ஆசிரியர்:- விழியன்
வெளியீடு:- புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை-18 செல்:- +91 8778073949.
விலை:- ரூ 90/-

பள்ளியில் கணிதம் என்றாலே, மாணவர்க்கு வேப்பங்காயாகக் கசக்கிறது. ஆசிரியர் நடத்தும் பாடம் புரியாததாலும், மற்ற பாடங்களைப் போல் மனப்பாடம் செய்து எழுத முடியாததாலும், பலருக்குக் கணிதம் மேல் பயம் கலந்த வெறுப்பு ஏற்படுகின்றது. இந்தச் சிக்கலைப் போக்கச் சிறார்க்கு விளையாட்டு மூலம், கணிதத்தை எளிமையாகப் புரிய வைக்கும் புதிய முயற்சியில் இறங்கியுள்ளார் விழியன். கணிதத்தை மிக எளிதாகப் புரிந்து கொள்ள மாணவர்க்கு இது ஒரு வழிகாட்டு நூல் எனலாம்.
கணிதத்தில் நம் மாணவர்க்கு ஆர்வம் ஏற்பட, இது வரவேற்க வேண்டிய நல்ல முயற்சி. கணிதத்தில் ஏற்படும் ஆர்வம் மாணவர்களை அறிவியல் துறை நோக்கித் தானாகவே நகர்த்தும். இதில் குழந்தைகளுக்குக் கிரிக்கெட் குறித்தும், கணிதம் குறித்தும் ஏற்படும் சந்தேகங்களை விளக்கும் முக்கியமான கதாபாத்திரத்தின் பெயரே கணிதா.

“ஸ்டேடியம் ஏன் ஓவல் வடிவத்தில் இருக்கிறது?” “பந்தின் எடை எவ்வளவு? கிரிக்கெட் மட்டையின் நீளம் எவ்வளவு இருக்க வேண்டும்?” “வீசுகளம் எந்தத் திசையில் இருக்க வேண்டும்? ஏன்?” “உலக கிரிக்கெட் தரவரிசையை எப்படிக் கணக்கிடுவது?” என்பன போன்று கிரிக்கெட் குறித்த பல தெரியாத பல செய்திகளையும், இதில் தெரிந்து கொள்ளலாம். ஓவியர் மதன் அருமையாகப் படங்கள் வரைந்துள்ளார். 13+ சிறுவர்கள் வாசிக்க வேண்டிய புத்தகம்.
ஞா. கலையரசி