நட்பாங்கிழமை

அகிலன் காலையில் ஸ்கூலுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தான்.

“ அம்மா, ஸ்கூலுக்கு நேரமாச்சு. நான் கெளம்பிட்டேன்” என்று தன்னுடைய சைக்கிளில் அமர்ந்தபடி குரல் கொடுத்தான்.

“ சரிப்பா, ஜாக்கிரதையாப் போயிட்டு வா. லஞ்ச் பாக்ஸ் ஞாபகமா எடுத்துக்கிட்டயா? ஏதோ இன்னைக்கு ஸ்கூலில் புராஜெக்ட் கொடுக்கணும்னு சொன்னயே? முடிச்சு எடுத்துக்கிட்டயா? ” அம்மாவின் குரல் காதில் விழுந்தது.

“ எல்லாம் எடுத்துகிட்டேன்மா. நீங்க நல்லாத் தூங்கி ரெஸ்ட் எடுங்க” என்று சொல்லிவிட்டு சைக்கிள் கிளப்பினான் அகிலன்.

அகிலனின் அம்மாவிற்கு இரண்டு நாட்களாக நல்ல காய்ச்சல். அப்பா இல்லை அவனுக்கு. அம்மாவின் உழைப்பால் குடும்பம் ஓடுகிறது. வீட்டு வேலைகளை எல்லாம் முடித்துத் தன்னுடைய தங்கையைக் கிளப்பிப் பள்ளிக்கு அனுப்பிவிட்டுத் தான் கிளம்பியிருக்கிறான் அகிலன். வீட்டில் வேலைகள் நிறைய இருந்ததால் புராஜெக்டை முடிக்க முடியவில்லை. முதல் நாள் இரவு முழுவதும் அம்மாவின் அருகிலேயே உட்கார்ந்து நெற்றியில் ஈரத்துணியை மாற்றி மாற்றிப் போட்டுக் கொண்டிருந்ததால் சரியாகத் தூங்கவில்லை. ஹோம் வொர்க்கும் செய்து முடிக்கவில்லை அவன்.

போகும் வழியில் நடுவில் வந்து அவனை நிறுத்தினான் சரவணன், அகிலனின் பெஸ்ட் ஃப்ரண்ட்.

“ என்னடா சரவணா? ஸ்கூல் வரலையா? யூனிஃபார்ம் போடாம நிக்கறயே? ”

“ என்னோட தாத்தா இறந்து போயிட்டாங்க. காலையில் தான் தகவல் வந்தது. நாங்க எல்லாரும் அவசரமாக் கிளம்பி எங்களோட கிராமத்துக்குப் போறோம். இன்னைக்கு நம்ம புராஜக்ட் கொடுக்கணும் இல்லையா? என்னோடதை நீ கொடுத்துரு. நான் வர ஒரு வாரம், பத்து நாட்கள் ஆகலாம். இந்தா” என்று ஒரு பெரிய பையை அவனிடம் கொடுத்துவிட்டுப் போய்விட்டான் சரவணன். சரவணன் எப்போதும் பள்ளியில் கொடுக்கப்படும் வேலைகளை அக்கறையோடு நேர்த்தியாகச் செய்து பரிசுகளும் வாங்குவான். அந்தப் பையைப் பார்த்ததும் அகிலன் மனதில் ஒரு திட்டம் உருவானது.

சரவணனின் செய்த மாடலைத் தன்னுடையது என்று சொல்லிப் பள்ளியில் ஆசிரியரிடம் கொடுத்துவிட்டான். சரவணன் ஊரிலிருந்து வருவதற்கு எப்படியும் சில நாட்கள் ஆகும் என்பதால் அவனிடம் ஏதாவது சொல்லிச் சமாளித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தான். இரண்டு நாட்களில் அகிலன் சமர்ப்பித்த மாடலுக்கு முதல் பரிசு அறிவிக்கப்பட்டது. அடுத்த நாள் பரிசளிப்பு விழா. மாவட்டக் கல்வி அதிகாரி விழாவிற்குத் தலைமை தாங்க வந்திருந்தார். அதற்கு முதல் நாள் சரவணனும் ஊரிலிருந்து திரும்பி வந்துவிட்டான்.

சரவணனுக்கு அகிலன் செய்த வேலை தெரியவந்தது. மனம் வருந்தினான். அகிலனிடம் பேசவில்லை. அவனைப் பற்றி ஆசிரியரிடம் சென்று தவறாகச் சொல்லவும் இல்லை. அமைதியாக இருந்துவிட்டான்.

அடுத்த நாள் காலையில் மேடையில் பரிசளிப்பு விழா ஆரம்பித்தது. மாணவர்களும், பள்ளி ஆசிரியர்களும், பெற்றோர்களும் வந்திருந்தார்கள்.

“ முதல் பரிசு பெறும் மாணவரான சரவணனை மேடைக்கு அழைக்கிறோம்” என்று தலைமையாசிரியர் அறிவித்தபோது சரவணன் ஆச்சரியத்துடன் அகிலனைப் பார்த்தான். அகிலன் தலைகுனிந்தபடி உட்கார்ந்திருந்தான்.

சரவணன் மேடையில் ஏறிப் பரிசை வாங்கிக்கொண்டு நன்றி கூறினான்.

“ நான் ஊருக்குப் போயிருந்தாலும் என்னுடைய மாடலைச் சரியான நேரத்தில் சமர்ப்பித்த என் நண்பன் அகிலனுக்கு நன்றி கூறுகிறேன்” என்று சரவணன் கூறியபோது அகிலன் கண்களில் கண்ணீர் வழிந்தது.

பள்ளித் தலைமையாசிரியர் இறுதியாக உரையாற்றினார்.

“ சரவணனின் மாடலைத் தன்னுடையதாகச் சொல்லி முதலில் சமர்ப்பித்த அகிலன், நேற்று மாலை வந்து எங்களிடம் தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு வேண்டினான். அவனுடைய அம்மாவின் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் அவனால் மாடலை நேரத்துக்குள் முடிக்க முடியவில்லை என்று சொன்னான். அவனுடைய நேர்மையைப் பாராட்டுகிறேன். அவனுக்கு நேற்று மீண்டும் வாய்ப்பு கொடுத்தோம். இன்று காலையில் வந்து தன்னுடைய மாடலைச் சமர்ப்பித்திருக்கிறான். தவறை ஒத்துக் கொண்ட துணிச்சலுக்காகவும், உண்மை பேசியதற்காகவும் அவனைப் பாராட்டுகிறேன். பள்ளி நிர்வாகத்தின் சார்பாக அகிலனுக்குச் சிறப்புப் பரிசு வழங்குகிறோம். தன்னுடைய நண்பன் தவறு செய்திருந்தாலும் அவனை மன்னித்து நன்றி கூறிய சரவணனையும் இந்தத் தருணத்தில் பாராட்டுகிறேன். இவர்களுடைய நட்பு இதே போலச் சிறப்பாக எதிர்காலத்திலும் தொடரட்டும் என்று வாழ்த்துகிறேன்” என்று தலைமையாசிரியர் பேசியதைக் கேட்டு அனைத்து மாணவர்களும் கை தட்டி மகிழ்ந்தார்கள்.

சரவணனின் பெற்றோரும், அகிலனின் அம்மாவும் தங்களுடைய குழந்தைகளை நினைத்துப் பெருமிதம் கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *