அண்ணா அக்கா கொஞ்சம் நில்லுங்க!
குட்டிப் பசங்க நாங்க சொல்லுறத கேளுங்க!
அத்தை மாமா கொஞ்சம் கேளுங்க!
முகக்கவசம் அதை முறையா போடுங்க!
இத்தனூண்டு கிருமியாம்! ஆனா
ஆளத் தூக்கும் உயிர் கொல்லியாம்
சித்த நேரத்துல பரவுதாம் – தினம்
கொத்து கொத்தா உயிர் போகுதாம்!
உலகம் பூரா நடுங்குதாம்- கையப்
பிசைஞ்சுக்கிட்டு கிடக்குதாம்!
ஒரு சின்ன வழி இருக்குதாம்- அதுவும்
நாம நினைச்சா தடுக்க முடியுமாம்!
கூட்டத்தைத் தவிர்க்கணுமாம்! -முடிஞ்சவரைக்கும்
வீட்டுக்குள்ள இருக்கணுமாம்!
கடைத்தெருவுக்குப் போனாலும்
முகக்கவசம் வேணுமாம்! -வெறும்
பேச்சுக்காக இல்லாம
மூக்கைச் சுத்திப் போடணுமாம்!
முகக்கவசத்த முறையா
நாம போட்டுப்பழகனுமாம்!
நாலுபக்கம் போகணும்ன்னா
நாப்பது தரம் கைக் கழுவணுமாம்
இது ரெண்டு மட்டும் செஞ்சாலே
ஓடிப்போகும் அந்தக் கிருமியாம்!
கிடுகிடுன்னு ஏறிப் பரவும்
ரெண்டாவது அலையைப்போல
எங்க சின்னப் பசங்க ஏக்கமும்
நாளுக்கு நாள் ஏறுதுங்க
எங்க மனசுக்குள்ள பறக்கும்
பட்டாம்பூச்சியும் கவசம் கேக்குதுங்க
பள்ளிக்கூடம் திறக்கணும் -பழையபடி
தெருவுல பாண்டியாட்டம் ஆடணும்
வகுப்பு பென்ச்சுல கிறுக்கணும்-மதியம்
நண்பன் வீட்டுச்சோறு பகிர்ந்து சாப்பிடணும்
முட்டி மோதி படிக்கணும்-அப்பப்போ
சுட்டித்தனம் பண்ணனும்!
அதுக்கு அடுத்த வருஷமாச்சும்
பள்ளிக்கூடம் திறக்கணும்
பெரியவங்க நீங்க எல்லாரும்
சமூக இடைவெளி கடைப்பிடிக்கணும்!
முகக்கவசம் போடுங்க! -முறையா
கைகளைக் கழுவுங்க!
ஒண்ணா நாம நின்னோம்ன்னா
ஓடிப்போகும் கிருமிங்க! -உங்களால
திரும்ப பளிச்சுன்னு ஆகும்
எங்க பள்ளிப்பருவமும்ங்க!