ஒரு காலத்தில் ஐந்து தேவதைகள் வாழ்ந்து வந்தனர். நீர், நிலம், காற்று, நெருப்பு மற்றும் ஆகாயம் ஆகிய தேவதைகள் ஐவரும் கடவுளால் உருவாக்கப்பட்டவர்கள்.
ஒரு நாள் ஐவரும் தங்களுடைய சக்திகளை கட்டுக்குள் வைக்க, பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள்.
அப்போது நிலத் தேவதை,
“நான் உங்கள் நால்வரையும் விட பெரியவள். ஏனென்றால் நீங்கள் அனைவரும் நிலத்திலே இருக்கிறீர்கள்.” என்றது.
ஆகாயம் மற்றும் காற்று இருவரும்,
“அது எப்படி நாங்கள் இருவரும் உனக்குள் இருக்கிறோம் என்கிறாய்?” என்று கேட்டது.
அதற்கு நிலம் சொன்னது,
“ஆகாயமே! நீ என்னை பார்த்துக் கொண்டு இருக்கிறாய். காற்றே! நீ என்னை தொட்டுக்கொண்டு போகிறாய்.” என்றது.
இதைப் பார்த்த நீரும் நெருப்பும் நிலத்திடம் தங்கள் மறுப்பைக் காட்ட முயன்றன.

அதற்குள் நிலம்,
“நீரே! நெருப்பே! நீங்கள் இருவரும் நிலத்தடியில் அதாவது எனக்குள் இருந்து வருகிறீர்கள். அதனால் உங்கள் நால்வரை விட நானே உயர்ந்தவள்!” என்று கூறியது.
கடவுள் இதைப் பார்த்துக் கொண்டு இருந்தார். இவர்களுக்கு சரியான பாடம் புகட்ட மனதுக்குள் நினைத்துக் கொண்டார்.
ஐவருக்கும் ஒரு சோதனை வைக்க முடிவு செய்தார். அதன்படி ஐவரையும் அழைத்து ஐவருக்கும் ஒரு விதையைக் கொடுத்து,
“யாருடைய உதவியும் இல்லாமல் இந்த விதையை தனித் தனியாக வளர்த்துக் கொண்டு வாருங்கள்!” என்று சொன்னார்.
ஒரு மாதம் கழித்து அவர்கள் ஐவரும் வந்தனர். ஆனால் அவர்கள் வளர்த்த செடி, வளர்ச்சி.குன்றிப் போய் வாடி வதங்கி இருந்தது. அதை பார்த்த கடவுள்,
“ஏன்? உங்களால் வளர்க்க முடியவில்லையா?” என்று கேட்டார்.
ஐவரும், “ஆமாம்.” என்று கூறி தங்கள் தலையைக் குனிந்து கொண்டனர்.
கடவுள் அவர்களிடம் மீண்டும் ஒரு விதையை கொடுத்து,
“அது போகட்டும்! இந்த விதையை, நீங்கள் ஐவரும் ஒன்றாக சேர்ந்து இந்த விதையை வளர்த்து, ஒரு மாதம் கழித்து வாருங்கள்!” என்றார்.
ஒரு மாதம் கழித்து அவர்களும் வந்தனர்.
அவர்கள் வளர்த்த செடி மிகவும் செழிப்பாக இருந்தது.
அதைப் பார்த்த கடவுள்,
“எப்படி இந்தச் செடி இத்தனை செழிப்பாக வளர்ந்தது?” என்று கேட்டார்.
அதற்கு, நிலம், “நான் அதற்கு உரம் தந்தேன்.” என்றும்,
நீர், “நான் அதற்கு ஊட்டச்சத்து தந்தேன்.” என்றும்,
காற்று, “நான் அதற்கு சுத்தமான சூழ்நிலை தந்தேன்.” என்றும்,
நெருப்பு, “நான் ஆகாயத்துடன் சேர்ந்து ஔி தந்தேன்.” என்றும் பதிலளித்தார்கள்.
கடவுள், “அதேதான் ஒற்றுமையாக இருந்தால்தான் ஒரு காரியத்தை சுலபமாகவும் சிறப்பாகவும் செய்ய முடியும் என்று இப்போதாவது உங்களுக்குப் புரிந்ததா?” என்று கேட்டார்.
தேவதைகள் தங்கள் தவறை உணர்ந்து கொண்டனர்.
“ஆமாம். புரிந்து கொண்டோம்.” என்று தெளிந்த மனதுடன் பதிலளித்தார்கள்.
அதன் பிறகு அவர்களுக்குள் எப்போதும் சண்டையே வரவில்லை. ஒற்றுமையாகவே இருந்தனர்.
பி. நீநிகா