வணக்கம் பூஞ்சிட்டுகளே…
எல்லாரும் எப்படி இருக்கீங்க?
ஊரு பக்கம் ரொம்ப மழைன்னு செய்தி பாத்தேன்..
மழைல நல்லா ஆட்டம் போட்டீங்களா சிட்டுஸ்…
குளிர்ல நடுங்கிட்டு இருக்கோம் நீ வேற.. அப்டிங்கறீங்களா!!
இங்கேயும் அதே கதை தான். குளிர் தாங்கல.. நாம டிஸ்னிய சுத்திட்டு இருந்தபோது கூட இவ்வளவு குளிர் இல்ல. ஆனா போன வாரத்துல குளிர் தூக்கல்.. இந்தக் குளிர்ல லாஸ் ஏஞ்சல்ஸ் விட சான் ஃபரான்சிஸ்கோ’ல பார்க்க அற்புதமான இடங்கள் இருக்குன்னு ஒரு பட்சி சொல்லுச்சு. அதான் இந்த பட்சி இங்க பறந்து வந்துருச்சு. யெஸ் நம்ம இப்போ இருக்கிற இடம் சான் ஃப்ரான்சிஸ்கோ. எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கா.. நம்ம இந்தியால இருந்து அலேக்கா பறந்து வந்து முதல்ல வந்திறங்கின இடம் இது தான். அப்போ காட்டுத்தீ காரணமா ஊரே ரணகளமா இருந்ததால பக்கத்து ஊரான லாஸ் ஏஞ்சல்ஸ் போயிட்டோம். இப்ப இங்க ஊர் சகஜ நிலைமைக்கு வந்தாச்சு. நாமளும் சுத்திப் பாக்க ரெடி ஆகியாச்சு.
என்ன சிட்டூஸ் பறக்கலாமா?
கெட்டியா பிடிச்சுக்கோங்க..
கண்ணத் திறந்து நகரும் மேகங்களையும் வானத்த கிழிக்கும் காத்தையும் நீங்க பார்த்து ரசிக்கறதுக்காக கண்ணாடி காகிள்ஸ் ( fly Goggles) வாங்கியிருக்கேன். ஆளுக்கொண்ணு போட்டுக்கிட்டு விர்ர்ர்ர்ர்ர்ண்ண்ணு பறந்து தெறிக்க விடுவோமா… விடு ஜூட்…
குட்டீஸ் இதோ கீழ பாருங்க நாம சான் ப்ரான்சிஸ்கோ வந்தாச்சு..
யப்பப்பா செம குளிர்ல.. உங்கள மாதிரி மனுஷங்களுக்கு தான் ஜாலியா ஸ்வெட்டர் எல்லாம்..
எனக்கு என்னோட சிறகுகள் தான் குளிருக்கு ஸ்வெட்டர், மழைக்கு குடை, வெயிலுக்கு இதம்.. எங்களுக்காக இயற்கை தந்த ஒரு சின்ன பரிசு. சரி.. இப்போ பத்திரமா கீழ இறங்கிட்டீங்களா.. ரெடியா.
முதல்ல நாம சான் ப்ரான்சிஸ்கோல பார்க்கப்போற இடம் ம்யூர் வுட்ஸ் பூங்கா..
ம்யூர் ஒரு வகையான மரம். ரொம்ப ரொம்ப உயரமான மரமும் கூட. சொல்லப்போனா, உலகிலேயே உயரமான மரங்களில் ரெட்ம்யூர்க்கு தனி இடமுண்டு. அப்படிப்பட்ட ரெட்ம்யூர் மரங்கள் அதிகமா காணப்படற இடம் சான் ப்ரான்சிஸ்கோ. மரங்கள் அடர்ந்த பகுதிய மக்கள் வந்து போகிறதுக்கு ஏத்த மாதிரி பூங்காவாக்கி அழகிய நடை பாதைகள் இங்கே அமைக்கப்பட்டிருக்கு.
ப்ளானட் ஆஃப் தி ஏப்ஸ் படம் பார்த்திருப்பீங்களே குட்டீஸ். அந்த படத்துல கதை நாயகனான குரங்கு இந்த மரங்களுக்கு மேல ஏறி நகரத்த பார்க்கிறது போல காட்சி கூட அமைச்சிருப்பாங்க..
இந்த அடர்ந்த உயரமான மரங்கள் ஊடே நடக்கிறது மட்டுமில்ல, தனக்கு கிடைச்ச கொஞ்ச இடைவெளில இந்த மரங்களுக்குள்ள நுழையப் பார்க்கிறது போலப் படரும் சூரிய ஒளி, நிலவொளி எல்லாம் கொள்ளை அழகு.
கோடைக்காலம் குளிர் காலம் வசந்த காலம்ண்ணு எல்லா நேரத்துலயும் ரொம்ப அழகாயிருக்கும் இந்த மரங்கள்!
என்ன குட்டீஸ் அண்ணாந்து பாத்து பாத்து கழுத்து வலிக்குதா .. அப்படியே அந்த மரத்தடில கொஞ்சம் இளைபாறிக்கிட்டே அடுத்த நாம போகப்போற இடத்தப்பத்தி கேளுங்க..
அடுத்த இடம் ஒரு மாயாஜால மந்திர இடம்..
இந்த இடத்துல இருக்கிற அபூர்வ சக்தி, நம்மள தலைகால் புரியாம செஞ்சிடும்..
என்ன டக்குனு கழுத்து வலி சரியாகி டபுக்குன்னு எழுந்துட்டீங்க!! இதே உற்சாகத்தோட மாயாஜால இடத்துக்கு போகலாமா..
இதோ வந்தாச்சு மிஸ்டிரி ஸ்பாட் ( மந்திர இடம்)
சாண்டாக்ரூஸ் நகரத்தில் சாண்டா க்ரூஸ் மலைத்தொடர்ச்சிகள்ல, ம்யூர் காட்டுக்கு மத்தியில் ஓக் மரங்கள் அடர்ந்த பகுதில அமைஞ்சிருக்க இந்த இடத்துக்கு பின்னால ஒரு குட்டி கதை இருக்கு.
1939 வாக்குல சாண்டா க்ரூஸ் நகரத்தில் வாழ்ந்தவர் ஜார்ஜ் ப்ராத்தர். ஒருமுறை இந்த மலைக்காட்டுப் பகுதியில நடைபயணம் வந்த போது குறிப்பிட்ட இந்த இடத்தில தலை சுத்தற மாதிரியும், உயரத்துக்கும் ஆழத்துக்கும் வித்தியாசம் தெரியாம மூளையும் கண்களும் தடுமாறினத உணர்ந்தாரு. இது என்னன்னு ஆராய்ச்சி பண்ண அவர், இந்த இடம் புவியீர்ப்பு மலைப்பகுதி அதாவது க்ராவிட்டி ஹில் அப்படிங்கறத கண்டுபிடிச்சு, இந்த சுவாரஸ்யத்த எல்லாருக்கும் பிரபல படுத்துற வகையில இந்த மலைப்பகுதிய வாங்க இங்க சின்னதா ஒரு வீடு கட்டி அத பொது மக்கள் பார்வைக்கு காட்சி படுத்தினார்
மலைகளும் காடுகளும் மேடுகளுமாக அமைந்த இந்த குட்டிப் பகுதிக்குள்ள இயற்பியலோட அடிப்படை விதிகள் 100க்கு 35 மார்க்கு கூட வாங்காம ஃபெயில் ஆகிடும்.
இந்த சின்ன இடத்துக்குள்ள நாம நுழைஞ்சதுமே நாம நின்னுக்கிட்டே இருந்தாலும் சாய்வது போலவும் லேசா சாய்ஞ்சாலே தலைகீழ தொங்குறது போலவும் ஒரு ப்ரமிப்ப ஏற்படுத்தும் மூளை. இதுக்கு பேரு ஆப்டிக்கல் இல்யூஷன்.
எந்தப் பிடிமானமும் இல்லாமல் பறக்குற மாதிரி சாய்கிற மாதிரி பல வேறு கோணங்கள உணர வைக்கிற நம் மூளை நம்மளயும் குழப்பி அதுவும் குழம்பும். அதனால தானோ என்னவோ இந்த இடத்துக்கு மிஸ்டிரி ஸ்பாட்ன்னு பேர் வெச்சிருக்காங்க!
எது எல்லை, எது ஆழம் உயரம்ன்னு இயல்பா உணரக்கூடிய மனித மூளை, இயற்கையாகவே அதிகமான புவியீர்ப்பு மற்றும் மின்காந்த அலைகள் எக்கசக்கமா இருக்கிற இந்த இடத்தோட அமைப்புல ஒரு நிமிஷம் அரண்டு போயிடும். இன்னொரு சிறப்பு இங்க காம்பஸ் வேலை செய்யாது 🙂
என்ன குட்டீஸ்..
தலை சுத்துதா … இந்தாங்க தண்ணி குடிங்க..
பாட்டில்ல இருந்து தண்ணிய வாய்க்குள்ள ஊத்தாமா இப்படி சட்டை மேல எல்லாம் ஊத்தினா எப்படி.. ஷேம் ஷேம்! ஹாஹாஹா.. பாத்தீங்களா மாயாஜால இடம் அதோட வேலைய காட்டிருச்சு. இங்க நின்னுக்கிட்டு தண்ணி குடிக்கிறதும் தலைக்கீழ கொட்டுறதும் ஒண்ணுதான் 🙂
இன்னும் இந்த மாதிரி இங்க நிறைய எக்ஸ்ப்ரிமெண்ட் பண்ணலாம்.. அதுக்குள்ள நான் ம்யூர் மரத்து உச்சி மேல ஒருக்கா பறந்துட்டு வரேன்.. டாட்டா…