ஒரு காட்டுல ஒரு ஆமை இருந்துச்சாம். அதோட குஞ்சு வந்து, “அம்மா அம்மா ஒரு கதை சொல்லுங்க” ன்னு சொல்லுச்சாம்.
அம்மா ஆமை பேரு டக்கு. குஞ்சு ஆமை பேரு திக்கு.
ஆனா அம்மா ஆமைக்கு ஒரு கல் தடுக்கி கால்ல அடிபட்டு இருந்துச்சாம்.
அதனால, “அம்மாக்கு கால் எல்லாம் வலிக்குது. நான் தூங்கப் போறேன்” சொல்லுச்சாம் டக்கு.
ஆனா திக்கு கேக்கவே இல்லையாம். அதோட டக்கு ஓட்டு மேல ஏறிக்கிட்டு, “அம்மா கதை சொல்லுங்க, கதை சொல்லுங்க, இப்பவே சொல்லுங்க” அப்படின்னு கேட்டுச்சாம்.
“எனக்கு தூக்கமா வருது. நான் தூங்க போறேன்”னு டக்கு அதோட ஓட்டுக்குள்ள போகப் பார்த்துச்சாம்.
திக்கு, அம்மா ஓட்டு மேல உட்கார்ந்துகிட்டு அதோட கழுத்து உள்ள போகாம பிடிச்சுகிச்சாம்.
” எனக்கு கதை வேணும். கதை வேணும். கதை சொல்லுங்க” அப்படின்னு கேட்டுச்சாம்.
உடனே டக்கு கதை சொல்ல ஆரம்பிச்சதாம்.

“ஒரு பெரிய காடு. அங்கே ஒரு ஆமை வாழ்ந்து வந்தது”
“ஆமா! ஆமா! அது நீங்க தான்! எனக்கு நல்லாத் தெரியும்” உற்சாகமா கத்திச்சு திக்கு.
“அமைதியா கதை கேளு டா! இல்லாட்டி கதை சொல்ல மாட்டேன்” மிரட்டிச்சு டக்கு.
சிரிச்சுட்டே “சரி சரி சொல்லுங்க”
“அந்த ஆமை மின்னல் ஆமை. மின்னல் வேகத்தில் ஓடும். ஒரு நிமிஷத்துல அந்த பெரிய காட்ட ரெண்டு தடவ சுத்திட்டு வந்துடும்!”
“பொய் பொய்! ஆமை என்றால் மெதுவா தான் போகும். ஆமைன்னா மெதுவா தான் போகும்”
“நீ அமைதியா கதை கேளு. இல்லைன்னா உன்னை இறக்கி விட்டுருவேன்” அப்படின்னு கோபமா சொன்னது டக்கு.
“சரி சரி சொல்லுங்க சொல்லுங்க” திரும்பவும் கேட்டது திக்கு.
“மின்னல் ஆமைய பார்த்த முயல், என் கூட போட்டிக்கு வா” அப்படின்னு கூப்பிட்டது.
“நிச்சயமா முயல் தான் ஜெயிக்கும்” திரும்பவும் குறுக்க பேசியது திக்கு.
“நீ என் முதுகில இருந்து இறங்கி என் முன்னாடி வா. அப்ப தான் கதை” கூப்பிட்டது டக்கு.
திக்கு, முதுகில் இருந்து இறங்கி அம்மா முன்னாடி ஆவலோட நின்னது.
“அந்த போட்டிக்கு நடுவர் யார் தெரியுமா? நத்தை” சுவாரஸ்யமா சொன்னது டக்கு.
“ஹையோ நத்தை, ஆமைய விட மெதுவா ஊரும். ஹஹ ஹா” என சிரித்தது திக்கு.
“சொல்ல சொல்ல கேட்காம குறுக்க குறுக்க பேசுற. உனக்கு கதை கிடையாது” டக்கென ஓட்டுக்குள் பதுங்கி விட்டது டக்கு.
அட! என்ன செய்வது. தானும் அம்மா முதுகில் ஏறி படுத்துக் கொண்டது திக்கு.
– ராஜலட்சுமி நாராயணசாமி
