80 நாட்களில் உலகத்தை சுற்றி – 5

Around the world in 80 days

– ஜூல்ஸ் வெர்னே

தமிழில் – அகிலாண்டபாரதி

இதுவரை:

எண்பது நாட்களில் உலகத்தை சுற்றி வருவேன் என்று தன் நண்பர்களிடம் சவால் விட்டு லண்டனில் இருந்து தன் புத்திசாலி சமையல்காரருடன் கிளம்புகிறார் ஃபிலியாஸ் ஃபாக். வழியில் பல சாகசங்களைச் சந்தித்த பின் இந்தியா வருகிறார். பம்பாயிலிருந்து கல்கத்தா வரும் வழியில் ஒரு கொள்ளை கூட்டத்திடம் சிக்கி இருக்கும் அவ்டா என்ற இளம்பெண்ணை மீட்கிறார்கள். இனி…

இனி..

கொள்ளையர்களிடமிருந்து தப்பிய ஃபாக் மற்றும் அவரது நண்பர்கள் அடுத்த நாள் மதியத்திற்குள் அலகாபாத் ரயில் நிலையத்தை அடைந்தனர். கொள்ளையர்கள் கொடுத்த மயக்க மருந்தின் விளைவாக அவ்டா தூங்கிக் கொண்டே இருந்தாள். சற்று நேரத்தில் ரயில் புறப்படும் என்ற தகவல் அவர்களுக்குக் கிடைத்தது.

 அதுவரை அவர்களுடைய பயணத்திற்கு மிகவும் உதவியாக இருந்த அலியை அழைத்த ஃபாக், அவருக்கு பேசியபடி கொஞ்சம் பணத்தைக் கொடுத்தார். அப்படியே அவர்கள் பயணம் செய்து வந்த யானையையும் அவரையே வைத்துக் கொள்ளும்படி சொன்னார்.

“எங்களுக்கு இனிமே இந்த யானை தேவை இல்லை. நீங்களே என்னுடைய பரிசா வச்சுக்கோங்க!” என்று கூறி நன்றி தெரிவித்தார்.

ஃபாக் மற்றும் பாஸர்பார்ட்டவுட் இருவரும் இணைந்து, தூங்கிக் கொண்டிருந்த அவ்டாவை கவனமாக ரயிலில் படுக்க வைத்தனர். சற்று நேரத்தில் ரயில் அலகாபாத்திலிருந்து பனாரஸ் (இன்றைய வாரணாசி) நகரை நோக்கிப் புறப்பட்டது. ரயில் புறப்பட்டுக் கொஞ்ச நேரம் கழித்துக் கண் விழித்தாள் அவ்டா.

சுற்றிலும் புதிய நபர்கள் இருப்பதைப் பார்த்து பயந்த அவள், “நான் எங்கே இருக்கேன்? நீங்க யாரு?” என்று கேட்டாள்.

“கவலைப் படாதே! உன்னை கொள்ளைக்காரங்க கிட்ட இருந்து காப்பாத்தினது நாங்க தான். இப்ப நீ பத்திரமாக இருக்கே.. என் பெயர் ஃபிலியாஸ் ஃபாக். இது என்னுடைய சமையல்காரர் பாஸர்பார்ட்டவுட்” என்று தங்களை அறிமுகம் செய்து கொண்டார்.

“ரொம்ப நன்றி! நான் அவங்க கிட்ட இருந்து தப்பிப்பேன்னு நினைக்கவே இல்ல. என் குடும்பத்தில் எல்லாரையும் அவங்க கொன்னுட்டாங்க. எனக்குன்னு யாருமே இல்லை” என்று கண்ணீருடன் கூறினாள் அவ்டா.

படம் – அப்பு சிவா

“இனிமேலும் கொள்ளைக்காரங்களால உனக்கு ஆபத்து வர வாய்ப்பிருக்கு. மறுபடியும் அவங்க உன்னைத் தேடி வரலாம். நாங்க அடுத்ததா கல்கத்தாவில் இருந்து ஹாங்காங் நாட்டுக்குப் போறோம். உனக்கு விருப்பமிருந்தா நீயும் எங்களோட வரலாம்” என்று ஃபாக் கேட்டதும் அவ்டா உடனடியாக சம்மதித்தாள்.

நிம்மதியான சிறு பயணத்திற்குப் பின் ரயில் கல்கத்தா ரயில் நிலையத்திற்குள் நுழைந்தது. அங்கிருந்து ஹாங்காங் நாட்டிற்குச் செல்லப் போகும் ‘ரங்கூன்’ என்ற நீராவிக் கப்பல் இன்னும் சில மணி நேரம் கழித்துக் கிளம்புவதாக இருந்தது. “உங்களுக்கு சில உடைகள் வாங்கலாம்” என்று ஃபிலியாஸ் அவ்டாவிடம் சொன்னார்.

 அவர்கள் ரயிலில் இறங்கி சிறிது நேரத்திலேயே ஒரு காவல் அதிகாரி அவர்களை அணுகினார். “உங்க பேரு ஃபிலியாஸ் ஃபாகா? இது உங்க சமையல்காரரா?” என்று கேட்டார்.

“ஆமா. என்ன விஷயம்?” என்று ஃபாக் கேட்டவுடன், “என் கூட வாங்க” என்று கூறி மூவரையும் அழைத்துச் சென்றார் காவல் அதிகாரி.

“உங்களைக் கைது பண்ணியிருக்கோம். இது நீதிமன்றம். ஒபாடியா அப்படிங்கிற நீதிபதி இப்போ உங்க மேல சுமத்தப்பட்டிருக்கிற குற்றத்தை விசாரிப்பார்” என்று காவலர் கூறினார்.

 எதற்காகக் கைது செய்யப்பட்டிருக்கிறோம் என்று தெரியாமல் மூவரும் குழம்பி நின்றனர். விரைவில் நீதிபதி உள்ளே நுழைந்தார். அவருக்குப் பின்னால் இன்னும் மூன்று நபர்கள் உள்ளே வந்தனர். அவர்களில் ஒருவர் பாஸர்ப்பார்ட்டவுட் பம்பாய் கோவிலில் விட்டுவிட்டு வந்த காலணிகளைக் கையில் வைத்திருந்தார். மூவரில் இன்னொருவர் இவர்களைப் பின்தொடர்ந்து வரும் காவலரான திரு.ஃபிக்ஸ்!

“நீங்க கால்ல செருப்பு போட்டுக்கிட்டு ஒரு கோவிலுக்குள்ள போயிருக்கீங்க. இதோ அதுக்கு ஆதாரமா உங்களுடைய செருப்புகளை இவங்க கொண்டு வந்திருக்காங்க. உங்களுக்கு 150 பவுண்டுகள் அபராதம் விதிக்கிறேன். ஒரு வாரம் சிறை தண்டனையும் நீங்க அனுபவிக்கணும்” என்று நீதிபதி பாஸர்பார்ட்டவுட்டைப் பார்த்துக் கூறினார்.

 ஃபாக் அவரிடம், “மதிப்பிற்குரிய நீதிபதி அவர்களே! வணக்கம். இது அவர் தெரியாமல் செஞ்ச தவறு. அவருக்கு இந்தியக் கோவில்களில் உள்ள சட்ட விதிகள் தெரியாது. நாங்கள் உடனடியாக ஹாங்காங் கிளம்பணும். அதனால் சிறை தண்டனைக்கு பதிலா பிணைத்தொகை எதுவும் இருந்தால் நான் செலுத்துறேன்” என்று கேட்டுக் கொண்டார்

நீதிபதி சம்மதித்தார். ஆனால் பிணைத் தொகையை 2000 பவுண்டுகள் என்று நிர்ணயித்தார். நேரத்தை விரயம் செய்வதை விட பணம் செலவழிப்பது சிறந்தது என்று ஃபாகிற்குத் தோன்றியது. ஒத்துக் கொண்டார்.

 இந்த விசாரணையை கவனித்துக் கொண்டிருந்த திரு. ஃபிக்ஸ் இனிமேல் தன்னால் இந்திய மண்ணில் வைத்து ஃபாக்கை கைது செய்ய முடியாது என்று புரிந்து கொண்டார்.

அபராதத் தொகையையும், பிணைத்தொகையையும் செலுத்திவிட்டு ஃபாக், பாஸர்பார்ட்டவுட் மற்றும் அவ்டா மூவரும் ஹாங்காங் செல்லும் கப்பலான ரங்கூனில் ஏறுவதற்காக கல்கத்தா துறைமுகத்துக்கு விரைந்தனர். கப்பல் கிளம்புவதற்குக் கடைசி சில நிமிடங்களில் முன்பாக அவர்கள் கப்பலில் ஏறிவிட்டனர். கப்பல் புறப்பட்டது. நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

“ஹாங்காங்ல என்னுடைய ஒண்ணு விட்ட சகோதரன் ஜீஜா ஜீஜிபாய் இருக்கிறான். அவன் நமக்கு உதவி பண்ணுவான்!” என்று மகிழ்ச்சியுடன் கூறினாள் அவ்டா.

கப்பல் மெதுமெதுவாக ஹாங்காங் நோக்கி நகர்ந்தது. ஓரிரு நாட்கள் கழிந்த நிலையில் பாஸர்பார்ட்டவுட் ஏற்கனவே அறிமுகமான ஒரு மனிதரை சந்தித்தான். “அட நீங்களா! நாம அடிக்கடி வெவ்வேறு நாடுகள்ல சந்திக்கிறோம். நீங்களும் எங்களை மாதிரியே உலகச் சுற்றுலா போய்கிட்டு இருக்கீங்களா?” என்று அவரிடம் ஆச்சரியமாகக் கேட்டான் பாஸர்பார்ட்டவுட். அந்த நபர் வேறு யாருமல்ல, திரு. ஃபிக்ஸ் தான்!

-தொடரும்.

(ஃபிலியாஸ் ஃபாகின் இதுவரையிலான பயணம்: லண்டன் —–> டோவர் ——> பாரிஸ் —–> டூரின் ——>பிரிண்டிசி——-> சூயஸ்கால்வாய் —–> ஏடன் நகரம் ——-> பம்பாய் ——-> கல்கத்தா——> ஹாங்காங்கை நோக்கி)

– Dr. அகிலாண்டபாரதி  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *