துருவன் இராட்சதப் பல்லியிடம் பணிவுடன் பேசிக் கொண்டிருந்த அந்த சமயத்தில் அபூர்வன் வருணனை அழைத்துக் கொண்டு விரைவாக வந்த வழியே முன்னேறினான்.

மரப்பொந்தின் வெளியே காத்துக் கொண்டிருந்த அருணன் தனது சகோதரனைக் கண்டதும் மகிழ்ச்சியுடன் ஓடி வந்து அணைத்துக் கொண்டான்.

துருவன் சொன்னபடி அருணன் தங்களது கூட்டத்தினரிடம் போக மறுத்து விட்டான். மயிலும், கிளியும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், “நான் வருணனுடன் சேர்ந்து தான் நாங்கள் தங்கியிருக்கும் இடத்துக்குப் போவேன். அவன் நிச்சயமாக ஏதோ பெரிய ஆபத்தில் மாட்டியிருப்பதாக என்னுடைய உள்ளுணர்வு சொல்கிறது. அங்கே போய் என்னால் நிம்மதியாக இருக்க முடியாது. இங்கேயே நாம் காத்திருக்கலாம்” என்று சொல்லி விட்டுத் தாங்கள் வழிபடும் வனதேவதையான கொற்றவையை மனதில் நினைத்துத் துதிகளைச் சொல்லிக் கொண்டு அங்கேயே காத்திருந்தான்.

“வருணா, எங்கே தான்  போனே அப்படி? பெரிய ஆபத்தில் மாட்டிக் கிட்டயா? துருவன் அண்ணா மாத்திரம் நமக்கு உதவி செய்ய வரலைன்னா என்ன ஆயிருக்கும்? பழத்துக்கு ஆசைப்பட்டு இப்படி உயிருக்கே ஆபத்தாயிடுச்சு பாரு. உன்னைக் காணாமல் நம்ம கூட்டத்துல எல்லோரும் தவிச்சுக்கிட்டு இருக்காங்க. ஆமாம், நம்ம குரங்குகள் ரெண்டையும் காணோமே? உன் கூடத் தானே வந்தாங்க இல்லையா?” என்று அடுத்தடுத்துப் பொறுமையில்லாமல் கேள்விகளைக் கேட்டான்.

“ஆமாம் அருணா, துருவன் அண்ணா தான் வந்து என்னைப் பெரிய ஆபத்தில் இருந்து காப்பாத்தினார். அவரு அங்கே வர்ற வரைக்கும் எனக்குத் தப்பிச்சு வருவேன்னு நம்பிக்கையே இல்லை. அந்தக் குரங்குகளை துருவன் அண்ணா வரும்போது கூட்டிட்டு வரேன்னு சொல்லிருக்காரு” என்று அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே அபூர்வன் குறுக்கிட்டான்.

“மயிலண்ணா, நீங்களும் கிள்ளியுமாக இவர்கள் இரண்டு பேரையும் அந்தக் கலைஞர்களிடம் சேர்த்துவிட்டு இங்கே வாருங்கள். நான் விரைந்து வந்த வழியே திரும்பிப் போய் துருவனுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்கிறேன். நீங்கள் இரண்டு பேரும் திரும்பி வந்ததுக்கு அப்புறமும் நாங்க வரலைன்னா  நீங்களும் கிளம்பி இந்தப் பொந்தின் வழியாக வாங்க. நாகங்களின் தேசம் இதன் முடிவில் இருக்கு. அந்த நாகங்களின் குகையில் இருந்து தான் வருணனைக் காப்பாத்தினோம். நான் வரேன்” என்று அவர்களிடம் சொல்லி விட்டு அபூர்வன் விரைந்து செல்ல, வருணன் தனது சகோதரனிடம் நாகங்களின் குகையைப் பற்றிக் கூறிக் கொண்டே நடந்து சென்றான்.

அவன் கூறிய தகவல்களைக் கேட்ட மயிலுக்கு நல்ல கோபம் வந்தது. மனதிலேயே அந்தப் பாம்புகளுடன் சண்டை போடுவதாக எண்ணிக் கொண்டு சிலிர்த்து நின்றது.

“மயிலண்ணா, உங்கள் கோபம் எனக்குப் புரிகிறது.‌ நாம் இந்தச் சிறுவர்களை பத்திரமாக அவர்களுடைய இடத்தில் சேர்த்து விட்டுத் திரும்பியதும்   மரப்பொந்தில் நுழைந்து நாகதேசத்தைத் தேடிப் போகலாம். உங்கள் ஆசைப்படி நாகங்களைத் தேடித் தேடிச் சண்டையிடலாம்” என்று சொல்லிக் கிளியும், மயிலின் மனதைத் தேற்றியது.

அங்கே நாகதேசத்தில் அந்தக் குகையில், துருவனின் பணிவான சொற்களைக் கேட்டு இராட்சதப் பல்லியின் மனதில் துருவனைப் பற்றிய நல்ல எண்ணம் எழுந்தது.

“நல்ல துணிவும் அதே சமயம் தெளிவான சிந்தனையும், வயதுக்கு மீறிய அறிவுத் திறனுடனும் இருக்கும் நீ யார்? என்ன வேலையாகப் போய்க் கொண்டிருக்கிறாய்? அப்படி‌ என்ன முக்கியமான வேலை உனக்கு இந்த வயதில்?” என்று கம்பீரமாக துருவனைப் பார்த்துக் கேட்டது.

“எனது பெயர் துருவன். இந்த வனத்தின் மறுபக்கம் உள்ள இரத்தினபுரி தேசத்தைச் சேர்ந்த ஒரு விவசாயியின் மகன். எங்களது நாட்டின் இளவரசி ஐயையை இந்த வனத்தின் அருகேயுள்ள மலைக்கோட்டையில் வசிக்கும் மாயாவி சில ஆண்டுகளுக்கு முன்பு சிறைப்பிடித்துக் கொண்டு வந்து விட்டான். அவனிடமிருந்து எங்கள் நாட்டின் இளவரசியை விடுவிப்பதற்காகப் போய்க் கொண்டிருக்கிறேன். தயை கூர்ந்து நான் எனது வேலையை முடித்து விட்டு வரும் வரை எனக்கு அவகாசம் அளியுங்கள். என்னைத் தற்போது விட்டு விடுங்கள்” என்று சொல்லி விட்டு அந்தப் பல்லியின் பதிலுக்காகக் காத்து நின்றான்.

துருவனின் சொற்களைக் கேட்ட இராட்சதப் பல்லிக்கு ஆச்சரியமோ ஆச்சர்யம். தன்னருகில் நின்ற நாகங்களின் அரசரான மலைப்பாம்பை அர்த்தத்துடன் பார்த்தார் அந்த குரு.

“என்ன மலைக்கோட்டை மாயாவியை‌ எதிர்க்கப் போகிறாயா சிறுவனே? அவன் எவ்வளவு வலிமை வாய்ந்தவன் என்று உனக்குத் தெரியுமா? நல்ல வலிமையான உடலையும், கூர்மையான புத்தியையும் கொண்டவன். மாயமந்திரங்களைக் கற்றவன். அவனை எதிர்த்து நின்று உன்னால் யுத்தம் செய்ய முடியுமா? இது என்ன சிறுபிள்ளை விளையாட்டு என்று நினைத்தாயா?” என்று வியப்புடன் கேட்டது அந்த இராட்சதப் பல்லி.

“என்னால் முடியும்‌ என்ற நம்பிக்கையுடன் தான் நான் கிளம்பி இருக்கிறேன். எனது பெற்றோர் மற்றும் அரசர், அரசியின் ஆசிகளும், எனது குருவான கௌதம ரிஷி எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கும் வித்தைகளும் எனக்குத் துணையாக நிற்கும். அவற்றைத் தவிர எனது நண்பர்கள் மயில், கிளி, இந்த அணில் மற்றும் சித்திரக்குள்ளன் அபூர்வன் இவர்களுடைய அன்பும், நட்பும் என்னுடைய ஆயுதங்களாக எனக்கு உதவி செய்யப் போகின்றன” என்று வீரத்துடன் முழங்கினான் துருவன்.

ஆச்சர்யத்தில் அங்கிருந்தவர்கள் வாயடைத்துப் போனார்கள். அந்த இராட்தப்பல்லி, நாகங்களின் அரசரைத் தனியே அழைத்துப் போய்ப் பேசிவிட்டு ‌மீண்டும் துருவன் எதிரே வந்து நின்றது.

“சிறுவனே! உனது வேண்டுகோளை‌‌ ஏற்று உன்னை இப்போது நாங்கள் விட்டு விடுகிறோம். அதற்குப் பிரதிபலனாக நீ எங்களுக்கு ஓர் உதவி செய்ய வேண்டும்” என்றது அந்தப் பல்லி.

“மனமார்ந்த நன்றி. என்ன உதவியென்று தெளிவாகச் சொல்லுங்கள். செய்வதற்கு நிச்சயமாக முயற்சி செய்கிறேன்” என்று துருவன் சொல்ல, நாகங்களின் அரசனான மலைப்பாம்பு முன்னால் வந்து இப்போது துருவனிடம் பேச ஆரம்பித்தது.

“சிறுவனே, நீ செய்ய எண்ணும் செயல் அரிதானது மட்டுமல்ல. சிறப்பானதும் கூட. தன்னலமில்லாத உனது நோக்கம் வெற்றியடைய இறைவனை வேண்டுகிறோம். நீ மலைக்கோட்டை மாயாவியை எதிர்த்து யுத்தம் செய்கையில் உனக்குத் தேவையான ஆற்றல் கிட்டட்டும். இந்த நாகதேசத்து நாகங்கள் அனைவரும் உனது வெற்றிக்காக இன்று முதல் சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்கிறோம். நீ உனது செயலில் வெற்றி பெறும் சமயம் எங்களுக்கும் ஓர் உதவி செய்ய வேண்டும். உங்கள் இளவரசி மட்டுமல்லாமல் எங்கள் இளவரசனான நாககுமாரனும் இப்போது மலைக்கோட்டை மாயாவியின் பிடியில் தான் இருக்கிறான்” என்றார். அவர் வருத்தத்துடன் பேசிய வார்த்தைகளைக் கேட்டு துருவன் மிகுந்த ஆச்சர்யம் அடைந்தான்.

“அப்படியா, இது எப்போது நடந்தது?” என்று துருவன் கேட்டான்.

“இந்த நிகழ்ச்சி சென்ற மாதம் தான் நடந்தது. எங்களது இளவரசர் மானுட உருவம் எடுத்து எங்களுடைய தேசத்தில் இருந்து வெளியே சென்று வனத்தில் விளையாடிக் கொண்டிருந்த சமயம் மாயாவி அவரைப் பார்த்து சிறைப்பிடித்து விட்டான். நாங்கள் எவ்வளவோ கெஞ்சிக் கதறியும் அவரை விடுதலை செய்ய மறுத்து விட்டான்” என்றார் அந்த அரசர்.

“நீங்கள் அதன்பிறகு மீண்டும் முயற்சி செய்யவில்லையா?” என்று துருவன் கேட்டான்.

“மூன்று முறை சென்று அவனுடன் போர் செய்து விட்டுத் தோற்றுப் போய்த் திரும்பினோம். மூன்றாவது முறை திரும்பின போது தான் அவன் எங்களிடம் நூறு மனித சிறுவர்களை பலி கொடுத்து விட்டு வரச் சொன்னதாக அந்த மாயாவியுடைய தூதுவன் எங்களிடம் சொன்னான்” என்றார்.

“எங்களுக்கு இந்த யோசனை பிடிக்கவில்லை. எப்போதும் எங்கள் இனத்தவர் வேண்டுமென்று யாரையும் துன்புறுத்துவதில்லை. எங்கள் வழியில் குறுக்கிடுபவர்களையும் எங்களைத் தாக்குபவர்களையும் தான் நாங்கள் தாக்குகிறோம். மலைப்பாம்புகள் மட்டும் பசி தீர்த்துக் கொள்ள இரையை விழுங்குவதுண்டு. அதனால் இது போன்று சின்னஞ்சிறு குழந்தைகளை பலி தரும் செயலை  எங்கள் மனம் ஏற்காமல் தவிர்த்து வந்தோம். ஆனால் இளவரசரைப் பிரிந்து அரசியார் தவிப்பதைக் காண சகிக்காமல் முதன்முறையாக ஒரு சிறுவனைப் பிடித்துக் கொண்டு வந்தோம். அந்தப் பலியையும் நீ தடுத்து விட்டாய். நடந்தது நல்லதாகவே நடந்தது. நீயே எங்கள் இளவரசனையும் விடுவித்து வருவாயென்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று சொல்லி முடித்தார்.

அதற்குள் அபூர்வனும் அங்கு வந்து சேர்ந்து விட அவர்களுடைய கதையைக் கேட்டு அவனும் வியப்படைந்தான்.

“இங்கிருந்து கிளம்புகிறோம். நாங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் எங்கள் இளவரசி மற்றும் உங்கள் இளவரசருக்கும் ஆபத்து அதிகரித்துக் கொண்டே போகிறது” என்று சொல்லி விடை பெற்றான்.

“இந்தக் குரங்குகளையும் சேர்த்து அழைத்துச் செல்லுங்கள். அந்தச் சிறுவனைக் காப்பாற்ற இவை முயற்சி செய்ததால் தான் இவற்றையும் சிறைப் பிடித்தோம். எங்கள் இனத்தவர் உங்கள் உதவிக்காக வனத்தில் இருந்து வெளியேறி மலை மேல் ஏறுவார்கள். இறுதி யுத்தத்தில் உங்களுக்கு உதவி செய்வார்கள். நானும் இறுதி யுத்தத்தில் வந்து கலந்து கொள்வேன். இந்த மலைக்கோட்டை மாயாவியிடம் இருந்து அப்பாவிச் சிறுவர்களைக் காப்பாற்றும் சிறப்பான பணியில் நாங்களும் உங்களுக்கு முடிந்த அளவு முயற்சி செய்வோம்” என்று சொல்லி ஆசிகளை வழங்கினார்.

அதற்குள் மயிலும் கிளியும் கூட அங்கு வந்து சேர்ந்தன. மயில் நாகங்களைக் கண்டு சினமடைய, நாகங்களும் மயிலைக் கண்டு சீறின.

“மயிலண்ணா, கோபம் வேண்டாம். இந்த நாகங்கள் அனைத்துமே நமது நண்பர்கள். அனாவசியமாகப் பகைமை காட்ட வேண்டாம்” என்று துருவன் எடுத்துச் சொல்ல, மயிலும் அமைதி அடைந்தது.

தாங்கள் வந்த வழியே மீண்டும் சென்று மரப்பொந்தில் இருந்து வெளியே வந்த துருவனின் குழு, அந்தக் கலைஞர்களின் இருப்பிடத்தை அடைந்தது. ஏற்கனவே அருணன், வருணன் மூலம் அங்கு நடந்தவற்றை அறிந்து கொண்ட அந்தக் கலைஞர்கள் மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்து துருவனையும் அவனது நண்பர்களையும் வரவேற்றனர்.

“துருவா, உனது உதவியால் எங்கள் குழந்தையின் வயிற்று நோவைப் போக்கியது மட்டுமல்லாமல், வருணனையும் பேராபத்தில் இருந்து காப்பாற்றி இருக்கிறாய்! உனக்கு நாங்கள் என்ன கைம்மாறு செய்யப் போகிறோமோ?” என்று அந்தக் கலைஞர் குழுவின் தலைவர் துருவனுக்கு நன்றி கூறினார்.

“நான் உங்களிடம் இப்போது ஒரு பெரிய உதவி கேட்கப் போகிறேன்” என்று துருவன் அவரிடம் பேச, அவரும்‌ துருவனை வியந்து போய்ப் பார்த்தார்.

“என்ன‌ உதவி வேண்டும்? சொல் துருவா. எங்களால் முடிந்ததை நிச்சயமாக செய்கிறோம்” என்றார் அவர்.

“என்னையும் எனது நண்பர்களையும் சேர்த்து உங்களுடன் மலைக்கோட்டைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்” என்றான்.

“ஏதாவது வித்தை தெரிந்தவர்களைத் தானே மேலே செல்ல அனுமதிப்பார்கள். நான் உங்களை என்ன சொல்லி அறிமுகம் செய்வேன்? பொய்யாகப் புனைந்து ஏதாவது சொன்னால் மாயாவி கண்டுபிடித்து விடுவான். அவன் அறிவுத்திறன் மிக்கவன்” என்று அச்சத்துடன் பேசினார் அவர்.

தனது குழுவினரின் உயிருக்கு இடையூறு விளைவிக்கும் எந்தச் செயலையும் ஆற்ற அவரது மனம் விழையவில்லை. அவருடைய பேச்சில் அவருடைய தலைமைப் பதவியில் இருந்த பொறுப்பு நன்றாகத் தெரிந்தது.

“அதைப்பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். என்னால் குழலூத முடியும். எனது குழலிசைக்கு ஏற்றபடி எனது நண்பர்கள் நடனமாடுவார்கள். இந்த அபூர்வன் வேடிக்கையான சில செயல்களைச் செய்து அனைவரையும் சிரிக்க வைப்பான். தனது மந்திர ஜாலங்களால் காண்பவரின் மனங்களைக் கவர வல்லவன்” என்று சொல்லி விட்டு, துருவன் தனது இடையில் இருந்த குழலை எடுத்து இன்னிசை மழை பொழிய வைத்தான்.

-தொடரும்,

( ஹலோ குட்டீஸ், எப்படி இருக்கீங்க எல்லாரும்? தேர்வுகள் எல்லாம் முடிஞ்சு அடுத்த வகுப்புக்குப் போயாச்சு. இந்தக் கல்வியாண்டிலாவது பள்ளிகளைத் திறந்தால் உங்களுடைய நண்பர்களை எல்லாரையும் மொத்தமாப் பாக்கலாம் இல்லையா? துருவன் அந்தக் கழைக்கூத்தாடிகளுடன் சேர்ந்து மலைக்கோட்டையை அடைவதற்கு அந்தத் தலைவர் உதவி செய்வாரான்னு தெரிஞ்சுக்கத் தொடர்ந்து படியுங்க. விரைவில் முடியப் போகுது)

உங்கள் அனைவருக்கும் பேரன்பும், ஆசிகளும், வாழ்த்துகளும் பூஞ்சிட்டுக் குழுவினருடன் சேர்ந்து அள்ளி வழங்குகிறேன்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments