறமையாக நடித்து அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்ததை எண்ணி ஊர் மக்கள் பிள்ளைகளைப் பாராட்டினர்.
ஐவர் கூட்டணி அடுத்து தேர்வுக்காக ஒன்றாகப் படித்துக் கொண்டிருந்தார்கள்.
– ஜெயா சிங்காரவேலு