ஜூலை 30-ந் தேதி இந்தியாவின் முதல் பெண் டாக்டர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாள்.

446px Muthulakshmi Reddy ca 1912

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1886-ம் ஆண்டு பிறந்த அவர், திண்ணை பள்ளியில் படித்தார். பெண் கல்விக்கு எதிரான அந்த காலத்தில் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் சேர்ந்து படித்தார். அவருடைய தாயார் சந்திரம்மாள் நோயால் சிரமப்பட்டு இறந்தார். இதனை நேரில் பார்த்ததால் எப்படியும் மருத்துவர் ஆக வேண்டும். நம்முடைய தாயை போன்று நோயால் அவதிப்படும் ஏழைகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் சிறு வயது முதலே அவருக்குள் ஆணிவேராக வளர்ந்தது.

1907-ம் ஆண்டு சென்னை மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த இவர், படிப்பில் சிறந்து விளங்கியதால் பல்வேறு சான்றிதழ்களையும், தங்க பதக்கங்களையும் பெற்றார்.

கர்னல் ஜிப்போர்டு என்ற அறுவை சிகிச்சைத்துறை பேராசிரியர், தன்னுடைய வகுப்பில் மாணவிகளை உட்கார அனுமதிப்பது இல்லை. ஆனால் அறுவை சிகிச்சை பாடத்தில் முத்துலட்சுமி தங்கப்பதக்கம் பெற்ற பிறகு, மனம் மாறிய பேராசிரியர், பெண்களுக்கு உரிய மரியாதை அளிக்கும் வகையில் தனது வகுப்பில் பெண்களும் உட்காரலாம் என்று கூறினார்.

1912-ம் ஆண்டு முத்துலட்சுமி, இந்தியாவின் முதல் பெண் மருத்துவராக பட்டம் பெற்றபோது, ‘சென்னை மருத்துவக்கல்லூரி வரலாற்றில் இது பொன்னான நாள்’ என்று எழுதினார் கர்னல் ஜிப்போர்டு. பின்னர் எழும்பூர் மருத்துவமனையில் முதல் பெண் மருத்துவராக பணியில் சேர்ந்தார். லண்டனில் உள்ள செல்சியா மருத்துவமனையில் தாய்சேய் மருத்துவம் மற்றும் புற்றுநோய் பற்றியும் ஆராய்ச்சிகள் செய்தார்.

1926-ஆம் ஆண்டு 43 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட அகில உலகப் பெண்கள் மாநாடு, பிரான்சு நாட்டுத் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. அதில் இந்தியாவின் சார்பில் முத்துலட்சுமி ரெட்டி கலந்து கொண்டார். அப்போது அவர் நிகழ்த்திய சொற்பொழிவில், ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் முன்னேற வேண்டும். பெண்களை அடிமைகளாக நடத்தும் வழக்கம் ஒழிய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் என்னும் பெருமையைப் பெற்றவர்.

சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் என்னும் பெருமையும் இவருக்கு உண்டு.

அன்றைய சென்னை மாகாண சட்டசபைக்கு முத்துலட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் மூலம் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமை பெற்றார்.

1925-ஆம் ஆண்டு சட்டசபைத் துணைத்தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பதவியில் இருந்த ஐந்தாண்டுளில் சில புரட்சி சட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றினார். அவற்றில், தேவதாசி முறை ஒழிப்பு, இருதார தடைச் சட்டம்,பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், பால்ய விவாகங்களை தடை செய்யும் சட்டம் போன்ற சில குறிப்பிடத்தக்கவை.

அனாதையாக்கப்பட்ட குழந்தைகளை வளர்த்து அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க உருவானதே அவ்வை இல்லம் அடையாறில் அமைந்துள்ள இதனை அமைத்தவர் முத்துலட்சுமி.

சென்னையில் புற்றுநோய் மருத்துவமனை அமைக்க பலவிதங்களிலும் நிதி திரட்டினார். இன்று புற்று நோயாளிகளுக்குப் புகலிடமாக விளங்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்குப் பிரதமர் நேரு 1952-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அடிக்கல் நாட்டினார்.

முத்துலட்சுமியின் சேவைகளுக்காக மத்திய அரசு 1956 இல் பத்ம பூஷண் விருது கொடுத்து கௌரவித்தது.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *