மதன் ஜன்னல் வழியே தெரிந்த யானையை படமெடுக்க ஆரம்பித்தார். நவீன் தலையிலடித்துக்கொண்டே, “டேய்! எப்படிடா காரியத்தில் கண்ணாக இருக்கீயேடா!” என்று சிரித்தார்.
“யூடியூபராகவும் அது பழகிப் போச்சுடா.” என்றார் மதன்.
முழுதாக ஜன்னலை திறக்காமல், லேசாக திறந்துக்கொண்டு யானையை பார்த்தான், ராஜனின் மகன் வரூண். அவர்களின் அறைக்கு எதிரே தான் அது நின்றுக்கொண்டிருந்தது.
அவனுடைய தங்கை மதி, “நீ மட்டும் பாக்குறே? எனக்கும் வழி விடு! நானும் யானையை பாக்கணும்.” என்றாள்.
“கத்தாதே! மதி! உள்ளே வந்துடப் போகுது.” என்று பயமுறுத்தினான் வருண்.
“அதனால எப்படி உள்ளே வர முடியும்?”- மதி.
“உடைச்சு உள்ள வந்துடும்.”
“நீ பொய் சொல்றேண்ணா.. இது ரொம்ப பெரிய யானை இல்லை. தந்தம் இப்போ தான் வளர ஆரம்பிச்சிருக்குது.. ரொம்ப உயரமாகவும் இல்ல.. ” என்றாள் மதி.
“உன்னை விட நான் தான் பல பெரியவன்.. எனக்கு எல்லாம் தெரியும்.” என்று சண்டை போட ஆரம்பித்தான் வருண்.
ராஜன் இருவரையும் சமாதானம் செய்தார். அவர்களின் அறையில் நடந்த சண்டையை போலவே, அங்கிருந்த அறைகளிலும் சண்டை நடந்தேறியது.
துறுதுறுப்பான குழந்தைகள் வெளியே போய் வருகின்றோம் என்றனர். பெரியவர்கள் அவர்களை சிரமப்பட்டு கட்டுப்படுத்தி வைத்தனர்.
பெரியவர்கள் சிலருக்கு அறைக்குள் அடைந்து கிடப்பது எரிச்சலாக இருந்தது.
“யானை எப்போ தான் இங்கிருந்து போகுமோ?” என்று அங்கலாய்த்தார்கள், பெரியவர்கள்.
யானையோ அவ்விடுதி முற்றத்தில் அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருந்தது. ஒருமணி நேரம் அனைவருக்கும் போக்கு காட்டிய பின்னரே, அங்கிருந்து மறைந்தது.
மதன் அதன் ஒவ்வொரு அசைவையும் படமெடுத்திருந்தார். அது கீழே இறங்கிய அடுத்த வினாடி அறையை விட்டு வெளியேறிருந்தார்.

விடுதி சற்று ஏற்றத்தில் கட்டப்பட்டிருந்தது. அதன் எதிரே பூங்கா இருந்தது. அதையொட்டி சிறிய நீர் தேக்கம் ஒன்றிருந்தது.
மதன், “யானை போய்டுச்சு டா நவீன்..” என்று கத்தவும், அங்கு அறைகளில் இருந்த இளைஞர்கள் வேகமாக வெளியே வந்தனர்.
மதனும், நவீனும் நடைபாதையில் இறங்கினார்கள்.
சற்று தள்ளி வைத்திருந்த குப்பைத்தொட்டி தலைகீழாக கிடந்தது அதிலிருந்த பிளாஸ்டிக் பைகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.
– தொடரும்….
தேவி பிரபா
கதை நகர்வு சிறப்பாக உள்ளது
மீண்டும் படிகாக வேண்டும் என்னும் மனநிலையைத் தூண்டுகிறது